Last Updated : 11 Nov, 2023 06:03 AM

 

Published : 11 Nov 2023 06:03 AM
Last Updated : 11 Nov 2023 06:03 AM

இயற்கையின் பேழையிலிருந்து! - 9: மலபார் புனுகுப்பூனை எனும் மர்மம்

மலபார் புனுகு பூனை (Malabar Civet)

இந்தியாவில் உள்ள பாலூட்டிகளிலேயே மிகவும் மர்மமான உயிரினம் ஒன்று உண்டென்றால் அது மலபார் புனுகுப்பூனையாகத்தான் இருக்க முடியும். முதலில் புனுகுப்பூனை வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். உடல் எடை 5 முதல் 20 கிலோ வரை உள்ள பாலூட்டிகளைச் சிறிய பாலூட்டிகள் என்றும் அவற்றில் ஊனுண்ணிகளைச் சிறிய ஊனுண்ணிகள் என்றும் அறிவியலாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் ஒன்றான விவரிடே (Viverridae) என்கிற குடும்பத்தைச் சேர்ந்தவைதான் புனுகுப்பூனையும் மரநாயும். இந்தியாவில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பாலூட்டிகள் உள்ளன. இவற்றில் நான்கு தென்னிந்தியாவில் தென்படுகின்றன. அவை புனுகுப்பூனை, மலபார் புனுகுப்பூனை, மரநாய், பழுப்பு மரநாய்.

பூனையும் இல்லை நாயும் இல்லை: இவற்றின் பொதுப்பெயர்கள் புனுகுப்பூனை, மரநாய் என்று வழங்கப் பட்டாலும் இவை பூனை (Cats), நாய் (Canids) வகைகளைச் சேர்ந்தவை அல்ல. இவை இராவாடிகள். பூச்சி, புழுக்கள், சிறிய பறவைகள், அவற்றின் முட்டை, எலி முதலியவற்றை உணவாகக் கொண்டாலும் பல வகையான பழங்களையும் இவை விரும்பி உண்கின்றன.நாம் மரநாய் என்று சொல்லும் உயிரினம் ஆங்கிலத்தில் Common Palm Civet அல்லது Toddy Cat என்பர். அடர் பழுப்பு நிற உடலிலும், முகத்திலும் வெள்ளைத் திட்டுகள் இருக்கும்.

நன்றாக மரம் ஏறும். இது இந்தியாவின் பல இடங்களில் பரவிக் காணப்படுகிறது. மேற்கு மலைத் தொடர்களின் உயரமான பகுதிகளில் இவை தென்படுவதில்லை. இங்கே Brown Palm Civet எனும் பழுப்பு மரநாய்கள் தென்படுகின்றன. இவை அடர்ந்த மழைக் காடுகளின் மர உச்சிப் பகுதிகளிலேயே அதிகமாக இரை தேடும். இவை மேற்குத் மலைத் தொடர்களில் மட்டுமே இருக்கும் ஓரிடவாழ்வி. புனுகுப்பூனை (Small Indian Civet) இந்தியாவின் பல இடங்களில், பல வகையான வாழிடங்களில் தென்படுகின்றன.

சில வேளைகளில் நகரப்பகுதிகளிலும்கூட இவற்றைக் காணலாம். குப்பையில் போடப்படும் உணவை உட்கொள்ள இவை குப்பைத்தொட்டிகளையும் கழிவையும் தேடி வரும். கரோனா ஊரடங்குக் காலத்தில் கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில் புனுகுப்பூனை ஒன்று சாலையில் திரியும் படம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது நினைவிருக்கலாம். இதை பலர் மலபார் புனுகுப்பூனை என்று தவறாகப் பதிவிட்டிருந்தனர். மலபார் புனுகுப்பூனை மேற்கு மலைத் தொடரின் அடிவாரப் பகுதிகளில் அடர்ந்த காடுகளில் மட்டுமே இருந்ததாகக் குறிப்புகள் சொல்கின்றன.

இவை புனுகுப்பூனையைவிட உருவில் பெரிதாக இருக்கும். இந்த மலபார் புனுகுப்பூனை இந்தியாவின் வட கிழக்குப் பகுதியிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் தென்படும் பெரிய புள்ளிப் புனுகுப்பூனையின் (Large Spotted Civet) உள்ளினமாக (Sub-species) இருக்கலாம் என்று சில வகைப்பாட்டியலாளர்களால் கருதப்படுகிறது. உருவத்தில் இவை ஓரளவு ஒத்திருந்தாலும் இவற்றின் புவிப் பரவலில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. கேரளப் பகுதியை விட்டால் நடுவில் எங்குமே தென்படாமல் இந்தியாவில் அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம் போன்ற இடங்களிலும் மயன்மார், தாய்லாந்து, மலேசியா போன்ற அண்டை நாடுகளிலும்தான் இது தென்படுகிறது.

மரநாய் (Common Palm Civet) படம்: டேவிட் ராஜு

யாரும் கண்டதில்லை! - மலபார் புனுகுப்பூனையை இதுவரை நம்பத்தகுந்த வகையில் யாரும் பார்த்ததில்லை. இவற்றின் பதனிடப்பட்ட தோல்கள் மூலமாகத்தான் இப்படி ஓர் உயிரினம் இருந்தது என்பதே இன்றுவரை அறியப்பட்டு வருகிறது. இதுதான் மலபார் புனுகுப்பூனை என்று முதன்முதலில் வெளியிட்டவர் ஸ்காட்லாந்து ராணுவ வீரரும், பறவை யியலாளருமான லார்ட் ஆர்தர் ஹே. இவரிடமிருந்த பதப்படுத்தப்பட்ட தோலும் மண்டை ஓடும்தான் இந்த உயிரினத்தின் அடிப்படை மாதிரி (Holotype). இதை இவர் 1845இல் ஏசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் எனும் ஆராய்ச்சி அமைப்புக்குத் தந்திருந்தார். பின்னர் அது கொல்கத்தா அருங்காட்சியகத்திற்கும் அங்கிருந்து இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்திற்கும் (ZSI) கொண்டு செல்லப்பட்டது.

இந்தப் பதப்படுத்தப்பட்ட தோல் அவருக்கு எப்படி, எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த உயிரினத்தை 1862இல் அறிவியல் பூர்வமாக விவரித்தவர் புகழ்பெற்ற உயிரியலாளரான எட்வர்ட் பிளித். அவரது குறிப்பில் மோசமான நிலையில்தான் இந்தத் தோல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதையும் சேர்த்து இந்தியாவில் இந்த உயிரினத்தின் ஆறு பதப்படுத்தப்பட்ட தோல்கள் உள்ளன. திருவனந்தபுரம் உயிர்க்காட்சி சாலையில் இருந்து 1907இல் பெறப்பட்ட தோல், பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் தற்போது உள்ளது. சென்னை அருங்காட்சியகத் திலும் மலபார் புனுகுப்பூனையின் தோல் பாடம்செய்து வைக்கப் பட்டுள்ளது. ஆனால், இது எப்போது, எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதற்கான விவரங்கள் இல்லை.

புனுகு பூனை (Small Indian Civet)

மறு கண்டுபிடிப்பு: யாருமே பார்த்திராத நிலையில் 1987இல் கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள எலயூர் கிராமத்தில் மூன்று மலபார் புனுகுப்பூனைகள் இருப்பதாக கேரளத்தில் உள்ள இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனத்தினருக்கு (ZSI-கோழிக்கோடு) தகவல் கிடைத்தது. ஆனால், அவர்கள் அங்கு செல்வதற்குள் அவை இறந்துவிட்டதால் அவற்றின் தோல்கள் மட்டுமே பதப்படுத்தப்பட்டு கோழிக்கோடு ZSI அருங்காட்சியகத்திலும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்திலும் வைக்கப் பட்டுள்ளன. ஆனால், அதில் ஒன்று காணாமல் போய்விட்டது.

இதன் பிறகு கேரளத்திலும் கர்நாடகத்திலும் தானியங்கி கேமரா, பொதுமக்களிடம் நேர்காணல், இரவில் வனப்பகுதிகளில் நடந்து சென்று கண்காணித்தல் போன்ற ஆராய்ச்சிப் பணிகள் 1992 முதல் 2008 வரை நடைபெற்றன. எனினும் மலபார் புனுகுப்பூனையின் படம் கிடைக்கவில்லை. சில இடங்களில் பழங்குடியினர் இவற்றைப் பார்த்ததாகவும், வேறொரு பெயரால் இவை அழைக்கப்படுவதாகவும் தெரியவந்தது. மேலும் 1990இல் நடத்தப்பட்ட தேடுதலில் 1987இல் ஒரு வேட்டையாடியால் பிடிக்கப்பட்ட இரண்டு மலபார் புனுகுப்பூனைகளின் பதனிடப்பட்ட தோல்கள் கிடைத்தன. இவை சரியாகப் பாதுகாக்கப்படாததால் மிகவும் சிதிலமடைந்து வீணாகிவிட்டன.

கண்ணால் பார்த்ததும்... பதப்படுத்தப்பட்ட தோல்களால் மட்டுமே அறியப்பட்ட இந்த உயிரினத்தை ஒரு சிலர் நேரில் பார்த்ததாகவும் பதிவிட்டுள்ளனர். புலி ஆராய்ச்சியாளரான உல்லாஸ் கரந்த் 1975இல் கர்நாடகாவில் குதிரேமூக் தேசியப் பூங்கா பகுதியில் பகலில் சுமார் 10 மீட்டர் இடைவெளியில் ஒரு புனுகுப்பூனையைக் கண்டதாகவும், அது உருவில் பெரியதாக இருந்ததாகவும், அது மலபார் புனுகுப் பூனையாக இருக்கலாம் என்றும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். ஆனால், இதை அவர் பதிப்பித்தது 1986இல்.

மறுகண்டுபிடிப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளும், சில இயற்கையியலாளர்களிடையே மலபார் புனுகுப்பூனை குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. இதன் விளைவாக 2010வரை ஒரு சிலர் உருவில் பெரிய புனுகுப்பூனையைக் கண்டதாகச்சொன்னாலும், மலபார் புனுகுப் பூனைக்கு உரிய அங்க அடை யாளங்களை (இவற்றுக்கு அடர்ந்த கரிய பிடரி மயிர் மேல்கழுத்திலிருந்து வால்வரை இருக்கும், மேலும் கழுத்தில் மூன்று கறுப்பு வரிகள் இருக்கும்) தெளிவாகக் கண்டு விவரிக்கும் அளவிற்குப் பார்த்ததாகத் தெரியவில்லை.

மலபார் புனுகுப்பூனை அற்றுப்போய்விட்டதா? - மலபார் புனுகுப்பூனை இதுவரையில் இருப்பதாக அறியப் படுவது பெரும்பாலும் மேற்கு மலைத்தொடர்களின் மேற்குப் பக்கமே.அதாவது கேரளம், கர்நாடகக் கடற்கரையோரமாக இருக்கும் பகுதிகளில்தான். அந்தப் பகுதிகளில் ஒரு காலத்தில் மக்கள்தொகை குறைவாக இருந்தபோது, மலபார் புனுகுப்பூனையின் வாழிடமான அடர்ந்த காட்டுப்பகுதிகள் இருந்திருக்கலாம். ஆனால் மக்கள்தொகை பெருகிய போது காடழிப்பு, வேட்டை முதலிய காரணங்களால் இவை எண்ணிக்கையில் குறைந்து முற்றிலும் அற்றுப்போயிருக்கலாம்.

இவற்றைப் பற்றிய தகவல்கள் அதிகம் இல்லாத பட்சத்தில் இவற்றின் முக்கியமான வாழிடம் என நாம் எண்ணிக்கொண்டிருக்கும் பகுதிகள்கூட தவறான ஒன்றாக இருக்கலாம். ஒருவேளை அவை இருக்கும் இடத்தை விட்டுவிட்டு, இல்லாத இடத்தில் தேடுதல் நடத்தப்பட்டிருக்கலாம். இப்படி எந்த முடிவுக்குமே வர முடியாத நிலையில் 2010ஆம் ஆண்டு இரவாடி உயிரினங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் இரண்டு காட்டுயிரியலாளர்கள் மலபார் புனுகுப்பூனை எனும் ஓர் இனமே இல்லை என அதிரடியாகத் தெரிவித்தனர். அவர்கள் சொன்னதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x