Last Updated : 13 Jun, 2015 01:10 PM

 

Published : 13 Jun 2015 01:10 PM
Last Updated : 13 Jun 2015 01:10 PM

நாளைய நகரம்: திருநெல்வேலிக்கு வரும் ஸ்மார்ட் சிட்டி- வளம் பெறுமா ரியல் எஸ்டேட்?

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகளை அமைக்க ஒப்புதல் அளித்தது. வரும் ஜூன் 25-ம் தேதி முறையாக பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைக்க இருக்கிறார்.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் ஆறு பெருநகரங்களிலும் ஸ்மார்ட் சிட்டிகள் அமையவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் ஒன்று திருநெல்வேலி.

திருநெல்வேலி தென் தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம். வற்றாத ஜீவ நதியான தாமிபரணியும் நெல்லையப்பர் கோயிலும் திருநெல்வேலியின் பழமையான அடையாளங்கள்.

திருநெல்வேலியில் இருக்கும் பள்ளிகளும் கல்லூரிகளும் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டுக்கு இணையான அதன் கல்விச் சிறப்பைப் பறைசாற்றுபவை. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே நிர்வாகத் தலைநகராகவும் திருநெல்வேலி இருந்துவருகிறது.

இந்தப் பாரம்பரிய நகர் ஸ்மார்ட் சிட்டியின் வருகையால் புதுமையைச் சூடவுள்ளது. சங்கர் சிமெண்ட் ஆலை தவிர்த்து பெரிய தொழில்கள் இல்லாத ஊரில் தொழில் வளம் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அருகில் உள்ள ஊர்களுக்கான வர்த்தக மையமாகவுள்ள திருநெல்வேலி தென் தமிழகத்தின் தொழில் மையமாகவும் மாறும் வாய்ப்புள்ளது.

நம்பிக்கையூட்டும் திட்டம்

வேலைவாய்ப்புத் தரும் தொழில்கள் பெரிதாக இல்லை திருநெல்வேலியில் இல்லை. இந்த வேளையில் நாங்குநேரியில் டைடல் பார்க் அமையவிருப்பதாகத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கங்கைகொண்டானிலும் தொழில் மையம் அமையவிருப்பதாக அறிக்கை வெளியானது. நாகர்கோயில் சாலையில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இவை எதுவும் நிறைவேறாத பகல் கனவாகக் கிடப்பிலேயே உள்ளன.

ஆனாலும் தொழில், வேலையின் பொருட்டு பக்கத்து ஊர்களில் இருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இவர்களுக்கு வீட்டு வசதித் தேவையை நிறைவேற்றும் பொருட்டுதான் திருநெல்வேலிப் புறநகரில் ரியல் எஸ்டேட் தொழில் வளர்ந்தது.

ஆனால் “ஆற்று மணல் தட்டுப்பாடு, கட்டுமானப் பொருள்களின் கட்டுக்கடங்காத விலையேற்றம் ஆகிய காரணங்களால் ரியல் எஸ்டேட் தொழில் சரிவடையத் தொடங்கியது” என்கிறார் திருநெல்வேலி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜிம்மி கார்ட்டன்.

“இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் சோர்வடைந்துள்ள திருநெல்வேலி ரியல் எஸ்டேட்டுக்க்ப் புத்துணர்ச்சி அளிக்கும்” என்கிறார் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினரான என். இசக்கி. ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்தால் கட்டுமானத் துறை மட்டுமல்லாது பலவிதமான தொழில்களும் வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளது.

மக்களின் வாழ்க்கைத் தரமும் உயரும் வாய்ப்புள்ளது எனக் கருத்துத் தெரிவிக்கும் ஜிம்மி கார்ட்டன், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் வந்தால் தண்ணீர்த் தட்டுப்பாடும் மின் தட்டுப்பாடும் குறையும் எனச் சொல்லப்படுகிறது. இது நகர வளர்ச்சிக்கு முக்கியமான விஷயங்கள்” என்கிறார்.

ஸ்மார்ட் சிட்டி திருநெல்வேலியில் எங்கு அமையப் போகிறது என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் ஸ்மார்ட் சிட்டி வைத்து நலிவடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் துளிர் விடும் என அத்துறைசார் வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

“ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் கட்டுமானத் தொழில் வளம் பெற கட்டுமானப் பொருள்களின் விலையை அரசு கட்டுக்குள் வைக்க வேண்டியது அவசியம். கட்டுமானப் பொருள்கள் விலையேற்றத்தில் அரசு ஓர் ஒழுங்குமுறையைக் கொண்டுவர வேண்டும்.சிமெண்ட் விலையைப் பொறுத்தமட்டில் ஓர் ஆண்டில் பல முறை விலையேறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

இதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்கள்தான். அதனால் அரசு தலையிட்டு கட்டுமானப் பொருள்களில் விலையை ஆண்டுக்கு முறைதான் உயர்த்த வேண்டும் என ஒழுங்குபடுத்தினால் மட்டுமே கட்டுமானத் துறை வளரும். அதுபோல அறிவிக்கப்படும் அரசு திட்டங்கள் ஒழங்காக நிறைவேற்றப்படவும் வேண்டும்” எனக் கருத்துத் தெரிவிக்கிறார் இசக்கி.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசுத் திட்டங்களால் ரியல் திட்டங்கள் வந்தபாடில்லை. ஆனால் திட்டம் வருகிறது என விளம்பரப்படுத்தி நில மதிப்பு மட்டும் உயர்ந்திருக்கிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டமும் அந்தக் கணக்கில் ஒன்றாகக் கூடாது என்பதே திருநெல்வேலி மக்களின் விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x