

சார்லஸ் சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து உட்கார்ந்திருந்தார். ராஜன் ஒரு தட்டில் காய்கறித் துண்டுகளை நிரப்பி வந்து எதிரில் அமர்ந்தார். “நானும் கலந்துக்கலாமா?” எனக் கேட்டார் டாக்டர் கே.கே.. இந்த உரையாடல் தெறிக்கவிடும் வண்ணம் இருக்கும் என்று நினைத்துப் புன்னகைத்தார் ராஜன்.
சார்லஸே தொடங்கினார்: “இப்ப எல்லாம் நம்ம எம்ப்ளாயிஸ் ரொம்ப டிஸ் என்கேஜ்டா இருக்காங்க. வேலையில் ஒட்டுதல் இல்லேன்னு ராஜன் சொன்னார். நான் சொன்னேன்... நாமதான் அவங்களை அப்படி ஆக்கி வச்சிருக்கோம்னு. என்ன சொல்றீங்க டாக்டர்?” டாக்டர் கே.கே. சூப்பைப் பருகியவாறு, “நீங்க ஆரம்பிங்க” என்று சைகை காட்ட, சார்லஸே தொடர்ந்தார்.
“கம்பெனி மேல விசுவாசம் இருந்தா ஒட்டுதல் இருக்கும். அது குறையறப்போ எல்லாமே குறையும். ஒரு காலத்துல கம்பெனியைக் குடும்பம் மாதிரி பார்த் தாங்க. ஒரு நிரந்தரத்தன்மை இருந்தது. பின்னர் வாழ்நாள் முழுக்க வேலை பார்க்காவிட்டாலும் நிறைய வருஷம் இருப்போம்னு தெரிஞ்சு அனுசரணையா இருந்தாங்க.
இப்போ ஷார்ட் டெர்ம் கமிட்மெண்ட்தானே? இந்த டிரண்டைத் தொடங்கினது கம்பெனிகள்தானே? மக்கள் இல்லையே” “சர்வீஸ் பிசினஸ் அதிகமானபோது இது நடக்க ஆரம்பிச்சது.
பிசினஸ் மாறும்போது தலைகள் எண்ணிக்கை கூடும் குறையும். இதை ஒண்ணும் பண்ண முடியாதே. இந்தக் காலக்கட்டத்துல புராடெக்ட், டெக்னாலஜி, புராசஸ், கம்பெனி எல்லாத்தோட ஆயுளும் குறைஞ்சிட்டு வருதே. என்ன பண்ண?” ராஜன் சற்று முட்டுக்கொடுத்தார்.
“அதுதான் நான் சொல்ல வந்தேன். ‘எப்ப வேணா வேலை போகும்’னு சொல்லிட்டு ‘நீ எங்களுக்கு ஆயுசுக்கும் விசுவாசமா இரு’ன்னு சொல்றது என்ன
நியாயம்?” என்று மெலிதான புன்னகை யுடன் கேட்டார் சார்லஸ். “ஆயுசுக்கும் வேண்டாம். இருக்கற வரை இருக்கலாமே?” “எவ்வளவு காலம் இருப்போம்னு தெரியாத இடத்துல எப்படி முழுசா லாயல்டி காமிக்க முடியும்?” “குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்ன? இருக்கற வரை நல்லா வேலை செய்யணும்.
வேலையை விட்டுட்டுப் போகும்போது முறையா சொல்லிட்டு, பக்காவா ஹேண்ட் ஓவர் பண்ணிட்டுப் போகணும்.
இந்த எதிக்ஸ்கூட எதிர் பார்க்கக் கூடாதா?” டாக்டர் கே.கே. இப்போது வாய்விட்டுச் சிரித்தார். “விசுவாசங்கிறது எப்போதும் இரு வழிப்பாதை ராஜன்!” ஓர் இடைவெளி விட்டு அவரே தொடர்ந்தார்: “தொண்ணூறுகளின் கடைசியில இந்த டிரெண்டு ஆரம்பிச்சது. குறிப்பா ஐ.டி. கம்பெனிகள் பெருசா வந்த காலத் துல. மத்த செக்டார்களில் இருந்துதான் ஆள்களைத் தூக்கினாங்க.
சீக்கிரம் புராஜெக்ட் ஆரம்பிக்கணும்னு அதிக சம்பளம், பெரிய டைட்டில், கூட ஆள்களைக் கூட்டி வந்தா ரெஃபரென்ஸ் போனஸ் இப்படி வேக வேகமா எடுத்தாங்க. பழைய கம்பெனியிலிருந்து ‘ரிலீவிங் லெட்டர்’ தேவை இல்லை. நோட்டிஸ் பீரியட் இருந்தா, அதை மீறி வர அந்த பீரியட் சாலரி... இப்படித் தந்து இன்டஸ்டரியில் இருந்த பழைய நியதிகளை உடைச்சாங்க.
‘நல்ல ஆஃபர் கிடைச்சா உடனே தாவுறது தப்பில்லை’ - அப்படிங்கிற புது டிரெண்டு அப்பதான் உருவாச்சு. அதே மாதிரி 2008 காலத்துல தேக்க நிலை வந்தப்போ பெரும் அளவு ஆள்குறைப்பு வந்தது.
வீடு வாங்கி தவணை கட்ட முடியாமல், வேற வேலை கிடைக்காம அவதிப்பட்டபோதுதான், இந்தப் பணி நிச்சயமின்மையைப் பலரும் உணர்ந்தாங்க.
அதுக்கு அப்புறம்தான் எம்ப்ளாயிஸ் எல்லாம் உஷார் ஆனாங்க. கம்பெனிகளை நம்ப முடியாது; மாறிட்டே இருக்கணும்; அதற்கேற்ற வாய்ப்புகளை எதிர்நோக்கி வெளியில பார்த்தவாறு இருக்கணும்னு.
வெளியே வேற வேலை கிடைக்குமான்னு சதா பார்த்துட்டு இருக்குற ஒருத்தருக்கு உள்ளே எப்படி விசுவாசம் வரும்? ‘யூஸ் அண்ட் த்ரோ’ கலாச்சாரத்தைத் தொடங்கி வச்சது நிறுவனங்கள்.
அதை அப்படியே ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டோம். அத னால... விசுவாசம் அப்படிங்கிறது இரண்டு பக்கமும் கம்மியாயிடுச்சு ராஜன்!” “உற்பத்தி நிறுவனங்கள்ல தொழிலாளர் களுக்குத் தொழிற்சங்கங்கள் இருக்கு.
ஆனால், சர்வீஸ் செக்டார்ல யூனியன்கள் குறைவு. தங்கள் குறைகளையும் நியாயங்களையும் பேச நம்பத்தகுந்த தளங்கள் இல்ல.
புதுசா இன்ஜினீயரிங் படிச்சுட்டு வர்ற பையனுக்கு நாம என்ன நம்பிக்கை தர்றோம்? யோசிங்க ராஜன்” என்று கேட்டார் சார்லஸ்.
டாக்டர் கே.கே. சிரித்தவாறு சொன்னார்: “பல கம்பெனிகளில் எம்ப்ளாயி என்கேஜ் மெண்ட் ஏத்தறோம்னு காமெடி பண்ணு வாங்க.
பிறந்தநாள் கொண்டாடம், புதுத் திரைப்பட டிக்கெட், வார இறுதியில பார்ட்டி எல்லாம் பண்ணிட்டு, பல்ஸ் சர்வே பண்ணிப் பார்த்தா ஸ்கோர் ஏறியிருக்காது.”
ராஜன் பரிதாபமாகக் கேட்டார்: “அப்போ இதெல்லாம் வீணா?” சார்லஸ் முந்திக்கொண்டு சொன்னார்: “இதெல்லாம் வழக்கமா செய்யுறதுதான்.
ஆனால், அடிப்படை உணர்வுகளையும் தேவைகளையும் சரி செய்யாம ஒட்டுதல் மட்டும் எப்படி வரும்?” கே.கே எழுந்தார். “ராஜன், இது பழைய காமெடிதான். புரியுற மாதிரி சொல்றேன். ‘பேர் வச்சியே.. சோறு வச்சியா?’ அந்தக் கதைதான் இதுவும்!” மூவரும் அதிரடியாகச் சிரித்தனர்.
(பேசலாம்)