Last Updated : 09 Sep, 2023 05:55 AM

 

Published : 09 Sep 2023 05:55 AM
Last Updated : 09 Sep 2023 05:55 AM

குறுவை சாகுபடி பாதிக்கப்படுமா?

டெல்டா மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடிப் பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதனால் இந்த ஆண்டு நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை பயிர்கள் டெல்டா பகுதிகளில் ஜூன்-செப்டம்பர் காலத்தில் பயிரிடப்படும் குறுகிய கால பயிர்கள். டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இந்தப் பாதிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில நெல் உற்பத்தியில் நான்கில் மூன்று பங்கு டெல்டா பகுதியில் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மாநிலத்தின் நெல் உற்பத்தியைப் பாதிக்கக்கூடியதாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர்த் தட்டுப்பாடு தமிழக டெல்டா விவசாயிகளுக்கு பெரும் கவலையாக உள்ளது.

இது இப்பகுதியில் விவசாயம், வாழ்வாதாரம் ஆகியவற்றில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிக்கலான பிரச்சினையாகும். குறுவை சாகுபடிக்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. காவிரி ஆற்றின் மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீரை மட்டுமே சேலத்தில் விவசாயிகள் நம்பி உள்ளனர். குறுவை சாகுபடிக்கு சுமார் ஒரு லட்சம் மில்லியன் கன அடி (டிஎம்சி) தண்ணீர் தேவை என டெல்டா விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், போதிய தண்ணீர் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

குறுவை சாகுபடி - அதிகாரிகள் ஆய்வு: தஞ்சை பகுதியில் குறுவை அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறுவைப் பயிர்கள் தண்ணீர் இன்றிப் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ளன. குறுவை சாகுபடி பயிர்களின் நிலை குறித்துக் கள ஆய்வு மேற்கொள்வதற்காக வேளாண் உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர் ஆகியோர் தஞ்சையில் ஆய்வு மேற்கொண்டனர். நெற்பயிர்களைப் பார்வையிட்டனர்; விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

குறுவைப் பயிருக்குப் போதிய தண்ணீர் கிடைத்தால்தான் பயிரைக் காப்பாற்ற முடியும். மாற்று ஏற்பாடாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரமும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை விவசாயிகள் தரப்பில் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை அரசிடம் தெரிவிப்பதாக ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.- விபின்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x