Last Updated : 19 Mar, 2016 11:24 AM

 

Published : 19 Mar 2016 11:24 AM
Last Updated : 19 Mar 2016 11:24 AM

கூடுதலாகக் கடன் பெற வழி என்ன?

வீடு கட்ட வேண்டும் என்று ஒரு குடும்பத்தில் முடிவு செய்தால் முதலில் என்ன செய்வார்கள்? வங்கிக் கடன் எவ்வளவு கிடைக்கும் என்றுதான் கணக்குப் போடுவார்கள். எதிர்பார்க்கும் கடன் கிடைக்கவில்லையென்றால் எஞ்சிய தொகைக்கு என்ன செய்யலாம் என்று மண்டையைக் குழப்பிக்கொள்வார்கள். ஆனால், வீட்டில் கணவன், மனைவி என இரண்டு பேருமே வேலைக்குப் போனால் இப்படியெல்லாம் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை. இருவரின் சம்பளத்தையும் கணக்கில் காட்டி அதிகமாக வீட்டுக் கடனை வாங்கிவிடலாம்.

வீட்டுக் கடன் கேட்டு வங்கிகளை அணுகும்போது முதலில் கடன் கேட்பவரின் வருவாயைத்தான் வங்கிகள் பரிசீலிக்கும். ஈட்டும் வருவாய், வயது எனச் சில விஷயங்களைக் கருத்தில்கொண்டுதான் வீட்டுக் கடனை நிர்ணயிப்பார்கள். கணவன் மட்டுமே ஈட்டும் வருவாயைக் கொண்டு வழங்கப்படும் வீட்டுக் கடன் போதுமானதாக இல்லை என்று கருதினால், மனைவியை இணைத்துக்கொண்டும் கூடுதல் வீட்டுக் கடன் கேட்கலாம். ஆனால், அதற்கு மனைவி வேலைக்குச் சென்று வருவாய் ஈட்ட வேண்டும். ஒரு வேளை மகன் வேலைக்குச் சென்றால் தந்தை - மகன் வருவாயைக் காட்டி கூடுதல் வீட்டுக் கடன் கேட்கலாம்.

வங்கிகளில் கேட்ட கடனைக் கொடுக்காமல் இருப்பதற்குக் காரணங்கள் இல்லாமல் இல்லை. கடன் வாங்குபவர் அதைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்குப் பொருளாதார வசதி இருக்க வேண்டுமில்லையா? கூடுதலாகக் கொடுத்துவிட்டுப் பிறகு கட்ட முடியாமல் போனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்காகவே வங்கிகள் எதிர்பார்க்கும் கடனைக் கொடுப்பதில்லை. அதே சமயம் கடனைத் திருப்பிச் செலுத்தும் அளவுக்குக் குடும்பத்தில் வருவாய் இருக்கிறது என ஆதாரம் காட்டினால் கூடுதலாகக் கேட்கப்படும் கடன் கிடைத்துவிடும்.

கணவன்-மனைவி அல்லது தந்தை-மகன் எனக் கூட்டாகச் சேர்ந்து கடன் வாங்கினால் விரைவாகத் தவணையைச் செலுத்த வேண்டும் என்றில்லை. கூட்டு வீட்டுக் கடனை தவணையாகச் செலுத்த 5 முதல் 25 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொடுப்பதற்கான வசதிகள் இருக்கின்றன. வயது, பொருளாதர நிலைமை, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வருடம் என இதையும் கணக்கில் கொண்டு தவணையைச் செலுத்தக் கால அவகாசம் வழங்குவார்கள். 25 வயதில் கடன் வாங்கினால் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரைகூடக் கால அவகாசம் கிடைக்கும். ஆனால், 50 வயதில் கடன் வாங்கினால், அதை வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். எனவே இந்தச் சூழ்நிலையில் செலுத்தும் மாதத் தவணைத் தொகை அதிகமாகிவிடும்.

ஆண்டு அதிகமாக இருந்தால் மாதத் தவணை குறைவாக இருக்கும். ஆண்டுகள் அதிகமாக இருக்கிறது என்பதற்காக சாவகாசமாகத் தவணையைச் செலுத்த நினைக்கக் கூடாது. தவணைத் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். இதில் மொத்தமாகச் செலுத்தும் தவணைத் தொகையைச் சேர்த்துப் பார்த்தால் அதிகத் தொகை கட்ட வேண்டிய நிலை வந்துவிடும். அதனால் தேவையில்லாமல் நீண்ட காலத் தவணையைத் தேர்வு செய்யாமல் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப முடிவு எடுப்பது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x