Last Updated : 11 Nov, 2018 10:20 AM

 

Published : 11 Nov 2018 10:20 AM
Last Updated : 11 Nov 2018 10:20 AM

போகிற போக்கில்: பொருள் பழசு சித்திரம் புதுசு

வீட்டுப் பாடத்தை எழுதிக்கொண்டிருக்க பக்கத்தில் அமர்ந்து புள்ளிக்கோலம் போட்டுப் பழகிக்கொண்டிருக்கிறார் எண்பது வயதான ஸ்ரீரங்கா. சென்னை பெரம்பூரில் உள்ள செம்பியம் பகுதியில் வசித்துவரும் இவர், தள்ளாத வயதிலும் நுணுக்கமான அப்லிக் கலையைச் சிறப்பாகச்  செய்துவருகிறார்.

புத்தாண்டு பிறந்துவிட்டால் மதிப்பிழக்கும் பொருட்களில் காலண்டருக்கு முதலிடம். ஆனால், கடவுள் உருவங்கள் அச்சிடப்பட்டிருக்கும் பழைய காலண்டர்கள்தாம் ஸ்ரீரங்காவின் அப்லிக் வேலைக்கு ஆதாரமாக உள்ளன. அப்லிக் கலைக்குத் தேவையான பொருட்களைப் பலரும் கடைகளில் தேடித் தேடி வாங்குவார்கள்.

ஆனால், இவரோ இதுவரை எந்தப் பொருளையும் கடைகளில் வாங்கியது கிடையாது. வீட்டில் வீணாகும் கிஃப்ட் கவர், அறுந்த மணிகள், குழந்தைகளுடைய பழைய துணியில் உள்ள பட்டன்கள், லேஸ், ரிப்பன், கம்பளித் துணி, பழைய புடவைகளின் ஜரிகை ஆகியவற்றைக் கொண்டு கைவினைக் கலையில் அசத்துகிறார்.

“நான் கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்த பெண்ணு. இப்போ மாதிரி அந்தக் காலத்தில் குழந்தைகளுக்குக் கேட்டதையெல்லாம் வாங்கித்தரும் பழக்கமில்லை. அதனால் வீட்டுல என்ன பொருள் கிடைக்குமோ அதைவைத்தே கைவேலைப்பாடுகளைச் செய்வேன். கைவினைக் கலை மீது எனக்கு ஆர்வம் ஏற்பட என்னுடைய அம்மாதான் காரணம். அவங்ககிட்ட இருந்துதான் புள்ளிக் கோலம் போடக் கத்துக்கிட்டேன்.

பிறகு ரங்கோலி, சமையல், நாட்டு மருந்து, ஓவியம் வரைவது, கைவினைப் பொருட்களைச் செய்வதுன்னு படிப்படியா பலவற்றைக் கற்றுக்கொண்டேன். அதேபோல் எனக்கு எதையும் வீணாக்கப் பிடிக்காது. பிள்ளைகளுக்குப் பரிசாக வரும் பொருட்களைச் சுற்றியிருக்கும் காகிதங்களைக்கூடப் பத்திரமாக எடுத்துவைத்து பின்னர் அப்லிக் வொர்க் செய்யும்போது பயன்படுத்திக்கொள்வேன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் அப்லிக் வொர்க் செய்திருக்கேன்” என நினைவுகூர்கிறார் ஸ்ரீரங்கா.

தற்போது ஸ்ரீரங்காவைப் பின்பற்றி அவருடைய பேத்திகளும் ஓவியம், கைவினைப் பொருட்கள் செய்வது போன்றவற்றில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். மறுசுழற்சி பற்றி இன்றைக்கு நாம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், அது குறித்து  எந்த விழிப்புணர்வும் இல்லாத காலத்திலிருந்தே வீணாகும் பொருட்களைக் கொண்டு வியப்பான சித்திரங்களை உருவாக்கியிருக்கிறார் ஸ்ரீரங்கா. அதை அடுத்த தலைமுறைக்கும் அவர் பயிற்றுவிப்பது பாராட்டுக்குரியது தானே!

படங்கள்: காட்சன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x