Published : 12 Aug 2018 10:09 AM
Last Updated : 12 Aug 2018 10:09 AM

எசப்பாட்டு 48: ஏட்டிலும் வீட்டிலும் வேண்டும் சமத்துவம்

ஆண்-பெண் சமத்துவம் குறித்த சிந்தனைகளைப் பிஞ்சு மனங்களில் ஊன்றிவைக்கும் விதமாக முதல் வகுப்புப் பாடப்புத்தகத்திலிருந்தே எவ்விதம் அதை இணைக்கலாம் என்பது பற்றிய ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பாடப்புத்தகத்தை ஆறு வயதில் ஒரு குழந்தை கையில் எடுக்கும் முன்பாகவே, தன் ஆறு ஆண்டு கால வாழ்வனுபவத்தில் பலவற்றைக் கற்றுக்கொண்டுதான் வகுப்பறைக்கு வருகிறது.

நம் குடும்பங்கள், மிகத் தெளிவாக ஆண் வேறு பெண் வேறு, ஆண் வேலை வேறு, பெண் வேலை வேறு என்பதைக் குழந்தைகள் கண்ணாரக் கண்டு, அனுபவத்தில் கற்றுக்கொள்ளும்படியாக இயங்குகின்றன. ஆகவே, எழுதப்படாத சிலேட்டுகளாக நம் குழந்தைகள் வகுப்பறைக்கு வருவதில்லை. ஆணும் பெண்ணும் சமமல்ல என்று அழுத்தமாக எழுதப்பட்ட வாழ்வனுபவத்துடன் குழந்தைகள் பாடப்புத்தகத்தைக் கையில் எடுக்கிறார்கள்.

வீடும் வகுப்பறைதான்

இதைக் கணக்கில் கொண்டால் வகுப்பறை என்பது, சோவியத் கல்வியாளர் மகரெங்கோ கூறியதுபோல பள்ளி வளாகத்துக்குள் மட்டும் இயங்கும் அறையாக இருந்து சமத்துவக் கல்வியைத் தர முடியாது. குழந்தைகள் புழங்கும் வெளிகளான வீடு, தெரு, விளையாட்டு மைதானம், திரையரங்குகள், கடைகள் என எல்லா இடங்களுமே வகுப்பறைகளாக மாற வேண்டும். அதாவது, இந்த எல்லா இடங்களிலும் குழந்தைகள் கண்டுணரத்தக்க விதத்தில் ஆண்-பெண் சமத்துவம் வெளிப்படையான இயல்பான நடைமுறையாக இருக்க வேண்டும்.

அதற்குப் பெரியவர்களாகிய நாம், ‘குழந்தைகள் நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நம்மிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நம் ஒவ்வோர் அசைவும் குழந்தைகளுக்கான கற்றல் நடவடிக்கையாக மாறுகிறது’ என்ற  தன்னுணர்வுடன் நம் செயல்பாடுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக நம் சிந்தனையில் மாற்றம் வேண்டும். நம் சிந்தனை என்பது அரசின் சிந்தனை, அரசு நிர்வாக இயந்திரத்தின் சிந்தனை, சமூகத்தின் சிந்தனை, குடும்பத்தின் சிந்தனை என விரிவுகொள்ள வேண்டும்.

பெற்றோருக்குத் தேவை வீட்டுப்பாடம்

இப்படியான ஒருங்கிணைந்த செயல் பாடுகள் இல்லாமல் வகுப்பில் ஒரு பாடத்தில் ஆண், பெண் சமத்துவம் பற்றிச் சில வரிகள் எழுதிவைத்தால் மட்டும் மாற்றம் வந்துவிடாது.

அல்லது இப்படி யோசித்துப் பார்க்கலாம். ஆணும் பெண்ணும் சமம் எனப் பாடத்தில் எழுதி வைத்துவிட்டு, சமம் என்றால் நடைமுறையில் அது எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து, உங்கள் வீட்டில் இந்த சமத்துவம் இருக்கிறதா என்று வீட்டில் பெரியவர்களுடன் விவாதித்து வருக என்று வீட்டுப்பாடம் கொடுக்கலாம். வகுப்பறையின் வெளிச்சம் குழந்தைகள் வழியாக வீடுகளுக்குள் போய் குடும்பங்கள் விவாதிக்கட்டுமே. அப்படி விவாதிக்க நம் ஆணாதிக்கக் குடும்பங்கள் அனுமதிக்குமா என்பது அடுத்த கேள்வி.

அவ்விவாதங்களின் தொடர்ச்சி யாக, பெற்றோருக்கான ஆண்-பெண் சமத்துவப் பயிலரங்குகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். பள்ளிக்கூடம் சமூகத்தைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு நடைபோட வேண்டும். அரசு இதில் தலையிட வேண்டும். குடும்பங் களில், வீட்டு வேலைகளில் சமத்துவம் நிலவுவதை சட்டபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும்.

தேசம் ஏற்றுக்கொண்ட பெண்ணின் சுமை

நிறுத்துங்க. இதெல்லாம் நடக்குமா? கற்பனைக்கும் எல்லை இல்லையா என்று நமக்குள்ளிருந்தே ஒரு குரல் கேட்கலாம். மனித குலத்தின் அழகிய கனவாக மலர்ந்து பின்னர் சிதைந்துபோன சோஷலிச சோவியத் யூனியனில் இதெல்லாம் உண்மையிலேயே நடந்தது.

வீட்டு வேலைகளில் ஆணும் பெண்ணும் சமமாக ஈடுபட வேண்டும் என்பதை சோவியத் நாடு சட்டமாக்கியது. வேலைகளில் உயர்வு தாழ்வோ ஆண்-பெண் பேதமோ இருக்கக் கூடாது என்றது. பெண், சமூக உழைப்பில் ஈடுபடுவதை அந்நாடு சட்டப்படி உறுதிசெய்தது. அதற்கு உதவியாக வீடுகளிலிருந்து சமைத்தல், துணி துவைத்தல், குழந்தைகள் பராமரிப்பு ஆகிய மூன்று முக்கிய வேலைகளை அரசே எடுத்துக்கொண்டது.

சமூக அடுப்பறைகள், சமூக சலவையகம், ஊருக்கு ஊர் குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றை உருவாக்கி அன்றாடக் குடும்பச் சுமையை ஒரு கருணை மிக்க தாதியைப் போல அரசு  ஏற்றுக்கொண்டது. ஆகவே, பெண்கள் வேலைக்குப் போவது எளிதானதாக ஆக்கப்பட்டது.  குழந்தைப்பேறு என்பது  ‘பெண்ணின் சமூகச் செயல்பாடு’ என அரசியலமைப்புச் சட்டம் பிரகடனம் செய்தது. தாயின் வலியைத் தேசம் பகிர்ந்துகொண்டது.

வீட்டு வேலையிலிருந்து விடுதலை

‘நச்சரிக்கும் வீட்டு வேலைகளிலிருந்து பெண்களை விடுவிக்காமல் மனித குல விடுதலை  சாத்தியமல்ல’ என்ற லெனினின்  வாசகம் அங்கே சட்டபூர்வ நடவடிக்கைகள் மூலம் அமலுக்கு வந்தது. அன்றாட வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் சமத்துவத்துடன் வாழாமல் சட்டத்தின் முன் ஆண்-பெண் சமத்துவம் கொண்டுவருவது சாத்தியமே இல்லை என்று முழங்கிய சோவியத் அரசு, ஒவ்வொரு குடும்பத்துக்குள்ளும் கம்யூனிஸ்ட் வாழ்முறையைக் கொண்டுவர அந்தரங்கசுத்தியுடன் பாடுபட்டது.

வேறு பல அரசியல் தவறுகளால் அது வீழ்ந்தாலும் அந்நாடு முன்வைத்த, செயல்படுத்திய முன்னுதாரணங்கள் இன்றைக்கும் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கின்றன.

வீட்டுக்குள் வேண்டும் அரசியல்

சோவியத்தைப் பின்தொடர்ந்து இன்று ஐஸ்லாந்து, பின்லாந்து, சீனா உள்ளிட்ட பல நாடுகள் குடும்பங்களுக்குள்ளும் வெளியிலும் பால்பேதத்தை ஒழிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஆகவே, இது நடக்க முடியாத கற்பனையல்ல. நம்மாலும் நம் நாட்டிலும் செய்ய முடியும். அதற்கான அரசியல் உறுதி நமக்கு வேண்டும். குடும்பங்களுக்குள் நடப்பதும் அரசியல்தான் என்ற ஆழ்ந்த புரிதல் நமக்கு வேண்டும்.

சமத்துவம் கற்பித்தல் என்பது கல்விச்சாலை நடவடிக்கையாக மட்டும் இருக்க முடியாது. அது சமூக நடவடிக்கையாக மாற்றப்பட வேண்டும். நாட்டின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு நடவடிக்கைகள் அதை நோக்கித் திருப்பிவிடப்பட வேண்டும்.

1995-ல் உருவாக்கப்பட்ட பெய்ஜிங் செயலுக்கான மேடையில் நம் அரசும் இருக்கிறது. பெய்ஜிங் பிரகடனத்தில் இந்திய அரசும் கையெழுத்திட்டிருக்கிறது.

பெண்களும் சுற்றுச்சூழலும், முடிவெடுத் தலிலும் அதிகாரத்திலும் பெண்கள், பெண் குழந்தைகள், பெண்களும் பொருளாதார மும், பெண்களும் வறுமையும், பெண்களுக் கெதிரான வன்முறைகள், பெண்களும் மனித உரிமைகளும், பெண்களுக்கான கல்வியும் பயிற்சியும், பெண்கள் முன்னேற்றத்துக்கான நிறுவன ஏற்பாடுகள், பெண்களும் சுகாதாரமும், பெண்களும் ஊடகங்களும் ஆகிய இந்தப் பன்னிரண்டு துறைகளை உடனடிக் கவனம்கொள்ள வேண்டிய நோயுற்ற பகுதிகளாக பெய்ஜிங் மாநாடு அறிவித்தது.

இவற்றில் நாம் எவற்றில் கவனம் கொண்டு எவற்றிலெல்லாம் முன்னேறியிருக்கிறோம் என்று புள்ளிவிவரங்களை வைத்து ஆராய்ந்தால் ஏமாற்றமும் விரக்தியுமே மிஞ்சும்.

இறங்குமா சோறு?

பெண்களை இயல்பாக வாழவிடாத பண்பாடும் எந்நேரமும் அவளைச் செதுக்கிக்கொண்டே இருக்கும் நம் கூரிய பார்வைகளும் தன்னலம் கருதாமல் குடும்பத்துக்காக உழைப்பதே பெண்மையின் இலக்கணம் என்பன போன்ற பத்தாம்பசலிக் கருத்துகளும் 33 சதவீத இடத்தைக்கூடத் தர வக்கற்ற அரசியல் வெளியும் பச்சிளம் பெண் குழந்தைகளைக்கூட விட்டு வைக்காத பாலியல் வன்முறைகளும் என நாம் பெண்களைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்கிறோம்.

பெண்கள் வாழத் தகுதியற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்று சர்வதேச ஆய்வுகள் மீண்டும் மீண்டும் கூறுவதைக் கேட்க விரும்பாமல், நாம் காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு நடந்தால்தான் நிம்மதியாக ஒரு கவளம் சோறு தின்ன முடியும். அதுவும் பெண்கள் சமைத்துப் பெண்கள் (இன்னும்கூடச் சிரித்த முகத்துடன்) பரிமாறும் அந்தச் சோற்றை.

 

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x