Last Updated : 27 Dec, 2015 12:56 PM

 

Published : 27 Dec 2015 12:56 PM
Last Updated : 27 Dec 2015 12:56 PM

வானவில் பெண்கள்: மயானப் பணியில் பட்டதாரிப் பெண்!

சாதியக் கட்டமைப்புக்குள் சிக்கியிருக்கும் நம் சமூகத்தில் இன்றும்கூட சில வேலைகளை எல்லோரும் செய்துவிடுவதில்லை. அதேபோலப் பெண்களும் கடினமான சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதில்லை. இப்படிப்பட்ட கற்பிதங்களைப் பொய்யாக்கிவிட்டு, சலனமே இல்லாமல் சாதித்திருக்கிறார் நாமக்கல் ஜெயந்தி.

படித்த பெண்கள் பலருக்கும் தாங்கள் விரும்பிய வேலை கிடைப்பதில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆனால் கிடைத்த வேலையை விரும்பிச் செய்துகொண்டிருக்கிறார் ஜெயந்தி. எம்.ஏ. பட்டதாரியான இவர், பிணம் எரிக்கும் பணியைச் செய்துவருகிறார்.

“நாமக்கல் அருகே உள்ள கூலிப்பட்டிதான் சொந்த ஊர். என் தந்தை பட்டுகுருக்கள், முருகன் கோயில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தார். அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றேன். படிப்பு மீது ஆர்வம் அதிகம் என்பதால் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை கல்லுாரியில் சேர்ந்து படித்தேன். பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றேன். அந்த நேரத்தில்தான் எம்.ஏ., பட்டதாரியான வாசுதேவனைச் சந்தித்தேன். எங்கள் நட்பு, காதலாக மாறியது. இருவர் வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் காதலை அங்கீகரிக்கவில்லை. நாங்கள் இருவரும் உறுதியாக நின்று, திருமணம் செய்துகொண்டோம். 15 ஆண்டுகள் ஓடிவிட்டன” என்று நிறைவாகக் கூறுகிறார் ஜெயந்தி.

வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை ஆரம்பித்தவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து, மேலும் இனிமை சேர்த்தன. ஜெயந்தி, வாசுதேவன் இருவரது குடும்பங்களையும் இணைத்தன. குடும்பம் பெரிதானதால் செலவுகளைச் சமாளிக்கக் கணவருக்குத் துணை நிற்கவேண்டும் என்று நினைத்தார் ஜெயந்தி. தையலும் கணிப்பொறியும் படித்து முடித்தார். இரட்டைக் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதால் வீட்டில் இருந்தபடியே துணிகளைத் தைத்துக் கொடுத்தார்.

ஜெயந்திக்குத் திடீரென்று வயிற்றில் கட்டி உருவானது. அறுவை சிகிச்சை மூலம் கட்டி அகற்றப் பட்டாலும் தையல் மிஷினில் உட்கார வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். ஆதரவாக இருந்த தந்தையும் தவறிவிட்டார். இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்துக்கொண்ட பிறகு, இனியும் வீட்டில் இருக்க ஜெயந்திக்கு விருப்பமில்லை. நாமக்கல் நகராட்சி மின் மயானத்தில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஆள் எடுப்பதாகத் தகவல் கிடைத்தது. நேரில் சென்று, வேலையும் வாங்கிவிட்டார். ஆனால் மயானத்தில் வேலை என்றவுடன் வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். இந்த வேலை வேண்டாம் என்று உறுதியாகக் கூறிவிட்டனர்.

“கிடைத்த வேலையை விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எந்த வேலையும் தாழ்ந்தது இல்லை என்று புரிய வைத்தேன். பூங்கா அமைக்கும் பணியில் சேர்ந்தேன். புற்களைப் பராமரிப்பது, செடிகளை நடுவது என்று மூன்று மாதம் தொடர்ந்து வேலை செய்தேன். அந்த வேலை முடிந்த சமயத்தில், பிணம் எரிக்கும் பணிக்கு ஆட்கள் தேடினார்கள். பிணம் எரிக்கும் பணியை யுனைடெட் வெல்வர் டிரஸ்ட் எனும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் நடத்தி வருகின்றனர். அவர்களை அணுகி, அந்தப் பணியில் சேர்த்துக்கொள்ளும்படி கேட்டேன். ஒரு பெண் இப்படிக் கேட்டதில் அவர்களுக்கு அதிர்ச்சி. என் கல்வித் தகுதி, குடும்பப் பின்னணியை அறிந்துகொண்டவுடன் அந்த அதிர்ச்சி பல மடங்காகிவிட்டது. இந்த வேலை வேண்டாம் என்றனர். நான் சிறிதும் விட்டுக்கொடுக்கவில்லை. என் உறுதியைக் கண்டு, பணியில் சேர்த்தனர். 2012-ம் ஆண்டு மின் மயானத்தில் ஆபரேட்டராகச் சேர்ந்தேன். என்னுடன் கலாராணி, சாரதா என்று மேலும் இரு பெண்கள் பணிபுரிகின்றனர். ஆரம்பத்தில் பயமும் தயக்கமும் இருந்தன. பிறகு பிண வாடை உட்பட எல்லாமே பழகிவிட்டது” என்கிறார் ஜெயந்தி.

ஜெயந்தியின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்ட நிர்வாகம், 2013-ம் ஆண்டு அலுவலக மேலாளராகப் பதவி உயர்வு கொடுத்தது. அதன் பிறகும் பிணங்களை எரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார் ஜெயந்தி. எல்லாவற்றையும் புரிந்துகொண்ட கணவர், இதையும் புரிந்துகொண்டார். கார்களை வாடகைக்கு விடும் பணியைச் செய்துவருகிறார். வீட்டில் தற்போது வருமானத்துக்குக் குறைவில்லை. ஆனாலும் தன்னுடைய வேலையை விடுவதாக இல்லை ஜெயந்தி.

“எந்த வேலையையும் நாம் நேசிக்கக் கற்றுக்கொண்டால், மகிழ்ச்சியோடு ஈடுபடலாம். பிணம் எரிப்பதை நான் கடவுளுக்குச் செய்யும் தொண்டாகவே கருதுகிறேன். உறுதியான மனமும் தாராளமான சிந்தனையும் இருந்தால் ஆண்கள் செய்யக்கூடிய அத்தனை வேலைகளையும் பெண்களாலும் செய்ய முடியும்” என்று ஜெயந்தியைத் தவிர வேறு யாரால் இத்தனை உறுதியாகச் சொல்ல முடியும்!

படங்கள்: கி.பார்த்திபன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x