Last Updated : 14 Oct, 2018 09:20 AM

 

Published : 14 Oct 2018 09:20 AM
Last Updated : 14 Oct 2018 09:20 AM

பெண் எழுத்து: துணிந்து நின்றாய் பெண்ணே!

முதலில் ஹாலிவுட், பிறகு நோபல் இலக்கியப் பரிசுக் குழு, பின்னர் அமெரிக்க நீதிமன்றம், தொடர்ந்து பாலிவுட், அதைப் பின்பற்றி இந்தியப் பத்திரிகை, எழுத்துத் துறை என்று நீண்டு இப்போது கோலிவுட்வரை வந்துநிற்கிறது ‘#மீடூ’. அதனால்தான், இது ‘#மீடூ’க்களின் காலமாக இருக்கிறது!

‘எந்த ஒரு வன்முறையிலும் முதலில் சீரழிக்கப்படுவது பெண்ணும் பேருந்தும் தான்’ என்பார்கள். வன்முறைக் காலத்தில் மட்டுமல்ல, பெண்கள் எப்போதும் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

2017 அக்டோபரில் முதன்முறையாக ‘#மீடூ’ பிரசாரம் தொடங்கியது. இந்த ஆண்டு அக்டோபரில் ஓராண்டை நிறைவு செய்வதற்குள், இந்தியாவில் ‘#மீடூ’ பூகம்பம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தப் பிரசாரத்தின் தொடக்கப்புள்ளியாக இருக்கும் ஹாலிவுட் நடிகை ரோஸ் மெக்கோவன் எழுதிய ‘பிரேவ்’ புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.  பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களுக்கு மட்டுமல்லாது,  மனிதர்கள் அனைவருக்குமே பல படிப்பினைகளை இந்தப் புத்தகம் தருகிறது.

கடவுளின் பெயரால் களியாட்டம்

பிறந்த வீடுகளில், விரும்பி வந்த துறைகளில், ‘உன் உயர்வுக்கு நான் பொறுப்பு’ என்று உடன் நின்றவர்களாலேயே பாலியல் வன்முறைக்கு உள்ளாகும்போது, பெண் முதன்முறையாக அவமதிக்கப்படுகிறாள். ‘உனக்கு நேர்ந்த துயரத்துக்கு நீயேதான் காரணம்’ என்று குற்றம்சாட்டப்படும்போது, இரண்டாவது முறையாக அவமதிக்கப் படுகிறாள்.

ரோஸ் மெக்கோவனுக்கும் அதுதான் நேர்ந்தது. இத்தாலி நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில், ‘சில்ட்ரன் ஆஃப் காட்’ எனும் அமைப்பு நடத்திய விடுதியில் ரோஸ் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அவரது பெற்றோர் மதப் பிரச்சாரம் செய்துவந்தனர். சிறு வயது முதலே இறை நம்பிக்கையற்றவராக ரோஸ் வளர்ந்தார். அதனால், அங்கு பணியாற்றிய ஊழியர்களால் உடல் ரீதியான தண்டனைகளுக்கு ஆளானார்.

அங்கு அவரைப் போன்ற சிறுவர், சிறுமிகளுக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுக்கப்பட்டுவந்தது. அதை எதிர்த்த சிலர், மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். இதனால், தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் அந்தத் துன்பம் நேரலாம் என்று அஞ்சிய ரோஸின் பெற்றோர், குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பித்து அமெரிக்காவில் குடியேறினர்.

அமெரிக்கா காட்டிய வறுமை

அமெரிக்காவுக்கு முதன்முறையாக விமானத்தில் சென்றபோதுதான், நிலைக் கண்ணாடி என்ற பொருள் இருப்பது ரோஸுக்குத் தெரிந்தது. கண்ணாடியில் முதன்முறையாகத் தன் முகத்தைப் பார்த்தவருக்கு எந்த உணர்வும் தோன்ற வில்லை. காரணம், அவருக்கு அப்போது ‘அழகு’ என்றால் என்ன என்பதே தெரிந்திருக்கவில்லை. அப்போது அவர் பதின்பருவத்தில் காலடி எடுத்து வைத்திருந்தார்.

அமெரிக்கா என்பது பணக்கார நாடு என்று பலரும் நினைத்துக் கொண்டி ருக்கிறார்கள். உண்மையில், பணம் படைத்தவர்களுக்குத்தான் அது பணக்கார நாடு. மற்றபடி அங்கு நிலையான வேலை இல்லாமல், முறையான வருமானம் இல்லாமல், ஒரு வேளை மட்டும் கிடைக்கக் கூடியதை உண்டுவிட்டு, நடைபாதைகளிலும் கல்லறைத் தோட்டங்களிலும் படுத்துக்கிடப்பவர்கள் பலர்.

அமெரிக்காவில், ரோஸின் தந்தை தொடங்கிய மதப் பிரசார அமைப்புக்குச் சரியான கூட்டம் இல்லை. அதனால் போதிய வருமானமும் இல்லை. இதனால் வீட்டில் தினமும் சச்சரவு ஏற்பட்டது. பெற்றோர் பிரிந்தனர். ரோஸும் அவரது உடன்பிறந்தவர்களும் தனித்துவிடப்பட்டார்கள். காலப்போக்கில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை நோக்கிப் போனார்கள். ரோஸ், போதைப் பொருளுக்கு அடிமையானார். மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு பாலியல் தொல்லைகள் ஏற்பட, அங்கிருந்து தப்பித்தார். இடுகாட்டிலும் திரையரங்கிலும் சொற்பச் சம்பளத்துக்கு சில காலம் வேலை பார்த்தார்.

சினிமா தந்த சிக்கல்கள்

திரையரங்கு ஒன்றில் ரோஸ் பணியாற்றிபோது, ‘ஹூ ஃபிரேம்டு ரோஜர் ரேப்பிட்’ மற்றும் ‘வொர்க்கிங் கேர்ள்’ ஆகிய இரண்டு படங்கள் அவரை மிகவும் பாதித்தன. ஹாலிவுட்டில் கால் பதிக்கும் ஆசை அவருக்குத் துளிர்விட்டது.

அப்போது ரோஸ், தன் தந்தையுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு வாடகை கட்ட முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, படம் ஒன்றில் ‘எக்ஸ்ட்ரா’வாக வந்து செல்ல ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஒரு நாளுக்கு  2 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்பதால், ‘கிளாஸ் ஆஃப் 1999’ என்ற படத்தில் நடித்தார் ரோஸ். அதுதான் அவர் திரையில் தோன்றிய முதல் படம். அதற்குப் பிறகு, ‘டூம் ஜெனரேஷன்’, ‘ஸ்கிரீம்’ என அடுத்தடுத்துப் பட வாய்ப்புகள் வந்தன.

‘ஸ்கிரீம்’ படத்தைத் தயாரித்த ‘மிராமாக்ஸ்’ நிறுவனம் 1997-ல் ‘ஃபேண்டம்ஸ்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்தது. அதில் நடித்துக்கொண்டிருந்த போதுதான், மிராமாக்ஸ் உரிமையாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனால் பாலியல் வன்கொடுமைக்கு ரோஸ் ஆளாக்கப்பட்டார். அதைப் பற்றி, அந்த நிறுவனத்தின் வழக்கறிஞர், நிர்வாகிகள் எனப் பலரிடம் முறையிட்டும் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘ஹாலிவுட்டில் அப்படித்தான் இருக்கும். பெண் என்றால் இவை அனைத்தையும் சந்தித்தே தீர வேண்டும்’ என்று ரோஸுக்குச் சொல்லப்பட்டது. அடுத்த 20 வருடங்களுக்கு அந்தத் துயரத்தைத் தன் மனத்தில் மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே சில காதல்கள், சில திருமணங்கள், சில பிரிவுகளும் ரோஸ் வாழ்வில் அரங்கேறின. பிரிவும் தோல்வியும் அவை தந்த வேதனைகள் அனைத்துக்கும் ‘நீதான் ரோஸ் காரணம்’ என்று சொல்லப்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தொடங்கியது ‘#மீடூ’

இந்நிலையில் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின்போது டொனால்ட் ட்ரம்புக்கு எதிராகப் பெண்கள் பலர், ட்ரம்ப் தங்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்தார்கள். அதையொட்டி, தனக்கு நேர்ந்த வன்கொடுமைகளை ரோஸ், ட்விட்டரில் பதிய, ‘நியூயார்க் டைம்ஸ்’ இதழ் புலனாய்வு மேற்கொண்டது. அப்படித்தான் வெளியாகின ஹார்வி வெய்ன்ஸ்டீனின் லீலைகள். ரோஸ் கொடுத்த துணிச்சலால், வெய்ன்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களும் வாக்குமூலம் கொடுக்க முன் வந்தார்கள். தொடங்கியது ‘#மீடூ!’

தான் சந்தித்த கசப்புகளை ‘பிரேவ்’ என்ற தலைப்பில் நூலாக எழுதியிருக்கும் ரோஸ், தன் புத்தகத்தில் ஹார்வி வெய்ன்ஸ்டீனின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை ‘மான்ஸ்டர்’ (பூதம்) என்றே குறிப்பிடுகிறார். எனில், அவர் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கக்கூடும்?

“பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்று உங்கள் மகன்களுக்குச் சொல்லிக்கொடுங்கள்” என்று சொல்லும் ரோஸ், பெண்களுக்குச் சொல்லும் அறிவுரை இது: “எப்போதும் துணிச்சலுடன் இருங்கள். நீங்கள் விரும்பாத விஷயங்கள், உங்கள் மீது திணிக்கப்பட்டால் தீர்மானமாக ‘முடியாது’ என்று சொல்லப் பழகுங்கள்!”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x