Published : 04 Aug 2018 18:30 pm

Updated : 04 Aug 2018 18:30 pm

 

Published : 04 Aug 2018 06:30 PM
Last Updated : 04 Aug 2018 06:30 PM

பாதையற்ற நிலம் 12: ஆதித் துயரைச் சொல்லும் கவிதைகள்

12

ஆண், பெண் என்ற பால்பேதம் சமூகத்தில் நிலைபெற்றிருக் கிறது. ஆனால், இலக்கியத்தில் பால்பேதச் சலுகைகளும் தரம்தாழ்த்துதலும் தேவையற்றவை. நடப்புக் காலத்தைச் சித்தரிக்கும் பொருட்டுப் பால்பேதம் கவிதைக்குள் வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. அப்படியான பால்பேதம் தமிழ்க் கவிதையில் தொடக்கத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் இதை எழுதியுள்ளார்கள். இந்தப் பால்பேதங்களை முன்வைத்துக் கவிதைகள் எழுதிவருபவர்களில் ஒருவர் ஃபஹீமா ஜஹான்.

இவரது கவிதைகள், ஆண்/பெண் உறவுக் குள் பால்பேதம் நிகழ்த்தும் குறுக்கீட்டை முன்வைத்து இந்தப் பேதங்களைச் சித்தரிக்க முயல்கின்றன. இந்த விதத்தில் ஃபஹீமாவின் கவிதைகள் விசேஷமானவை.


ஆதித் திமிர்

குடும்ப அமைப்பு வாழ்க்கை முறையாக நிலைபெற்ற பின்பு ஆணும் பெண்ணும் தங்களது தேவைகளுக்காகவும் தலைமுறைகளுக்காவும் சேர்ந்து வாழ வேண்டியிருக்கிறது. இந்த அமைப்பு நவீன யுகத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு பக்கம் இந்த அமைப்பு இன்னும் திடமாக முறை தன்னை வலுவாக்கிக்கொண்டு வருகிறது. இந்த அமைப்பு முறையில் ஒருவர் மட்டும் உயர்ந்து, ஒருவர் தாழ்ந்துபோகும் நிலை உருவாகி நிலைப்பெற்றிருக்கிறது.

இந்த நிலை அரூபமாக ஒவ்வோர் ஆணின் மனத்துக்குள்ளும் பதிந்திருக்கிறது. இதை ஃபஹீமா தன் கவிதைகளில் ‘ஆதித் திமிர்’ எனத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துகிறார். தொடரும் இந்தத் திமிர் ஆண் மனத்தின் இயல்பான அன்பையும் தடுத்துவிடுகிறது எனத் தன் கவிதைகளில் சித்தரிக்கிறார். இந்த ஆதித் திமிரால் பெண்கள் அடையும் துன்பத்தையும் ‘ஆதித் துயர்’ எனச் சொல்கிறார். இந்த இரு சொற்களின் மூலம் அவர் இந்தப் பால்பேதம் உண்டாக்கிய விளைவுகளைச் சொல்லிவிடுகிறார்.

‘இப்பொழுதும்/ஆதித் திமிர் தடுத்திட உன்னிடம் எஞ்சியுள்ளது/ஒரு சொல்’ என்கிறது ஃபஹீமாவின் ஒரு கவிதை வரி.

காதலிலும் பேதம்

நிழல்களற்ற நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் ஒரு மூதாட்டியைச் சித்தரிக்கும் அவரது இன்னொரு கவிதை, ‘பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்/தேங்கித் துடிக்கிறது/ ஆதிமுதல் அவளைத் தொடரும் துயர்’ என ஆதித் துயரைச் சொல்கிறது.

காதல் ததும்பும் கவிதைகளிலும் ஃபஹீமா இந்தப் பாகுபாட்டைச் சொல்ல முயன்றிருக்கிறார். இந்தப் பேதத்தால் ஏற்படும் உறவு முறிவுகளை ஃபஹீமாவின் பல கவிதைகள் தொடர்ந்து பல்வேறுவிதங்களில் சொல்கின்றன. அவற்றுள் சில வெயிலைப் போல் நேரடியாக நிலத்தில் இறங்குகின்றன. ‘நீ அவனைக் காதலித்தாயா?’ என்ற கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

‘வடபுலம் நான் தென்திசை நீ/ நமதெல்லை களைக் களைந்து/ ஆண்டாண்டுகளாகச் சிக்கி வாழும்/ பிம்பங்களிலிருந்து மெய்யன்பை/வெளிக் கொணர்வோம்’ இந்தக் கவிதையின் வரிகள் உறவுக்குள்ளான பேதத்தைக் களைய விரும்புகின்றன.

பாகுபாட்டைச் சொல்லும் சில கவிதைகள் புகையைப் போல் பதுங்கி வெளிப்படுகின்றன. ‘எனது சூரியனும் உனது சந்திரனும்’ என்ற கவிதை ஒரு பிரிவை, அதன் எல்லாவிதக் காரணத்துடனும் குற்றவுணர்வற்றுச் சித்தரிக்கிறது. நம்மை யார் பிரித்தது என்ற கேள்விக்கு விடை தேடும் முனைப்பில் முன்னேறும் இந்தக் கவிதை, அது ‘வாழ்வின் விதிமுறைகள்’ எனக் கண்டடைகிறது.

‘வாழ்வின் விதிமுறை கள்/ எனதுலகையும் உனதுலகையும் பிரித்த வேளையில்/ விடை பெற்றோம்/ ஒன்றித்துப் பறந்த வானத்தை இழந் தோம்/ இறுதியாக அன்று தான் அழ காகச் சிரித்தோம்’ என்கிறது அந்தக் கவிதை.

நெருப்பு நிலா

தென்னிலங்கையைச் சேர்ந்தவர் ஃபஹீமா. ஆனாலும் வடபகுதியில் நடக்கும் நீண்ட காலப் போரை அவரது கவிதைகள் கூர்ந்து கவனித்துள்ளன. இந்தியாவிலிருந்து இலங்கையின் துயரத்துக்கு எழுதப்பட்ட அஞ்சலிக் கவிதைகளைப் போன்றவையல்ல இந்தக் கவிதைகள். போருக்கு அருகிலிருந்த/போரால் மறைமுகமாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் பதிவுகளாக அவை வெளிப்பட்டுள்ளன.

இயக்கத்தில் போராளியாகிவிட்ட ஒரு மாணவியை இவரது கவிதைகளில் காண முடிகிறது. அந்தப் போராளியை ஃபஹீமா, ‘நெருப்பு நிலா’ என்கிறார். அவருக்கான கடிதமாக இந்தக் கவிதை நீள்கிறது. விட்டு விடுதலையாகும் சுதந்திரக் கனவு நிறைவேற கவிதை வாழ்த்துச் சொல்கிறது.

விடுதலைப் போரில் மரித்த இயக்கத் தின் கடற்படை வீரனையும் ஃபஹீமா ஒரு கவிதையில் காண்பிக்கிறார். இந்தக் கவிதை தான் அவரது முதல் கவிதைத் தொகுப்பின் தலைப்பாகவும் இருந்திருக்கிறது; ‘ஒரு கடல் நீருற்றி நிரப்பிடவோ?’.

‘சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே! ...உன் கல்லறையில்/ஒரு கடல் நிரூற்றி நிரப்பிடவோ?’ என முடிகிறது அந்தக் கவிதை. வடக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறையையும் ஃபஹீமாவின் கவிதைகள் விசனத்துடன் நினைத்துப் பார்க்கின்றன.

இயற்கையின் வழியில்

ஃபஹீமாவின் கவிதை மொழி கவித்துவம் மிக்கது. இலங்கைத் தமிழ்க் கவிஞர் சேரனுடன் ஒப்பிடத்தகுந்தது. இந்தியத் தமிழ்க் கவிதைகளில் மனுஷ்யபுத்திரன் கவிதைகளுடன் ஒப்பிடலாம். அடி பிரித்துப் பாடல்களைப் போல் கவிதைகளைப் பின்னுகிறார். பழந்தமிழ்க் கவிதைகளின் காட்சி விவரிப்புபோலக் கவிதைகளைக் கட்டுவதில் ஃபஹீமாவுக்கு அலாதியான விருப்பம் இருக்கிறது.

வயலும் வெளியும் குறுங்காடும் சிறு விலங்குகளும் பறவைகளும் நிலக் காட்சிகளாகக் கவிதைகளுக்குள் உருப்பெற்றுள்ளன. சேரனின் தொடக்க காலக் கவிதைகளில் கண்ட அதே நிலத்தை ஃபஹீமா சித்தரிக்க முயன்றுள்ளார். வெயிலும் நிழலும் மழையும் அவரது கவிதைக்குள் அடிக்கடி நுழைகின்றன.

சேரன் கவிதைகள் எழுதத் தொடங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டவை இந்தக் கவிதைகள் எனலாம். இந்தக் கால இடைவெளி போர் குறித்த அபிப்பிராயத்தை மாற்றியிருப்பதையும் இவரது கவிதைகள் உணர்த்துகின்றன.

paathaiyatra 2jpg

வெயிலை ஒரு கொடூரமான விலங்காகப் பல கவிதைகளில் காட்சிப்படுத்துகிறார். நிழல் என்பது சிறுபான்மையினருக்கான ஆதரவாகக் கவிதைக்குள் தொழிற்பட்டுள்ளது. அதுதான் பெண்களுக்கும் ஆதரவாக ஆகிறது. ஒரு கவிதையில் வெயில், ரத்தத்தில் உள்ள ஈரத்தை உறிஞ்சிவிட்டுக் கறையா மட்டும் விட்டுச் சென்றுவிட்டது என்கிறார்.

அதேபோல் இனிமையான இரவுகள் மாறிப்போனதையும் குழந்தைகளின் சித்திரங்கள் வழியே சொல்கிறார். இரவு ஒரு பெரு வனத்தையும் பெரு வனம் பல வன் மிருகங்களையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டது என்கிறது அவரது ஒரு கவிதை. அதுபோல் ஆணையும் பெண்ணயும் சந்திரன், சூரியன் எனச் சொல்கிறார் ஒரு கவிதையில். இப்படியான இயற்கை நிலையைக் கொண்டு உலகத்தின் நன்மை, தீமைகளை வகைப்படுத்திப் பார்க்க முயல்வதாக இவரது கவிதைகளை வரையறுத்துப் பார்க்கலாம்.

அழிவின் பின்னர்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரத்தின்

அடிக்கட்டை மீது

அமர்ந்துள்ளது பறவை

இன்று அதனிடம்

பறத்தலும் இல்லை

ஒரு பாடலும் இல்லை

அதன் விழிகளின் எதிரே

வெயில் காயும்

ஒரு பெருவெளி விரிந்துள்ளது

அந்த மனிதர்களைச் சபிக்கிறதோ

தனது கூட்டை எண்ணித் தவிக்கிறதோ

ஃபஹீமா ஜாஹன், தென் இலங்கையிலுள்ள மெல்சிரிபுரத்தைச் சேர்ந்தவர். கணித ஆசிரியர். ‘ஒரு கடல் நிரூற்றி’ (பனிக்குடம் பதிப்பகம்), ‘அபாரதி’ (வடலி பதிப்பகம்), ‘ஆதித் துயர்’ (காலச்சுவடு பதிப்பகம்) ஆகிய கவிதை நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன.

(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x