

எவ்வளவு நகைச்சுவையாகப் பேசிச் சிரித் தாலும் டாக்டர் கே.கே சொன்னதை ராஜனால் முழுமையாக ஏற்க முடிய வில்லை. “பேரு வச்சீங்களே சோறு வச்சீங்களா என்கிற கேள்வி சரிதான். சோறு போட்டா, பீட்சா கேட்குறான்.. என்ன பண்ண சார்?” “எதை பீட்சானு சொல்றீங்க? இந்த கேண்டீன் சாப்பாட்டையா?” “இல்ல... இல்ல... எல்லா வசதிகளையும் சொல்றேன்.
இண்டஸ்ட்ரி ஸ்டாண்டர்டுக்குச் சம்பளம் மட்டும் இல்ல, எல்லா விதத்திலும் பெனிஃபிட்ஸ் இங்கே அதிகம். எதைக் கம்மியா தர்றோம் சொல்லுங்க?” சார்லஸ் இதற்கு ஆமோதிப்பதுபோலத் தலை யாட்டினார்.
ஹெச்.ஆர். அல்லவா? டாக்டர் கே.கே. தீர்க்கமாக இருவரையும் பார்த்தார். “நீங்க தர்றோம் தர்றோம்னு சொல்றது எல்லாம் பொருளாதாரம் சார்ந்தது. சம்பளம், பஸ், கேண்டீன், மெடிக்கல், இன்சூரன்ஸ்... இப்படி சி.டி.சி (CTC: Cost to the company) தொடர்பானது.
அவங்க கேட்குற பீட்சா வேற!” “இதுக்கு மேல என்ன இருக்கு தர?” “நிறைய... அவங்க கேட்குறது அர்த்தமுள்ள வேலை, வேலை தவிர்த்த வாழ்க்கைக்கான நேரம், வேலையில் சுதந்திரம், எதையும் கேள்வி கேட்கிற உரிமை, தான் வளர இது சரியான இடம்தான்னு நல்ல வழிகாட்டுதல்… இப்படி நிறைய. இதை எல்லாம் பைசா கொடுத்து செட்டில் செய்திட முடியாது ஜென்டில்மென்!” “இதெல்லாம் அடைய நாம நிறைய முயற்சி பண்றோம் சார்.”
“பத்தாது மை டியர். அப்படி நடந்திருந்தா நாம இப்படிப் புலம்ப மாட்டோம்.” ராஜனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அடிபட்டதுபோல முகத்தை வைத்திருந்தார். சார்லஸ் சாமர்த்தியமாகச் சாப்பாட்டில் கவனம் செலுத்தினார். ஓர் அசாதாரண மௌனத்துக்குப் பிறகு ராஜனே தொடர்ந்தார்.
“நீங்க இந்தக் காலத்துப் பசங் களுக்குக் கண்மூடித்தனமா சப்போர்ட் பண்றீங்க. அவங்க மேல குறை சொன்னா, எங்களுக்கே அட்வைஸ் பண்றீங்க!” “அவங்ககிட்ட குறைகள் இல்லாமல் இல்லை ராஜன். ஆனா பெரும்பாலான விஷயங்களுக்கு அவங்க அப்படி இருப்பதற்கு முந்தைய தலைமுறை
தானே காரணம். குழந்தைக்கு மனநலப் பிரச்சினைன்னா, பெத்தவங்களுக்கும் தானே கவுன்சலிங்.
அதுதானே நியாயம்? அது போலப் பணியாளர்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும், நான் நிர்வாகத்தைதான் விமர்சிப்பேன். எல்லாம் மேலே இருந்து கீழே வர்றதுதான். தலை ஒழுங்கா செயல்பட்டா தானே, கைகள் தானா செயல்படுமே.
அவ்வளவுதான் நான் சொல்றது!” சார்லஸ் மத்தியஸ்தம் செய்கிற தோரணையில் ஆரம்பித்தார்: “கரெக்ட்தான் சார். வீட்டிலேயே பார்க்கறோமே. பசங்களுக்கு நிறைய சுதந்திரம் தந்துட்டு இப்ப ‘பசங்க மதிக்க மாட்டேங்கறாங்க’ அப்படின்னு புலம்பிட்டு இருக்கோம்.
வயசுல பெரியவங்க அப்படின்னா எதை வேணா கேட்க உரிமை இருக்குனு நினைக்கறாங்க. யாரைப் பார்த்தாலும் வாய் கூசாம உருவக் கேலி பண்றாங்க, ‘ஏன் இளைச்சிட்டே. ஏன் உடம்பு போட்டுட்டே’ அப்படினு”.
தனக்கே உரிதான புன்னகையுடன் தொடங்கினார் டாக்டர். “ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு விஷயம் பெருசா தெரியும். ஒரு காலத்துல நமக்குப் பிடிக்கலைனாலும், வயசானவங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டு, அவங்க போனதுக்குப் பிறகு திட்டிட்டு இருந்தோம்.
ஆனா இப்போ மரியாதை கிடைக்க, உங்க வயசு முக்கியம் இல்லை. நீங்க பேசுற வார்த்தையும் நடந்துக்குற விதமும்தான் முக்கியம். இது புது தலைமுறை. வயசைக் காரணம்காட்டி உங்க மதிப்பீடுகளை என் மேல திணிக்காதீங்கன்னு வெளிப்படையாவே சொல்லிடுறாங்க.
இதை வயசானவங்களை அவமானப்படுத்துறதா எடுத்துக்க வேண்டியதில்லை. எந்த வயசுல இருக்கிறவங்களா இருந்தாலும், தன்னோட சுயமரியாதையை யாரும் காயப்படுத்திடக் கூடாதுன்னு நினைக்கிறாங்க. அவ்வளவுதான்.”
எதிர் மேசையில் இருந்தவர்கள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தனர். “வரலாற்றில் நடந்த பிழைகளையும் குற்றங் களையும் நம்ம பெரியவங்க, முன்னோர்கள் செஞ்சாங்க அப்டீங்கிற ஒரே காரணத்துக்காக அப்படியே போற்றிப் பாதுகாக்கிறோமா? இல்ல அதைச் சரிசெய்ய நினைக்கிறோமா?” “சார், நீங்க அரசியல் பேசுறீங்க!” என்று சிரித்தவாறு சொன்னார் ராஜன்.
“எதில் அரசியல் இல்ல?” என்று புன்னகைத்தார் பதிலுக்கு. “அதெல்லாம் போகட்டும். நீங்க இந்த ஜென் ஸீ பசங்களை எப்படி டீல் பண்றதுன்னு விளக்கமா ஒரு செஷன் எடுக்கணும் டாக்டர்” என்றார் சார்லஸ். கட்டை விரலை உயர்த்திக் காண்பித்துவிட்டு எழுந்தார் டாக்டர் கே.கே.
(பேசலாம்)
- தொடர்புக்கு: director@gemba.co.in