Published : 16 Dec 2017 10:08 AM
Last Updated : 16 Dec 2017 10:08 AM

கடலம்மா பேசுறங் கண்ணு 32: வரலாற்று மறுநிகழ்த்தல்!

காற்றின் ஆற்றலைக் கைவசப்படுத்திய எளிமையான படகுகளின் தோற்றம் தொலைகடல் பயணங்களுக்கு வித்திட்டது. கடல் தென்றல் அதற்குக் கைகொடுத்தது. படகுகளின் அளவும் வசதிகளும் பெரிதாகிக் காலப்போக்கில் பாய்க்கப்பல்கள் வழக்கில் வந்தன. மனிதர்கள் திசைதோறும் கடலில் பயணித்து, புதுப்புதுத் தீவுகளைக் கண்டடைந்து குடியேறத் தொடங்கினர்.

வரலாற்றின் பல்வேறு காலங்களில், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் உதவியின்றி, கற்பனை செய்து பார்க்க முடியாத தொலைவுகளில் இந்தக் குடியேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. தெற்கு பசிபிக் தீவுகளில் குடியேறியவர்கள் தென்னமெரிக்கர்களே என்று தோர் ஹயர்தால் என்னும் நார்வே கடல்பயணி தனது தெப்பப் பயணம் மூலம் நிரூபித்துக் காட்டினார். ‘கோன் டி கி கடல்செலவு’ என அறியப்பட்ட அந்தப் பயணம் ஒரு வரலாற்று மறுநிகழ்த்தல்!

அரேபியர்களின் வணிகம்

பினீசியர்கள் (பண்டைய எகிப்தியர்கள்) உலகறிந்த கப்பல் பயணப் பிரியர்கள். நிலம் பொதிந்து கிடக்கும் மத்திய தரைக் கடல் கடந்து மூன்றரை ஆண்டுகள் கப்பலில் பயணித்து ஜிப்ரால்டர் நீரினை, அட்லாண்டிக் கடலைக் கடந்து ஆப்பிரிக்காவின் தென்முனையைத் தொட்டு செங்கடல் வழியாக நாடு திரும்பினார்கள்.

கடலை நெடுவழியாய்ப் பயன்படுத்தி உலக வணிகத்துக்காகத் தொடர் கடல் பயணம் மேற்கொண்டவர்கள் அரேபியர்களே. மத்திய தரைக் கடல், தென்கிழக்கு அட்லாண்டிக் பெருங்கடலுடன் அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல், தென்சீனக் கடல், தெற்கு பசிபிக் கடலின் ஒரு பகுதி – அத்தனையிலும் பயணித்துக் கரை கண்டவர்கள். தென்கிழக்கு ஆசியா, இந்தியாவிலிருந்து வாசனைப் பொருட்களையும் மரங்களையும் கொள்முதல் செய்துகொண்டு சென்றவர்கள்.

ஆப்பிரிக்காவின் தென்முனையில் வாஸ்கோ ட காமா நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்தது கி.பி. 1498 ஏப்ரலில். அகமது பின் மஜித் என்னும் அரேபிய மாலுமிதான் வாஸ்கோ ட காமாவுக்கு வழிகாட்டினார்.

வழிகாட்டிய மாலுமிகள்

கடலை வென்றவர்களின் வரிசையில் 9-ம் நூற்றாண்டில் சாதனை படைத்த வைக்கிங்குகளைக் குறிப்பிடலாம். வட ஐரோப்பியர்களான இவர்கள் ஸ்காண்டிநேவியாவிலிருந்து (இப்போது நார்வே – ஸ்வீடன்) வடதுருவத்தில் கிரீன்லாந்துக்கும் தெற்கு நோக்கி அட்லாண்டிக் கரைகளுக்கும் பயணித்துத் திரும்பினர். கி.பி. 10-ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கும் சென்றுவந்தனர்.

15-ம் நூற்றாண்டில் கடல்வழி ஆய்வுகளுக்கு ஐரோப்பியர்கள் புறப்படுவதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே வழிகாட்டியவர்கள் ஆசிய, ஆப்பிரிக்க, சிரிய மாலுமிகளே. ஸ்பெயினிலிருந்து இந்தியாவுக்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் வழி தேடிப் புறப்பட்டது 1492-ல். மேற்கு நோக்கிப் பயணித்த அவருக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் மறுகரையில் இருந்த அமெரிக்கா குறுக்கிட்டது.

கடல் தந்த குடியேற்றங்கள்

இன்றுவரை முறியடிக்கப்படாத தனிமனிதக் கடல் சாதனை ஃபெர்டினண்ட் மெகல்லன் 1519-ல் நிகழ்த்திய பயணம்தான். பிலிப்பைன்ஸ் மோதலில் மெகல்லன் கொல்லப்பட்டார். எனினும் அவரது நெருங்கிய உடன் பணியாளர் டெல் கானோ 1522-ல் ஊர்திரும்ப முடிந்தது. கிழக்கிலிருந்து முதன்முதலாக பசிபிக் கடலை அடைந்த முதல் மாலுமியும் மெகல்லன்தான்.

அடுத்த சில நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பெருந்தொகை இடப்பெயர்வுகளுக்கும் குடியேற்றங்களுக்கும் கடல் பயணங்களின் பெருக்கமே காரணமானது. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நிகழ்ந்த பெருங்குடியேற்றங்கள் தவிர ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளிலும் ஐரோப்பியர் குடியேறலாயினர்.

(அடுத்த வாரம்:

பரிணாமக் கொள்கையின் தொடக்கம்!)

கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் –

வள அரசியல் ஆய்வாளர்

தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x