Last Updated : 26 Jan, 2014 11:56 AM

 

Published : 26 Jan 2014 11:56 AM
Last Updated : 26 Jan 2014 11:56 AM

ஒரு கார்ட்டூனிஸ்ட்டின் மறுபாதி

தன் கார்ட்டூன்களுக்காகச் சர்வதேச அளவில் பிரபலமானவரும் பத்மபூஷண் விருது பெற்றவருமான ஆர்.கே. லக்ஷ்மணின் மறுபாதியான கமலா லக்ஷ்மணைப் பற்றிப் பெரிதாக வெளியே தெரியாது. தமது சொந்த மாமாவான ஆர்.கே.லக்ஷ்மணை கமலா மணமுடித்து இருக்கிறார். இவர்களது ஒரே மகன் ஸ்ரீனிவாஸ் லக்ஷ்மண், விண்வெளி இயல் நிபுணர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

கமலாவின் பூர்வீகம், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு. பிறந்தது, கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர். இந்தியாவிலுள்ள பல இடங்களிலும் படித்து வளர்ந்தவர். 88 வயதாகும் கமலா லக்ஷ்மண், இந்த வயதிலும் பல விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறார். இப்பொழுதும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.

கமலா லக்ஷ்மண் மும்பையில் வசித்துவந்த காலகட்டத்தில், மஹாலக்ஷ்மி கிளப் என்ற பெயரில் ஒரு லேடீஸ் கிளப்பை நடத்திவந்தார். அச்சங்கத்தின் கிளைகள் புனே, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை என்று பல நகரங்களில் இப்போது பிரபலமாகிவிட்டதாம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் கமலா தொடங்கிய இந்தச் சங்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற பல மொழி உரையாடல்களை ஒரே நேரத்தில் கேட்கலாம்.

இந்தச் சங்கங்களில் மாதம் இரு முறை நாட்டியம், இசை போன்ற கலை நிகழ்ச்சிகளும், பிரபலப் பேச்சாளர்களின் உரைகளும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சங்கங்களுக்குக் கமலா லக்ஷ்மண் ஆயுட்காலத் தலைவியாக இருந்துவருகிறார். எல்லா மாநிலத்தவர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட இந்தச் சங்கம், ஒரு காஸ்மோபாலிடன் லேடீஸ் கிளப்தான்.

‘தம்மா’ (THAMMA) என்ற பெயரில் ஒரு குட்டி யானை கதாபாத்திரத்தை உருவாக்கி, குழந்தைகளுக்காக எட்டு கதைகளை இவர் எழுதியிருக்கிறார். எழுபதுகளின் மத்தியில், குழந்தைகளுக்காகப் புத்தகம் எழுதுமாறு இண்டியா புக் ஹவுஸ் நிறுவனம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பல புத்தகங்களைக் கமலா எழுதியிருக்கிறார். அந்தப் படைப்புகளுக்கெல்லாம், தனது வரிகளால் உயிரூட்டியவர் ஆர்.கே.லக்ஷ்மண். இந்தப் படைப்புகளை எழுத எனக்குத் தூண்டுகோலாக இருந்து தொடக்க முயற்சி செய்தவர் ஆர்.கே. லக்ஷ்மண்தான் எனப் பெருமையுடன் குறிப்பிடுகிறார் கமலா.

அதேபோலத் தனது மருமகள் உஷா லக்ஷ்மண், மும்பையில் சமீபத்தில் நடத்திய ஆர்.கே. லக்ஷ்மணின் தேர்ந்தெடுத்த கார்ட்டூன்கள் கண்காட்சியையும் தன்னால் மறக்கவே முடியாது என்கிறார். “அந்தக் கேரிகேச்சர்களின் அழகிய தொகுப்பு என்னை அசத்திவிட்டது. ஐ.சி.எஸ்ஸாக இருந்த என் தந்தை எஸ்.ஏ.வெங்கட்ராமனுக்கு, என் கணவர் லக்ஷ்மண் அன்பளிப்பாகக் கொடுத்திருந்த அந்த 60 கார்ட்டூன்களையும் தேடியெடுத்து, மும்பை நேரு சென்டரில் உஷா கண்காட்சியாக வைத்திருந்தது பெருமை தந்தது” என்கிறார் இவர்.

அரசியலில் ஆர்வமில்லை என்றாலும், "எனக்குப் பிடித்த பிரதமர் மன்மோகன் சிங்தான்; அவர் கண்ணியமான மனிதர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலும் நேர்மையானவர், லஞ்ச ஊழலை ஒழிக்க விரும்புகிறார். அது சிறப்பான கொள்கை; நல்லதுதானே” என்கிறார். இன்று நம் நாட்டுக்குத் தேவை நேர்மையான அரசியல்வாதிகள்தான் என்பது இவரது உறுதியான கருத்து.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x