Published : 05 Apr 2020 09:27 AM
Last Updated : 05 Apr 2020 09:27 AM

களத்தில் பெண்கள்: கரோனாவிலிருந்து காக்கும் கரங்கள்

எல்.ரேணுகாதேவி

ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்த உலகத் தைக் கண்ணுக்குத் தெரியாத கரோனா வைரஸ் முற்றிலுமாக முடக்கியுள்ளது. மக்களைக் காப்பாற்ற தங்களுக்கு உள்ள ஆபத்தைப் பற்றி அஞ்சாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றவும் இந்த நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கவும் பாதுகாப்புக் கவசமாக மருத்துவத் துறையினர் மாறியுள்ளனர்.

கரோனா தொற்றால் உயிரிழப்பு குறைவு என்றாலும் மனிதர்களிடம் அது ஏற்படுத்தும் பாதிப்பு அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவத் துறையினர் மானுடத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கினாலும் ஏப்ரல் 1-ம் தேதிவரை 234 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் குடும்பத்தினர், குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் எனத் தன்னை நேசிக்கும் சுற்றத்தை விட்டு நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும் என முழுமூச்சுடன் செயல்பட்டு வருகின் றனர் தமிழக மருத்துவத் துறையினர்.

துணிவுடன் இருக்கிறோம்

தமிழகத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவருக்குத்தான் முதலில் கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனே சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டார். முதல் கரோனா நோயாளியை எதிர்கொண்டவர்களில் ஒருவர் மருத்துவமனை யின் செவிலியர் கண்காணிப்பாளர் பிரஸில்லா. தன்னைச் சிறுவயதில் நோயிலிருந்து காப்பாற்றிய செவிலியர்போல், தானும் ஒருநாள் செவிலியாகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் 30 ஆண்டுகளாகச் செவிலியராக இவர் பணிபுரிந்துவருகிறார். இந்த ஆண்டுடன் பணிநிறைவு பெறவுள்ள அவர், கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சேவைசெய்வதுதான், தன் இத்தனை ஆண்டுகாலப் பணியில் கிடைத்த மிகச் சிறந்த வாய்ப்பு என்கிறார்.

“கரோனா வைரஸ் பரவல் தொடங்கியவுடன் உண்மையில் எங்களுக்குப் பயமாகத்தான் இருந்தது. நோயாளிகளிடமிருந்து எங்களுக்கு நோய்த்தொற்று பரவினால் என்ன செய்வது என்ற கலக்கத்துடன் இருந்தோம். பிறகு மருத்துவர்கள் எங்களை மனத்தளவில் திடப்படுத்தினார்கள். எங்களுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்கள் வரவழைக்கப்பட்டன.

அப்போதுதான் கரோனாவால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் எங்கள் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டவுடன், உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். திடீரெனத் தனிமைப்படுத்தப்பட்டதால் அவர் மனத்தளவில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக எப்போதும் அவரிடம் ஊக்கமான வார்த்தைகளைப் பேசிக்கொண்டே இருப்போம்.

தனியறையில் அவருடைய மனைவியையும் கவனமாகப் பார்த்துக்கொண்டோம். குடும்ப உறுப்பினரைப் போல் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தோம். அவர் நலம்பெற்று வீடு திரும்பியபோது, ஏதோவொரு பெரிய விஷயத்தைச் சாதித்ததுபோல் எங்களுக்குத் தோன்றியது. தற்போது கரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

எங்களுடைய வேலை நேரமும் அதிகரித்துவிட்டது. இத்தனை ஆண்டுகளில் பலவிதமான நோயாளிகளை நான் சந்தித்துள்ளேன். ஆனால், அவற்றில் கிடைக்காத மனநிறைவு, இப்போது கரோனா நோயாளிகளுக்கு உதவும்போது கிடைக்கிறது” என ஆபத்தான காலகட்டத்தையும் தன்னுடைய சேவைக்குக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறார் பிரஸில்லா.

தாய் சேய் நலனுக்காக

கோவிட் 19 போன்ற உலகளாவிய தொற்றுநோயால் மக்கள் பாதிக்கப்பட்டால், அவர்களைக் காக்கும் தூண்களாக அரசு மருத்துவமனைகளே செயல்படுகின்றன. ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வரும் அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிலும் எழும்பூரில் செயல்பட்டுவரும் அரசு மகப்பேறு மருத்துவமனை, இந்த கரோனா பேரிடர் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது.

“கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் கர்ப்பிணிகளைப் பாதுகாப்பது முக்கியம். மற்றவர்களைவிட அவர்கள் கூடுதலாகப் பயப்படுவார்கள். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தற்போது 600 பெண்கள் உள்நோயாளிகளாக உள்ளனர். ஒவ்வொரு தாயையும் பச்சிளம் குழந்தையையும் கரோனா தொற்று ஏற்படாமல் காப்பது, எங்கள் முன் உள்ள சவாலான பணி” என்கிறார் மருத்துவமனையின் தலைவர் விஜயா.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதால், முன்தயாரிப்புடன் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இதற்காகப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சிறப்பு வார்டு உருவாக்vகப்பட்டுள்ளது. அதேபோல் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஒரே நேரத்தில் மூன்றிலிருந்து ஐந்து பெண்களுக்குப் பிரசவம் பார்ப்பதற்கான முன்னோட்டத் திட்டத்தையும் செயல்படுத்தத் தயாராக உள்ளனர்.

மருத்துவர்களின் மன உறுதி

காசநோய், பன்றிக் காய்ச்சல், எய்ட்ஸ் போன்றவையும் வைரஸ் தொற்றால் ஏற்படுபவை என்றாலும், கரேனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கம் உலக அளவில் மிகப் பெரியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் மருத்துவர்களும், முதுநிலை மருத்துவ மாணவர்களும் கரோனா நோயாளிகளைக் காப்பாற்றும் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், தங்களை முழுமையாக நம்பும் மக்களைக் கைவிடாத காக்கும் கரங்களாக அவர்கள் உள்ளனர். காய்கறி வாங்கச் சென்றாலே கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிறோம். ஆனால், கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைத் தொட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் பணியை, வேறு எதற்கும் நிகராகக் கூற முடியாது.

“மருத்துவர்களான எங்களுக்கு எப்போது வேண்டுமானலும் நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையில்தான் பணியாற்றுகிறோம். அதற்காக ஒரு மருத்துவர் தன்னுடைய பணியைச் செய்யாமல் இருக்க முடியாது, இல்லையா? அச்சமாக இருந்தாலும் நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டியது மருத்துவரின் கடமை என்பதைத்தான் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பு அம்சங்களுடன் பரிசோதனை செய்துவருகிறோம். இந்த கரோனா தொற்றில் எங்களைவிட எங்கள் குடும்பத்தினரின் மன உறுதிதான் முக்கியமானது. அதிலும், பெண் மருத்துவர்கள் இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் மிகவும் தைரியத்துடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுகிறார்கள். குழந்தைகள், கணவர், குடும்பம் எனப் பொறுப்புகள் இருக்கும்போதிலும், இந்த ஆபத்தான சூழ்நிலையில் பெண் மருத்துவர்கள் சமூகத்துக்காகப் பணியாற்றுவது என்னைப் போன்ற ஏராளமான மருத்துவர்களின் தைரியத்தை அதிகப்படுத்தியுள்ளது” என்கிறார் அறந்தாங்கியைச் சேர்ந்த தோல் நோய் மருத்துவர் ச.தட்சணாமூர்த்தி.

ஒன்றிணைந்து வெல்வோம்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒருவார காலம் தொடர்ச்சியாகக் கவனித்துவந்தவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை செவிலியர் காளியம்மாள். மருத்துவமனையிலேயே ஒரு வாரம் தங்கி நோயாளிகளை அவர் கவனித்துக்கொண்டார். “கரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர் தலை முதல் கால்வரை முழுவதுமாகப் பாதுகாப்பு உடையை அணிந்திருக்க வேண்டும். சாப்பிட வேண்டும் என்றாலோ கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்றாலோ அணிந்திருக்கும் பாதுகாப்பு ஆடையை கழற்றி ரசாயன நீரில் ஊறவைத்துவிட்டு செல்ல வேண்டும். மாற்றுப் பாதுகாப்பு ஆடையை அணிந்துகொண்டுதான் மீண்டும் நோயாளி அருகில் செல்ல வேண்டும்.

இந்தச் சூழ்நிலை எங்களுக்கு மனத்தளவிலும் உடலளவிலும் சோர்வை ஏற்படுத்தினாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. எளிதாகத் தொற்றிக்கொள்ளும் இந்த கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்தப் பணியை நெருக்கடியாகக் கருதாமல் சமூகத்துக்கு நன்மைசெய்வதாக நினைத்து செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கரோனாவிலிருந்து மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குவதே எங்கள் முன்னால் உள்ள முக்கியப் பணி” என்கிறார் காளியம்மாள்.

ஒட்டுமொத்தச் சமூகத்தின் ஒத்துழைப்பும் ஒன்றிணைந்தால் கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். இதை உணர்ந்து அரசும் அனைத்துத் தரப்பு மக்களும் செயல்பட வேண்டும் என்பதே கரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவத் துறையினரின் ஒரே கோரிக்கை.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x