உடல் சவாலைக் கடந்து யு.பி.எஸ்.சி. வெற்றி - போட்டித் தேர்வு வெற்றி

உடல் சவாலைக் கடந்து யு.பி.எஸ்.சி. வெற்றி - போட்டித் தேர்வு வெற்றி
Updated on
2 min read

2025ஆம் ஆண்டு நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெற்ற ஒவ்வொருவரின் வெற்றிக் கதையும் தனித்துவமானது.

வெற்றியாளர்களில் ஒருவரான கோவையைச் சேர்ந்த செவித்திறன் குறைபாடுடைய சஞ்சய் கடந்துவந்துள்ள பாதை தன்னம்பிக்கை நிறைந்தது.

படிப்பும் சேவையும்

ஏழாம் வகுப்புப் படித்தபோது சஞ்சய்க்கு செவித்திறன் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், படிப்பின் மீதான அவரது ஆர்வத் துக்கு அது முட்டுக்கட்டையாக அமையவில்லை. சிறப்புப் பள்ளிக்குச் செல்லாமல் பொதுப்பள்ளியிலேயே தொடர்ந்து படித்து, பத்தாம் வகுப்பில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

படிப்பில் சுட்டியாக இருந்த அவர், யுபிஎஸ்சி தேர்வில் கவனம் செலுத்தத் தொடங்கியது எப்போது? “பள்ளிப் பருவம் முதலே கல்வியில் மட்டுமன்றி எக்ஸ்ட்ராகரிக்குலரிலும் எனக்கு ஆர்வம் இருந்தது.

இளங்கலை விலங்கியல் படித்துக்கொண்டிருந்தபோது இளைஞர் களுக்கான ரோட்டராக்ட் கிளப்பில் சேர்ந்து செயல் பட்டு வந்தேன். சில பொறுப்புகளையும் வகித் தேன். 2018ஆம் ஆண்டு கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது அங்கு சென்று உதவினோம்.

இந்தக் கள அனுபவம் பொதுப் பணியின் மீது எனக்கு இருந்த ஆர்வத்தை மெருகேற்ற உதவி யாக இருந்தது. அத னால் கல்லூரிப் படிப்புக்குப் பிறகு யுபிஎஸ்சி தேர்வுக் கான பயிற்சியைத் தொடங்கினேன்” என்கிறார் சஞ்சய்.

கனவு வேலை

யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து நான்கு முறை தோல்வியைச் சந்தித்தபோதும் தன்னுடைய இலக்கில் உறுதியாக இருந்த சஞ்சய், ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். “வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்க வேண்டுமென் பதே கனவாக இருந்த எனக்கு யுபிஎஸ்சி கனவு நனவாகி உள்ளது.

காதுகேட்க உதவும் கருவிகள் விலை உயர்ந்த வையாக இருந்ததால் என்னால் வாங்க முடியவில்லை. பல ஆண்டு களாக வகுப்பறையில் பாடம் கவனிப்பது சவாலாக இருந்தது.

2024ஆம் ஆண்டில் என்னுடைய சீனியர் விஸ்வநாதனும் அவரது நண்பர்களும் சேர்ந்து காது கேட்கும் கருவியை எனக்கு வாங்கித் தந்தனர். அந்த உதவி என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த ஆண்டே யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுவிட்டேன்.

இந்தப் பயணத்தில் தாய் பிரேமலதா, பாட்டி முத்துலட்சுமி உள்பட நண்பர்கள் பலர் எனக்கு உதவி செய்து ஊக்கப்படுத்தினர். மாற்றுத் திறனாளியாக இருப்பதால் ஒருபோதும் என்னைத் தனிமைப்படுத் தாமல், என்னுடைய வெற்றி தோல்வியின்போது அவர்கள் உறு துணையாக இருந்தனர்.

தமிழ் நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம், அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அறம் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவற்றில் எனக்குக் கிடைத்த வழி காட்டுதலும் இந்த வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது” என்கிறார் சஞ்சய்.

படிப்பு மட்டுமல்ல...

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மக்கள் பணி செய்ய படிப்பு மட்டும் போதாது என்கிறார் சஞ்சய். “படிப்பு, நல்ல மதிப்பெண் மட்டு மல்லாமல் சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் உற்றுக் கவனிக்க வேண்டும்.

வேறு எந்தத் துறையில் பணியாற்றினாலும் என்னைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளோ உரிமையையோ மட்டுமே என்னால் ஏற்படுத்தித் தந்திருக்க முடியும்.

ஆனால், குடிமைப் பணியைப் பொறுத்தவரை வாய்ப்புகளையும் உரிமைகளையும் சேர்த்து என்னால் ஏற்படுத்தித் தர முடியும் என்பதால் எப்படியாவது இதில் வென்றிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன்.

என்னுடைய உடல் திறன்களுக்குத் தான் எல்லை இருந்ததே தவிர, கனவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். மூன்று ‘சி’ இருந்தால் கண்டிப்பாக வெல்லலாம். இலக்கில் தெளிவு (clarity), தன்னம்பிக்கை (confidence), நீடித்ததன்மை (consis tency) இருந்தால் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.” என்கிறார் மகிழ்ச்சியுடன்.

தேர்வுக்குத் தயாரானது எப்படி?

“சில மணிநேரம் படித்தாலும் முழு கவனத்தோடு படிக்க வேண்டும். நான் அதையே பின்பற்றினேன். என்னுடைய பலம் எது, பலவீனம் எது எனத் தெரிந்துகொண்டு அந்தப் பாடங்களை முழுமை யாகக் கற்றுத் தேர்ந்தேன்.

சமூக வலைத்தளப் பயன்பாட்டைப் பொறுத்தவரை இன்ஸ்டகிராம் பயன்படுத்தும்போது ஒரு ‘ட்ரிக்’கை ஃபாலோ செய்தேன். அது எனக்குப் பயனுள்ளதாக இருந்தது.

‘அல்காரிதம்’தான் நீங்கள் என்ன பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. இன்ஸ்ட கிராமில் செய்திப் பத்திரிகைகள், அரசுத் தளங்கள், போட்டித் தேர்வு தொடர்பான தகவல்களை வழங்கும் அலைவரிசைகள் போன்றவற்றை ஃபாலோ செய்கிறேன்.

என்னுடைய அல்காரிதம் பரிந்துரையையும் அவ்வப்போது இதற்கு ஏற்ப மாற்றி அமைப்பேன். இதனால் இன்ஸ்டகிராமைத் திறந்தாலும் தேர்வு தொடர்பான பயனுள்ள தகவல்கள், செய்திகளே ‘ஃபீடி’ல் காண்பிக்கும். இப்படியும் கவனச்சிதறலை கட்டுப்படுத்தலாம்.”

- karthiga.rajendran@hindutamil.co.in

உடல் சவாலைக் கடந்து யு.பி.எஸ்.சி. வெற்றி - போட்டித் தேர்வு வெற்றி
கட்டணமில்லாமல் சந்தை முதலீட்டுப் படிப்பு | வெற்றி உங்கள் கையில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in