

வாசகர் ஒருவர் ‘Epistolary novel’ என்று ஒரு புதினம் ‘Goodreads’ தளத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் என்ன?’ என்று கேட்டிருக்கிறார். ‘Historical’, ‘romantic’, ‘detective novels’ என்றால் முறையே சரித்திர, காதல், துப்பறியும் புதினங்கள் என்று தெரியும். வேறு சில வகைகளைப் பற்றி அறிவோம்.
‘Picaresque novel’ என்பதில் கதாநாயகனின் சாகசங்கள் விளக்கப்பட்டிருக்கும். அந்தக் கதாநாயகன் அடாவடித்தனமாகச் செயல்பட்டாலும் பல வாசகர்களுக்குப் பிடித்தவராக இருப்பார். அவர் பெரும்பாலும் சமூகத்தின் கீழ் மட்டத்தைச் சேர்ந்தவராக இருப்பார். ‘Proletarian’ வகைப் புதினம் தொழிலாளர்களால் எழுதப்படுவது அல்லது தொழிலாளர்களுக்காக எழுதப்படுவது. அவர்களது பிரச்சினைகளை மையமாகக் கொண்ட புதினமாக இது அமையும். முதலாளித்துவத்துக்கு எதிராகவும் இது இருக்கும்.
ஜவாஹர்லால் நேரு தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்கள் ஒரு நூலாக (Letters from a Father to His Daughter) வெளிவந்தது தெரியுமல்லவா? இப்படி கடிதங்களால் உருவாகும் புதினத்தை
‘epistolary novel’ என்பார்கள். கடிதங்கள்தாம் என்றில்லை. டைரிக் குறிப்புகள், வேறு மாதிரி ஆவணங்கள், செய்தித்தாள்களின் பகுதிகள் ஆகியவற்றைப் பெரிதும் உள்ளடக்கியதாக இப்புதினங்கள் இருக்கலாம். அண்மைக்காலமாக மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் பதிவுகளைக் கொண்டு முழுவதுமாக அல்லது பெரும்பாலும் அமையும் புதினங்களையும் இந்த வகையில் சேர்க்கிறார்கள். ‘ஆன் ஃப்ராங்க்’ எழுதிய ‘தி டைரி ஆஃப் ய யங் கேர்ள்’ இந்த வகைதான்.
இவ்வகைப் புதினத்தின் முன்னோடியென ஜேம்ஸ் ஹோவெல் என்பவரைக் குறிப்பிடுவார்கள். 1594இல் பிறந்தவர் இவர். அவரது ‘ஃபெமிலியர் லெட்டர்ஸ்’ நூலில் கடிதங்கள் மூலம் தனது சிறை அனுபவம், வெளிநாட்டு அனுபவத்தை விவரித்திருந்தார்.
‘Mainstream fiction (or mainstream novel)’ என்றால் என்ன என்பதையும் அறிவோம். ஒவ்வொரு வகை எழுத்தாளருக்கும் அல்லது ஒவ்வொரு வகை புதின வகைக்கும் ரசிகர்கள் இருப்பார்கள். ஆனால், இதையும் தாண்டிப் பல புதிய வாசகர்கள் ஒரு நூலுக்கு கிடைத்தால் (அந்த புதினம் அல்லது கதை புகழ் அடைந்து விற்பனையிலும் சாதனை புரிந்தால்) அதை ‘mainstream’ என்போம்.
இப்போது செய்தி வாக்கியம். A gang rape survivor sets afire.
‘Gang’ என்பதற்கும் group என்பதற்கும் வேறுபாடு உண்டு. ‘Group’ என்பது ஒரு குழு, அவ்வளவுதான். ‘Gang’ என்பதும் குழுதான். என்றாலும் அது எதிர்மறைப் பொருள் கொண்டது. அது குற்ற இயல்பு உடையவர்களின் குழு. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் குழு. வம்புக் குழு, அடாவடியான குழு எனலாம்.
‘Gang rape’ என்பது குற்ற இயல்பு கொண்டவர்கள் குழுவாகச் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்வதைக் குறிக்கிறது. ‘Survive’ என்பது வாழ்தலை குறிக்கிறது என்றாலும் அதற்கு வேறொரு ஆழமான பொருள் உண்டு. ஒரு ஆபத்தான சூழ்நிலை நிலவுகிறது அல்லது ஒரு பெரும் இடர்ப்பாடு நேர்ந்துவிட்டது. அதைத் தாண்டியும் (அதற்குப் பிறகும்) தொடர்ந்து வாழ்தலை ‘survive’ என்கிறார்கள். அப்படி வாழ்பவரை ‘survivor’ என்கிறார்கள்.
The child was born with a lung problem and still it survived for many years. He is survived by his wife என்றால் அது கணவன் இறந்து விட்டதையும் அதன் பிறகு மனைவி உயிர் வாழ்வதையும் குறிக்கிறது.
‘Set fire’ அல்லது ‘set afire’ என்றால் தீயிடுவது. அதாவது தற்செயலாக அல்லாமல் வேண்டுமென்றே ஒன்றை எரிப்பது. ‘Set afire’ என்பதை ‘set ablaze’, ‘set ablaze’ என்றும் குறிப்பிடலாம்.
‘Ignite’, ‘burn’ ஆகியவையும் இதைக் குறிப்பவையே. செய்தி வாக்கியத்தில் அந்தப் பெண் எதை எரிக்கிறாள் என்று குறிப்பிடப்படவில்லை எனினும் (herself என்ற வார்த்தை இல்லாமலேயே) அது அவள் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டதை உணர்த்துகிறது.
(தொடரும்)
ஜி.எஸ்.எஸ்., aruncharanya@gmail.com