

விஷால் இன்று வேலைக்கு வரவில்லை. இ மெயில் எதுவும் இல்லை. ராஜனுக்குக் கோபம் கொப்பளித்தது. போனில் அழைத்தும் பதிலில்லை. மற்ற டீம் உறுப்பினர்கள் யாருக்கும் தகவல் இல்லை. பத்து மணிக்கு ரிவ்யூ மீட்டிங். சென்ற வாரத்திலும் ஆள் இல்லை. கண்டிப்பாக ‘பிக் பாஸ்’ நக்கலடிப்பார். “என்ன நியூ ஹயர் வரலையா? டேக் கேர். இதுவரை இந்த குவாட்டர்ல மூணு அட்ரிஷன் உங்க டீம்ல..” என்பார்.
இன்று புது கிளையன்ட் மீட்டிங் வேறு உள்ளது. பிரெசன்டேஷன் முடித்தாரா என்றும் தெரியவில்லை. ரெனிட்டாவை அழைத்தார். விஷாலுடன் வேலைக்குச் சேர்ந்த பெண் அவர். ஒரே கல்லூரியும்கூட. “என்னாச்சு விஷாலுக்கு?” “உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டுத்தான் லீவு எடுத்ததா சொல்றான்.” ரத்தினச் சுருக்கமாகப் பேசினார். சந்தேகம் வந்து வாட்ஸ்அப்பைத் திறந்தால், முன் பின் தெரியாத ஓர் எண்ணில் இருந்து அந்தச் செய்தி வந்திருந்தது. “ராஜ், இந்த மாத விடுப்பைத் திங்கள் அன்று எடுத்துக்கொள்கிறேன். ரெனிட்டாவிடம் பி.பி.டி. உள்ளது.” ஒரு சார், தேங்க்ஸ், சாரி எதுவுமே இல்லை.
ஹெச்.ஆரில் ஸ்ருதியை அழைத்தார். “இந்த நியூ ஹயர்ஸுக்கெல்லாம் டிரெயினிங் எதுவும் கிடையாதா? கார்ப்பரேட் எட்டிக்வெட் புரோகிராம் எல்லாம் முன்னே நடக்குமே. இப்ப இல்லையா?”
“நடந்தது ராஜன். ஆகஸ்ட்ல புது டிரெய்னீஸ் சேர்ந்த ஒரு வாரத்துல உங்க டீம் மெம்பர்ஸை நீங்கதான் நாமினேட் பண்ணலை. அடுத்த தடவை நடக்கும்போது சொல்றேன். பை தி வே.. எனி இஷ்யூஸ்?”
“நத்திங். ஒரு பொறுப்பற்ற தலைமுறை கிட்ட வேலை வாங்கற பிரஷர். அதுதான் என் பிளட் பிரஷரை ஏத்துது” என்று சொல்லி போனை வைத்தார். எதிரில் கதிர் நிற்பது தெரிந்தது. “வாப்பா” என்றார்.
ராஜனுக்கு கதிரைப் பிடிக்கும். கேம்பஸிலேயே தெளிவான அவனுடைய பேச்சு பிடித்தது. ஆங்கிலம் குறை என்றாலும், நிறைந்த துறை அறிவு. சிவகாசி பக்கத்தைச் சேர்ந்தவன். எளிய குடும்பத்தில் இருந்து வந்தவன். யாரிடத்திலும் இல்லாத சிரிப்பும் மரியாதையும் கதிரிடம் இருந்ததுதான், ராஜனுக்கு அவனைப் பெரிதும் பிடித்துப் போயிருந்தது.
“நான் பேப்பர் போடறேன் சார். ஊர் பசங்க நாலு பேரோடு சேர்ந்து பிசினஸ் பண்ணப் போறேன். அதான்...” என்று நிறுத்தினான். இந்த நாளில் யார் முகத்தில் விழித்தோம் என்று எண்ணிக்கொண்ட ராஜன் மெதுவாகப் பேசினார். “கதிர், இப்ப நம்ம செக்டார்ல வேலை கிடைக்கறதே கஷ்டம். நீ நல்லா பண்றே. ஸ்டார்ட் அப் எல்லாம் ஈசி இல்லை. நூத்துல நாலு ஜெயிக்கும். ஒரு அஞ்சு வருஷம் வேலை பாத்துட்டு அப்புறம் முடிவு பண்ணு..”
“அதுக்குள்ள வாழ்க்கை பாதி போயிடும்..”
“என்ன வயசு இப்ப உனக்கு?”
“24.”
“அதுக்குள்ள வாழ்க்கை முடிஞ்சுடுமா?”
“இல்ல ராஜன் சார். நானும் என் பார்ட்னரும் தெளிவா இருக்கோம். DINK. (Double income no kids) நாப்பதுக்குள்ள ரிட்டையர் ஆகணும். அதுக்குள்ள சம்பாதிக்கணும். இங்க இருந்தா இந்த வேலை இருக்குமா, இந்த கம்பெனி இருக்குமா.. இல்ல இந்த உலகம் இப்படியே இருக்குமா.. எதுவும் தெரியாது. சோ...ஐ ம் மூவிங் சார்!”
தன் 25 ஆண்டுப் பணி அனுபவத்தை நினைத்துக்கொண்டு, “கதிர், நீங்களெல்லாம் ஜென் ஸீ. நாங்க பேசறது புரியாது” என்றார்.
“நீங்களும் எங்களைப் புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டேங்கறீங்க.” அந்தக் கேள்வி அவரைச் சற்றுப் புரட்டிப்போட, அப்படியே ஸ்தம்பித்துப் போய் உட்கார்ந்தார் ராஜன். பிறகு “பேசலாம்” என்று சொல்லிச் சிரிக்க முயன்றார்.
(பேசலாம்)
‘கெம்பா’ கார்த்திகேயன்
கட்டுரையாளர், மனிதவளப் பயிற்றுநர்.
தொடர்புக்கு: director@gemba.co.in
கெம்பா என்கிற நிர்வாக ஆலோசனை நிறுவனத்தை 26 ஆண்டுகளாக நடத்திவருகிறார். 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஏறக்குறைய 60,000 பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்த அனுபவம் உண்டு. ’வேலையைக் காதலி’, ‘தொழில் தொடங்கலாம் வாங்க’, ‘மனசு போல வாழ்க்கை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ஜென் ஸீ உளவியல் பற்றிப் பல கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். புதிய போக்குகள் பற்றி எழுதுதலும் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை வெளிச்சம் புகுத்துதலும் இவரின் தற்காலச் செயல்பாடுகள்.