சூரியன் உதவியின்றி வாழும் உயிர்கள்! - ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகள் | அறிவியல் திருப்புமுனைகள் 21

சூரியன் உதவியின்றி வாழும் உயிர்கள்! - ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகள் | அறிவியல் திருப்புமுனைகள் 21
Updated on: 
2 min read

20ஆம் நூற்றாண்டின் முக்கியமான கண்டறிதல்களில் ஒன்று, ஆழ்கடலில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகள் (Hydrothermal Vents). ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகள் என்பவை கடற்படுகையில், குறிப்பாக ஆழ்கடலில் இருக்கும் மலைத்தொடர்கள் அருகே காணப்படக்கூடியவை. இங்கேதான் புவி மேலோடு இருக்கிறது. அதில் இருக்கும் விரிசல்கள் வழி கடல்நீர் செல்லும்போது, உள்ளே இருக்கும் சூடான பாறைக்குழம்புகளுடன் கலந்து சுற்றி இருக்கும் பாறைகளில் உள்ள கனிமங்களைக் கரைக்கும். இந்தக் கனிமங்கள் மேலோட்டின் விரிசல்கள் வழியே வந்து, குளிர்ந்த நீருடன் கலக்கும்போது கரும்புகை போன்ற தோற்றத்தில் சூடான ஊற்றாக வெளியேறும். இதுதான் வெந்நீர் ஊற்று என அறியப்படுகிறது.

நமது பூமியின் புவியியல் அமைப்பு குறித்து எழுபதுகளில் அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், ஆழ்கடலை ஆராய்வது அவர்களுக்குக் கடினமாக இருந்தது. காரணம், ஆழ்கடல் இருளடைந்தது. அழுத்தமும் அதிகம். ஆங்காங்கே எரிமலை முகடுகளும் உண்டு. இவ்வாறான இடங்களில் நீர்மூழ்கிக் கப்பல்கள் வழி திசை அறிந்து பயணம் செல்வதே கடினமாக இருந்தது.

ஆனால், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தந்தது. அமெரிக்கக் கடற்படை 1960ஆம் ஆண்டு ஆல்வின் நீர்மூழ்கி ஆய்வு வாகனம் ஒன்றை உருவாக்கியது. இதன் வேலை கடலுக்கு அடியில் இருக்கும் கண்ணிவெடிகளை அகற்றுவது. மேலும் ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அமெரிக்க ஆதரவு நாடுகளின் கடல் எல்லைகளுக்குள் நுழையாமல் கண்காணிப்பதுதான். ஆனால், 1973ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளை அந்த நீர்மூழ்கி வாகனத்தை ஆழ்கடல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தத் தொடங்கியது. இந்த ஆய்வில் எம்.ஐ.டி, ஸ்டான்ஃபோர்டு உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழக அறிவியலாளர்கள் பங்கேற்றனர்.

இவர்கள்தான் 1977ஆம் ஆண்டு தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள கலாபகோஸ் தீவுகளின் அருகே ஆழ்கடலில் முதல் வெந்நீர் ஊற்றைக் கண்டறிந்தனர். அதில் இருந்து இரும்பு, தாமிரம், மாங்கனீஸ் போன்ற கனிமங்கள் வெளியேறி கடற்படுகையில் படிவதைக் கண்டவுடன் அவை குறித்த ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டன.

ஆனால், கனிமங்களைத் தேடிச் சென்றவர்களுக்கு இன்னோர் ஆச்சரியமும் காத்திருந்தது. அதுதான் உயிர்கள். இந்த ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகே பெரிய அளவிலான குழாய்ப் புழுக்கள், நுண்ணுயிர்கள், சிப்பிகள், நண்டுகள் போன்ற உயிரினங்களும் காணப்பட்டன. இது அறிவியலாளர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. காரணம், ஆழ்கடலில் பொதுவாக உயிர்கள் வசிக்காது.

உயிர்கள் வாழ வேண்டும் என்றால் ஆற்றல் வேண்டும். தாவரங்களும் கடலின் மேற்பரப்பில் வாழும் பாசிகளும் ஒளிச்சேர்க்கையின் மூலம் சூரியனில் இருந்து ஆற்றலைப் பெறுகின்றன. அவற்றை உண்பதன் மூலம் அந்த ஆற்றல் மற்ற விலங்குகளுக்குப் பகிரப்படுகிறது. இப்படித்தான் நிலத்திலுள்ள, நீரிலுள்ள உயிர்கள் ஆற்றலைப் பெற்று வாழ்கின்றன. ஆனால், ஆழ்கடலுக்குள் சூரிய ஒளி செல்லாது என்பதால் ஒளிச்சேர்க்கை நடைபெறாது. இதனால் அங்கு உயிர்கள் வாழ முடியாது.

இதுதான் அப்போது வரையிலான நம்பிக்கையாக இருந்தது. ஆனால், சுமார் 6,500 அடிக்குக் கீழே அமைந்திருக்கும் வெந்நீர் நீரூற்றின் அருகே உயிர்கள் கண்டறியப்பட்டது அறிவியலாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவை எப்படி ஆற்றலைப் பெறுகின்றன என ஆராய்ந்தபோதுதான் இயற்கையைப் பற்றிய சில மர்மங்கள் விலகத் தொடங்கின.

ஆழ்கடலில் வாழும் உயிர்கள் சூரிய ஒளிக்குப் பதில், வெந்நீர் ஊற்றில் இருந்து ஆற்றலைப் பெறுகின்றன எனக் கண்டறியப்பட்டது. முதலில் வெந்நீர் ஊற்றின் அருகே வாழும் நுண்ணுயிர்கள் சில வேதிவினைகளை நிகழ்த்தி சுற்றுப்புறத்தில் இருந்து ஆற்றலைப் பெறுகின்றன. இந்த நுண்ணுயிர்களை உண்பதன் மூலம் பிற உயிர்களுக்கு ஆற்றல் பரிமாறப்படுகிறது. சில உயிரினங்கள் நுண்ணுயிர் களை உண்ணாமல் அவற்றைத் தங்கள் உடலில் அமர்த்திக் கொள்வதன் மூலம் நேரடியாக ஆற்றலைப் பெறுகின்றன. அதாவது இந்த நுண்ணுயிர்கள் அந்த உயிரினங்களின் உடல் பாகங்கள்போல இயங்கி, சுற்றுப்புறத்தில் இருந்து ஆற்றலைப் பெற்று அவற்றுக்கு வழங்குகின்றன. இவ்வாறு பூமிக்கு அடியில் ஒரு புதிய வகை உணவுவலை உருவாகி இருப்பது தெரிந்தது. இது சூழலியல் அமைப்பு குறித்த புதிய பார்வையை அறிவியலாளர்களுக்குக் கொடுத்தது.

இந்தக் கண்டறிதல் உயிர்கள் பற்றிய பார்வையையும் மாற்றியது. அதுவரை உயிர்கள் வாழ சூரிய ஒளி அவசியம் என்று இருந்த கருத்து பொய்யென நிரூபணமானது. சூரிய ஒளி இல்லா இடங்களிலும் உயிர் வாழ முடியும் என்பது உறுதியானது. இதன் மூலம் சூரிய ஒளி படாத, ஆனால் கடல்களைக் கொண்ட பிற கோள்களில் உயிர்கள் வாழ முடியுமா எனும் கேள்வியை எழுப்பி, விண்வெளியில் உயிர்களைத் தேடும் ஆராய்ச்சிக்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சியது இந்தக் கண்டறிதல்.

இதைத் தவிர பூமியில் முதல் உயிர் எவ்வாறு தோன்றியது என்கிற கேள்விக்கு, ஆரம்பகால ஒற்றை செல் உயிர்கள் உருவாகக் கடலுக்கு அடியில் இருந்த வெந்நீர் ஊருற்றுச் சூழல் முக்கியப் பங்கு வகித்திருக்கலாம் என்கிற கருதுகோளையும் தந்தது. இந்தக் கண்டறிதலை ஒட்டி இன்னோர் ஆச்சரியமூட்டும் செய்தியும் உண்டு. உயிரினங்கள் எவ்வாறு பரிணமித்தன என்கிற கேள்விக்கான பதில், கலாபகோஸ் தீவில் காணப்பட்ட உயிர்களை ஆராய்ந்தபோதுதான் சார்லஸ் டார்வினுக்குக் கிடைத்தது. டார்வின் மறைந்து நூறாண்டுகளுக்குப் பிறகு, அதே இடத்தில் நடைபெற்ற ஆய்விலேயே வேதிச்சேர்க்கையின் மூலம் வாழும் புதிய வகை உயிர்கள் இருப்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளது வரலாற்றின் தற்செயல்களுள் ஒன்று.

(திருப்புமுனையைக் காண்போம்)

சூரியன் உதவியின்றி வாழும் உயிர்கள்! - ஆழ்கடல் வெந்நீர் ஊற்றுகள் | அறிவியல் திருப்புமுனைகள் 21
அண்டத்தைப் புரிந்துகொள்ளும் கருவி - வெப்ப இயக்கவியல் விதிகள் | அறிவியல் திருப்புமுனைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in