Last Updated : 04 Nov, 2023 06:03 AM

 

Published : 04 Nov 2023 06:03 AM
Last Updated : 04 Nov 2023 06:03 AM

இயற்கையின் பேழையிலிருந்து! - 8: சிவிங்கிப்புலி இப்போது இந்தியாவிற்குத் தேவையா?

ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்த ஆசிய சிவிங்கிப்புலி 1960வாக்கில் முற்றிலும் அற்றுப்போனது. தற்போது இவை ஈரானில் மட்டும் 40க்கும் குறைவான எண்ணிக்கையில் அழிவின் விளிம்பில் உள்ளன. அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், அவற்றை இந்தியாவுக்குத் தர ஈரான் தயக்கம் காட்டியது.

மேலும், இந்தியாவில் உள்ள ஆசிய சிங்கங்களை (அவை இங்கே நல்ல எண்ணிக்கையில் இருந்தும்கூட) பதிலுக்குக் கேட்டபோது, இந்தியா தர மறுத்துவிட்டது. ஆகவே இப்போது ஆப்ரிக்க சிவிங்கிப்புலிகள் இந்தியாவிற்கு ‘இறக்குமதி’ செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆசிய சிவிங்கிப்புலிகளின் வாழிடங்களான புல்வெளிகள், புதர்க்காடுகள் பெரிதும் அருகிவருவதால், அவற்றின் பாதுகாப்பு கருதி சிவிங்கிப்புலிகளை ஒரு முக்கிய உயிரினமாக முன்னிறுத்துவது நல்லது. ஆகவே, இந்த வாழிடங்களில் கானகமீட்புப் (Rewilding) பணிகளைச் செய்வது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தும்.

அதன் ஓர் அங்கமாக சிவிங்கிப்புலிகளை இது போன்ற இடங்களில் அறிமுகப்படுத்துவதால் அற்றுப்போன ஓர் உயிரினத்தை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டுவருவது மட்டுமல்லாமல், அது வாழும் இடத்தில் உள்ள மற்ற அரிய உயிரினங்களையும் (எடுத்துக்காட்டாக கானமயில், வரகுக்கோழி, இந்திய ஓநாய் போன்றவை) பாதுகாக்க முடியும். இதுவே ஆப்ரிக்காவிலிருந்து சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தவர்களின் வாதம். ஆனால், இதற்கு எதிராகப் பல காலமாகக் குரல் கொடுத்துவரும் ஆராய்ச்சியாளர்கள், இது வீண் பெருமைக்காகச் செய்யப்படும் திட்டம் என்கின்றனர்.

ஆசிய சிங்கம் இருக்கவேண்டிய இடத்தில்... ஆப்ரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவிங்கிப்புலிகள் தற்போது மத்தியப்பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்காவில் உள்ளன. குஜராத்தில் மட்டுமே இருக்கும் ஆசிய சிங்கங்களுக்காக ஒதுக்கப்பட்டது இந்தப் பகுதி. குஜராத் கிர் காடுகளில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் சிங்கங்களை குனோ தேசிய பூங்காவில் கொண்டுவந்து விடும் திட்டத்திற்கான பணிகள் 1990களின் இறுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இதற்காக அப்பகுதியில் உள்ள 24 கிராமங்களில் இருந்த 1,545 சஹாரியா பழங்குடியினர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார்கள்.

ஆனால், குஜராத் மாநில அரசு சிங்கங்களை வேறு மாநிலங்களுக்குத் தர மறுத்துவிட்டது. மாறாக, குஜராத் மாநிலத்துக்குள்ளேயே இரண்டு இடங்களைப் பரிந்துரைத்து, அங்கே கொண்டு செல்லலாம் என்று மாநில அரசு கூறியது. சிங்கம், குஜராத் மக்களின் கலாச்சாரத்தில் ஒன்றிப்போன ஓர் உயிரினம், அது ஒரு குடும்ப உறுப்பினரைப் போன்றது. ஆகவே அம்மாநில மக்கள் அதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம் 2013இல் சிங்கங்களை குனோவிற்குக் கொண்டுவர வேண்டும் எனத் தீர்ப்பளித்த பின்னும், இன்றுவரை அந்தத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இப்போது அங்கே ஆப்ரிக்க சிவிங்கிப் புலிகளைக் கொண்டுவந்து விடுவது, ஆசிய சிங்கங்களை அங்கு கொண்டுபோவதைத் தடுக்கவும், தாமதப்படுத்துவதற்காகவுமே எனக் கருதப்படுகிறது.

இந்தியாவில் அழிவின் விளிம்பில் இருக்கும் காட்டுயிர்களையும், எஞ்சியிருக்கும் வாழிடங்களையும் பாதுகாப்பதை விட்டுவிட்டு சிவிங்கிப்புலிக்கு மட்டும் முன்னுரிமை தருவது எந்த வகையில் நியாயம்? மேலும், இப்போது இருக்கும் புல்வெளிகளையும், புதர்க்காடுகளையும் பாதுகாத்து, சீரழிந்த வாழிடங்களை மீளமைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவந்த பிறகு, ஏற்கெனவே அங்கிருந்த உயிரினங்களை (சிவிங்கிப்புலி போன்றவை) கொண்டுவந்து விடுவதே முறை.

அப்படியில்லாமல், கிடைக்கின்ற இடங்களில் ஓர் இரைக்கொல்லிப் பாலூட்டியை (Carnivorous mammal) கொண்டுவந்து விட்டுவிட்டு, அது புல்வெளிகளைப் பாதுகாக்கப் பயன்படும் என்று கூறுவது எப்படி முறையாகும்? இவை எண்ணிக்கையில் பெருகி, அருகில் வசிக்கும் மனிதர்களுடன் உரசல் ஏற்பட்டால் (இவை மனிதர்களைக் கொல்வதில்லை எனினும், ஆடு போன்ற வளர்ப்பு உயிரினங்களைப் பிடித்துச் செல்லக்கூடும்) அந்தப் பிரச்சினையையும் சமாளிக்க வேண்டும்.

குனோ தேசியப் பூங்காவில் தற்போது உள்ள சிவிங்கிப்புலிகள் அந்த இடத்திற்குத் தம்மை தகவமைத்துக்கொண்டு, இனப்பெருக்கம் செய்து அதன் சந்ததிகளை நிலைநாட்ட சுமார் 15 ஆண்டுகள் ஆகலாம் என நிபுணர்கள் அனுமானிக்கின்றனர். இங்கு மட்டுமல்ல குறைந்தது 3-5 இடங்களிலாவது இன்னும் பல சிவிங்கிப்புலிகளைக் கொண்டுவந்து விட்டு சுமார் 25-30 ஆண்டுகள் இவற்றைப் பாதுகாத்தால் மட்டுமே, இங்கே அவை நிலைத்திருக்கும் வாய்ப்பு உள்ளது.

இப்படிக் கொண்டுவரப்பட்ட சிவிங்கிப்புலிகள் பல்கிப் பெருகி நல்ல எண்ணிக்கையில் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டுமானால் இந்தியாவில் சுமார் 5,000 சதுர கி.மீ. புல்வெளிகள், புதர்க்காடுகள் இருக்க வேண்டும். ஆனால், அவ்வளவு இடம் இங்கே இல்லை.

திட்டம் ஓராண்டு நிறைவு: ஆப்ரிக்காவிலிருந்து சிவிங்கிப்புலிகள் செப்டம்பர் 2022இல் குனோ தேசியப் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டன. இதுவரை 20 ஆப்ரிக்க சிவிங்கிபுலிகள் இங்கே கொண்டு வரப்பட்டு, பெரும்பாலும் அடைக்கப்பட்ட சூழலில்தான் வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 6 சிவிங்கிப் புலிகள் இறந்துவிட்டன. கொண்டுவரப்பட்ட ஒரு பெண் சிவிங்கிப்புலி நான்கு குட்டிகளை ஈன்றது. இவற்றில் மூன்று இறந்து போயின, ஒன்று மட்டும் வனத்துறையினரால் வளர்க்கப்பட்டு வருகிறது. தற்போது குனோ தேசியப் பூங்காவில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சிவிங்கிப்புலிகள் என்று எதுவும் இல்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மேலும் சில சிவிங்கிப்புலிகள் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டுவரப்பட உள்ளன. ஆகவே, மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர், நார்தேஹி காட்டுயிர் சரணாலயங்களில் இதற்கான முன்னேற்பாடுகள் நடந்துவருவதாகத் தெரிகிறது. சிவிங்கிப்புலியைக் கொண்டுவிட ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஷாகர் பகுதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தத் திட்டத்திற்கு முதல் கட்டமாக அதாவது முதல் ஐந்து ஆண்டுகளுக்குச் சுமார் ரூ. 91.65 கோடி செலவாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இந்த நிதி புலிகள் பாதுகாப்புத்திட்டம் (Project Tiger), கேம்பா நிதியில் (CAMPA Fund) இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எதற்கு கவனம் தேவை? - இந்த நிதியை இப்போது எஞ்சியிருக்கும் சீரழிந்த வாழிடங்களில் சூழல்சார் மீளமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், அழிந்துவரும் நிலையில் உள்ள பாறுக் கழுகு, கான மயில், ஆசிய சிங்கம், ஆசிய யானை போன்ற உயிரினங்களின் பாதுகாப்பிற்கும், மனிதக் காட்டுயிர் உரசல்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களுக்கும், பரவும் அயல் தாவரங்களைக் கட்டுப்படுத்தவும், எல்லாவற்றுக்கும் மேல் வனத்துறையைப் பலப்படுத்தவும், மேம்படுத்தவும்கூடப் பயன் படுத்தலாம்.

சிவிங்கிப்புலிகளை இந்தியாவிற்குக் கொண்டுவரும் திட்டத்தினால், தற்போது இந்தியாவில் அழியும் நிலையில் உள்ள பல காட்டுயிர்களையும் அவற்றின் வாழிடங்களையும் காப்பதில் இருக்கும் கவனம் சிதறியோ, திசைதிருப்பப்பட்டோ விடுகிறது. எதற்கு அக்கறைகாட்டப்பட வேண்டுமோ, அதை விட்டுவிட்டு தேவையில்லாத அல்லது உடனடி கவனம் செலுத்தத் தேவையில்லாத ஒன்றிற்காக நம் நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்வது எந்த விதத்திலும் பயனுள்ளதாக இருக்காது. நம் வழக்கில் சொல்வதென்றால் ‘இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதைப் பிடிக்கும் வேலை இது’.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்; - jegan@ncf-india.org

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x