

‘அவ நல்லா இருக்காளா?’ என முன்னாள் தோழியைப் பற்றிப் பொது நண்பர்களிடம் விசாரிக்கும் ஆண்கள் இருக்கின்றனர். வினாக்கள் அளவுக்கு மீறித் தொடர்ந்தால் ‘நீ உன் வேலைய பாரு மச்சான்’ எனத் திருத்தும் நண்பர்களும் இருக்கின்றனர்.
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷுக்கு அப்படி யாரும் இல்லை போலிருக்கிறது. இருந்திருந்தால், தகவல் பெறும் உரிமை (ஆர்டிஐ) சட்டத்தின்கீழ்த் தன் முன்னாள் தோழி குறித்துக் கேட்டிருக்க மாட்டார்.
எத்தனை பேரை ஏமாற்றியிருக்கிறார்?
முன்னாள் தோழி எங்கே பணிபுரிகிறார், வேறு யாருடனாவது இப்போது பழகுகிறாரா, எத்தனை பேரை அவர் ஏமாற்றியிருக்கிறார், அவருக்குத் திருமணமாகிவிட்டதா...இவை எல்லாம் ஆர்டிஐ மனு போட்டுக் காவல்துறையிடம் சந்தோஷ் கேட்டுள்ள வினாக்கள். இப்படி 97 முறை மனுக்கள் அனுப்பி 1,800க்கும் மேற்பட்ட வினாக்களை அவர் கேட்டுள்ளார்.
இவை மட்டுமல்ல; தோழியின் புகைப் படத்தையும் அவர் கேட்டதாகத் தெரிகிறது. தோழியின் நடமாட்டம் பதிவுசெய்யப்பட்ட சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கேட்டு 168 வினாக்கள் அவரால் கேட்கப்பட்டுள்ளன.