Last Updated : 27 Jan, 2018 10:04 AM

 

Published : 27 Jan 2018 10:04 AM
Last Updated : 27 Jan 2018 10:04 AM

டைல்கள் சொல்லும் சேதி!

 

ன்னதான் சிமெண்ட், செங்கல், கம்பி, மணல் போன்ற கலவைகளால் கட்டிடம் உருவானாலும், அந்தக் கட்டிடத்தை அழகாகக் காட்டுவது டைல்கள்தாம். அந்த வகையில், கட்டிடங்களுக்கு அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன டைல்கள். டைல்களில் பல ரகங்கள் உண்டு. செராமிக், நேச்சுரல் ஸ்டோன், கிளாஸ், மொசைக், போர்சிலின் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், அறைகளுக்கு ஏற்ப டைல்களைத் தேர்வுசெய்வதில்தான் வீட்டு அழகின் ரகசியம் ஒளிந்திருக்கிறது.

வீட்டைக் கட்டும்போதே எந்தெந்தப் பகுதிக்கு எந்தெந்த டைல்களைத் தேர்வு செய்ய வேண்டும் என முடிவெடுப்பது வீட்டின் அழகை மட்டுமின்றி, அதில் வசிக்க உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கான வசதியையும் அதிகரிக்கும். பொதுவாக வரவேற்பறையில் பயன்படுத்த அதிக ஸ்திரத்தன்மை நீடித்த ஆயுள் கொண்ட டைல்களே தேவை. அந்த வகையில் போர்சிலின் (Porcelain) ரக டைல்கள் சிறந்த தேர்வாக இருக்கும்.

செராமிக் டைல் போட்டால் என்ன என்று உங்களுக்குத் தோன்றலாம். போர்சிலின் ரகத்துக்கும் செராமிக் டைல் ரகத்துக்கும் இடையே குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், இவை இரண்டும் ஒன்றுதான் எனப் பலரும் தவறாகவே கருதுகிறார்கள். போர்சிலின் டைல், செராமிக்கைவிட விலை அதிகமானது. தரத்திலும் செராமிக்கைவிடச் சிறந்தது. தண்ணீரைக் குறைவாக உறிஞ்சும் திறன் கொண்டது போர்சிலின். எனவே, போர்சிலின் டைல்ஸ் தரையில் நடப்பவர்கள் எளிதில் வழுக்கி விழ மாட்டார்கள். அந்த வகையில் குளியலறைகளிலும் இந்த டைல்களைப் பயன்படுத்தலாம்.

அடுத்ததாக கிளாஸ் டைல். இந்த டைல் பதிக்கப்பட்ட பகுதியைச் சுத்தப்படுத்துவது எளிதானது. எனவே, பலரும் இதனை சமையலறையை அலங்கரிக்கப் பயன்படுத்துகின்றனர். கிளாஸ் டைல் ரகத்தின் சிறப்பம்சமே, பல வண்ணங்களில், ஓவியங்களில் கிடைப்பதுதான். எனவே, சமையல் அறையில் முதன்மை தேர்வாக இருக்கிறது கிளாஸ் டைல்.

mosaic tile மொசைக் டைல் right

பரவலாகப் பயன்படுத்தப்படும் செராமிக் டைல் விலை குறைவானது. அதே நேரம் வீட்டை அழகாகக் காட்டவும் செய்யும். போர்சிலின் டைல் அளவுக்கு ஈரத்தை உறிஞ்சாது. சமையலறை, குளியலறையில் இதைப் பயன்படுத்த முடியும். பூஜை அறையின் பக்கவாட்டுச் சுவர்களிலும் பயன்படுத்தலாம். குறைவான விலையில் கிடைப்பதால், பட்ஜெட் வீடுகள் கட்டுவோர் அதிகம் பயன்படுத்தும் டைல் வகையாக செராமிக் உள்ளது.

அழகான ஆபரணத்தைக் குறிப்பிட உபயோகிக்கப்படும் பெயரைக் கொண்டிருக்கும் நேச்சுரல் ஸ்டோன் ரக டைல் பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சியளிக்கக்கூடியது. ஆனால், நீடித்து உழைக்கக்கூடியது. வீட்டுக்குள் மட்டுமல்ல; வெளிப்புறப் பகுதிகளிலும் சுற்றுச்சுவரை ஒட்டிய நடைபாதை, தோட்டத்துக்கான வழித்தடங்களிலும் பயன்படுத்த ஏற்றது. நடுத்தர விலைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நேச்சுரல் ஸ்டோன் டைல், அதிக வெப்பம், பனிப்பொழிவைத் தாங்கி நிற்கும் தன்மையுடையது. மற்ற ரக டைல்களைவிட இதன் ஆயுள் அதிகம். இயற்கையான முறையில் உருவாக்கப்படுவதால், இந்த ரக டைல்களில் உருவ அல்லது நிற ஒற்றுமை பெரும்பாலும் இருக்காது.

அந்தக் காலம் காலம் முதலே பயன்படுத்தப்பட்டுவரும் ஒரு ரகம் மொசைக் டைல் வகைகள். வீட்டுக்குள்ளே இயற்கைக் காட்சிகள் அல்லது ஓவியங்களை மாட்டி வைப்பதற்குப் பதிலாக, சுவரில் பதிக்கும் கற்கள் மூலமாக அவற்றை உருவாக்க பயன்படுத்தப்பட்டதுதான் மொசைக் டைல். காலச் சுழற்சி, தொழில்நுட்பத்தின் வளர்ச்சி போன்றவை மொசைக் டைல் தயாரிப்பிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டது. இந்த வகை டைல்கள் வழுக்கும் தன்மை உடையவை. எனவே, குளியலறையின் தரைப்பகுதிக்கு இவற்றை பயன்படுத்துவது ஏற்றதல்ல. அதே நேரம் பூஜைஅறையில் கடவுள் படங்களை ஓவியம் போல் வடிவமைக்கவும், சமையல் அறையில் இயற்கைக் காட்சிகளை உருவாக்கவும் இந்த மொசைக் டைல் ஏற்றது.

தற்போது மொசைக் டைலின் அடுத்த கட்ட முன்னேற்றமான போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல் சந்தைக்கு வந்துவிட்டது. ஒரு ஒளிப்படத்தை பிரிண்ட் செய்தால் எப்படித் துல்லியமாகக் கிடைக்குமோ அதே போல், உங்கள் வீட்டு சுவரிலும் அதன் உருவத்தைப் பதிவுசெய்து விடலாம். குழந்தைகளுக்கான அறையில் அவர்களின் ஒளிப்படத்தை மாட்டி வைப்பதற்குப் பதிலாக அதனை போட்டோ பிரிண்டட் டிஜிட்டல் டைல் மூலம் சுவராகவே உருவாக்கலாம்.

இன்னொன்றை நினைவில் கொள்ளுங்கள். கட்டிடம் நீடித்து உறுதியாக இருப்பதுபோல டைல்கள் இருக்காது. தரம் மற்றும் தன்மையைப் பொறுத்து 15 முதல் 20 ஆண்டுகள்வரையே டைல்கள் தாக்குப்பிடிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x