Published : 20 Oct 2020 09:54 AM
Last Updated : 20 Oct 2020 09:54 AM

இணையவழி சட்ட உதவி: கல்லூரி மாணவியின் புது முயற்சி!

தாங்கள் படிக்கும் படிப்பு, செய்யும் தொழில் இந்த நாட்டு மக்களுக்குப் பயன்பட வேண்டும் என நினைப்பவர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா.

காந்தி, அம்பேத்கர் என மிகப் பெரிய ஆளுமைகளின் அறிவால் செழித்திருக்கிறது இந்தியா. இந்த அடிப்படையில் படிக்கும் காலத்திலேயே இந்தியச் சட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும் சட்ட நுணுக்கங்களை எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் ‘லா ரிஒயர்டு’ (http://lawrewired.in/) எனும் இணையதளத்தை நடத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த அஸ்வினி. தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலுடன் இயங்கும் ‘ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா’ சட்டக் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு படித்துவரும் மாணவி இவர்.

இந்தியச் சட்டங்கள் குறித்துப் பிறருக்கு உதவும் இத்தகைய இணையதளத்தைச் செயல்படுத்த வேண்டும் என்னும் யோசனை அஸ்வினிக்குத் தோன்றியதற்குக் காரணம், இயல்பிலேயே எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம்தான் என்கிறார்.

சிறு வயது எண்ணம்

“பள்ளிகளில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை ஒருங்கிணைப்பது, மாணவிகளிடம் மாதவிடாய் குறித்த புரிதலையும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவது, பள்ளிகள், தன்னார்வ அமைப்புகளுக்குச் சென்று சைபர் புல்லியிங், ஆன்டி புல்லியிங் பற்றிப் பேசுவது, மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குழந்தைகளுக்குத் தன்னார்வப் பணி செய்வது போன்றவற்றைச் சிறு வயதிலிருந்தே மிகவும் ஈடுபாட்டுடன் செய்துவந்தேன்.

சட்டம் படிக்கும் மாணவியானபோது இவை குறித்த அக்கறை மேலும் அதிகரித்தது. ‘வேர்ல்டு லிட்டரசி ஃபவுண்டேஷனு’டைய இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதராக இந்த ஆண்டு என்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். நான் சட்ட மாணவி என்பதால் பள்ளிகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்கேற்கும்போது சட்டம் குறித்து நிறைய கேள்விகளைக் கேட்பார்கள். இதை எல்லாம் மனத்தில் வைத்து ஏதாவது செய்ய வேண்டும் என்னும் உந்துதலுடன் தொடங்கியதுதான் ‘லா ரிஒயர்டு’ இணையதளம்” என்கிறார் அஸ்வினி.

படித்தவர்களின் தடுமாற்றம்

இந்த இணையதளத்தில் வணிகச் சட்டம், அரசியலமைப்பு, தண்டனை, சைபர் குற்றங்கள், சூழலியல், குடும்பம், அறிவுசார் சொத்துரிமை, தொழிலாளர் நலம், சொத்துரிமை உள்ளிட்ட பல வகைச் சட்டங்களைப் பற்றிய விவரங்கள் உள்ளன.

“எல்லாருமே நிறைய படித்திருந்தாலும், ஏதாவது பிரச்சினை வரும்போது சட்டம் சார்ந்த விஷயங்களை எங்கிருந்து தொடங்குவது, என்ன செய்வது என்கிற தடுமாற்றம் இருப்பதைக் கவனித்தேன். இதிலிருந்துதான் சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சட்டத்தைப் பற்றிய சிறிய அறிமுகத்தை எளிமையாகக் கொடுப்பதற்கு ஒரு இணையதளத்தைத் தொடங்க நினைத்தேன்.

நான் சட்டம் படிக்கும் மாணவியாக இருப்பதால், சட்டத்துக்கான ஒரு இணைய தளம் தொடங்கும் என்னுடைய யோசனையைப் பற்றிச் சட்டம் படித்துக்கொண்டிருக்கும் நண்பர்களிடம் பேசினேன். அவர்களில் ஒரே மாதிரியான கருத்துடைய நண்பர்களின் உதவியுடன் இந்த இணையதளத்தை நடத்திவருகிறேன். இதில் அனுஷா டே (ஹெட் ஆஃப் ஆபரேஷன்ஸ்), மொரீஷியஸிலிருந்து கிரிஷா மோஜி (சோஷியல் மீடியா மேனேஜர்), ரித்தி ஜன்கம் (கண்டென்ட் மேனேஜர்) ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர். நான் இந்த இணையதளத்தின் நிறுவனர் - தலைமை செயல் அலுவலர்” என்கிறார் அஸ்வினி. இவர்களுடன் சேர்த்து இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து 22 மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மூன்று பிரிவுகள்

‘லா ரிஒயர்டு’ இணையதளத்தை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். ஒன்று, சட்டம் தொடர்பாக எழும் சந்தேகங்களை, அடிக்கடி கேட்கப்படும் கேள்வி - பதில் வடிவில் கொடுத்திருக்கிறோம். அத்துடன், குறிப்பிட்ட சட்டம் தொடர்பான எளிய விளக்கத்தையும் தந்திருக்கிறோம். இரண்டாவது, ‘கேஸ் அனாலிசிஸ்’ என்னும் பகுதி. இதில் குறிப்பிட்ட ஒரு வழக்கின் சாராம்சம் என்ன, அதில் வாதி, பிரதிவாதி வழக்கறிஞர்களின் வாதம், அவர்கள் தரும் ஆதாரங்கள், இதற்கு முன்னதாக இப்படிப்பட்ட வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை அடிப்படையாகக்கொண்டு, தற்போதைய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட முறை ஆகியவற்றை விவரித்திருப்போம்.

மூன்றாவதாக பிளாக் செக் ஷன். இதை நாங்கள் இன்னும் பதிவேற்றவில்லை. இதில் நடைமுறையில் இருக்கும் பல்வேறு துறை சார்ந்த வழக்குகளைப் பற்றிய விவரங்கள் பதிவேற்றப்படும். எடுத்துக்காட்டாக, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிக்கு இருக்கும் சட்ட உரிமைகள் என்னென்ன, தனித்தனியாக இயங்கும் ஒரே துறை சார்ந்த நிறுவனங்களை ஒரே நிறுவனத்தின்கீழ் ஒன்றிணைக்கும்போது நிறுவனங்கள் எத்தகைய பாதிப்புகளைச் சந்திக்கும் என்பது போன்ற விஷயங்களை இந்தப் பிரிவில் பதிவேற்ற இருக்கிறோம். இதில் முக்கியமான வழக்குகள், முக்கியமான தீர்ப்புகள் இடம்பெற்றிருக்கும். எங்களுக்குப் பிடித்த சில டிரெண்டியான லீகல் டாபிக், வழக்குகளையும் இதில் உடனுக்குடன் பதிவேற்றும் யோசனையும் இருக்கிறது.

எளிய எடுத்துக்காட்டுகள்

வழக்கின் தன்மையை விவரிக்க ஃபுளோ சார்ட், ஓவியங்கள் போன்றவற்றையும் பயன்படுத்துவோம். லாக்டவுன் நேரத்தில் கல்லூரிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு எதிரான சட்டபூர்வமான உதவியை பலர் எங்களிடம் கேட்டனர். எப்படி இதை வழக்காக எடுத்துச் செல்வது என்பதை அவர்களுக்கு விளக்கினோம். அவர்களுக்கு வழக்கறிஞர்களை நாங்கள் அறிமுகப்படுத்துவதில்லை. ஆனால், வழக்கில் என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறோம். அதேபோல் சிவில் பிரிவுகளில் நிறைய கேள்விகள் எங்களுக்கு வரும். குடும்பத்தில் கணவன் - மனைவி உறவுச் சிக்கல் குறித்தும் நிறைய கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஐ.நா.வின் கொள்கைகள்

எளிய மனிதர்களும் புரிந்துகொள்ளும் வகையில் துறை சார்ந்த ஒரு விஷயத்தை வடிவமைப்பதன் மூலமும் செயல்படுத்துவதன் மூலமும் கல்வியின் தரத்தை உயர்த்த முடியும் என்கிறது ஐக்கிய நாடுகள் அவை. எங்கள் குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் பெண்களே. ஆண்களும் உண்டு. இதன்மூலம் பாலின சமத்துவத்துக்கும் நாங்கள் பங்களித்திருக்கிறோம்.

ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தியுள்ள எஸ்.டி.ஜி. (நிலைத்த மேம்பாட்டு இலக்குகள்) பட்டியலில் உள்ள குறிக்கோள்களில் இரண்டை முக்கிய ஆதாரமாகக்கொண்டு இந்த இணையதளத்தை உருவாக்கியிருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறோம். ஒன்று, தரமான கல்வி, இன்னொன்று, பாலினச் சமத்துவம்” என்கிறார் அஸ்வினி பெருமிதத்துடன்.


Sign up to receive our newsletter in your inbox every day!

 
x