Published : 17 Aug 2014 12:51 PM
Last Updated : 17 Aug 2014 12:51 PM

விவசாயத்துக்கு உயிரூட்டும் பெண் சக்தி

விளைநிலங்கள் எல்லாம் பிளாட் போட்டு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் விவசாயத்தின் மூலம் ஒரு குடும்பம் மோசமான நிலையிலிருந்து மீண்டு தலைநிமிர்ந்து வாழ முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு மராட்டியப் பெண்.

மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பிரதிஸ்தா பெஹரேவிற்கு சிறு வயதிலிருந்தே எண்ணற்ற கனவுகள். தானே மாவட்டத்தில் கலம்காந்தே கிராமத்தில் பிறந்த பிரதிஸ்தா எப்படியாவது பட்டப்படிப்பை முடித்துவிட வேண்டும் என்று முனைப்போடு இருந்தார். ஆனால் 11-வது முடித்த பிறகு குடும்பச் சூழல் காரணமாகப் படிப்பை நிறுத்த வேண்டியிருந்தது. 20 வயதிலேயே பிரகாஷ் பெஹரேவிற்கு மணமுடித்து வைக்கப்பட்டார்.

குடும்ப விவசாயம்

பிரதிஸ்தா மராத்தி மொழியில் தான் பேசுகிறார். இந்திகூட அவருக்குத் தெரியாது. அதிகம் படிக்கவில்லை. ஆனால் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதில் அவருக்குத் தனியாத ஆர்வம் இருந்தது. பிரகாஷிடமிருந்த நிலத்தில் அவர்களது குடும்பத்தினர் அப்போதுவரை நெல் மட்டுமே பயிரிட்டுவந்தனர். நெல் பயிரிடப் படாத காலகட்டங்களில் வெறுமையாகக் கிடந்த நிலத்தில் பிரதிஸ்தா காய்கறிகளையும் தானியங்களையும் பயிரிடத் தொடங்கினார். அதற்கு நல்ல பலன் இருந்தது.

ஆனால் இந்த நேரத்தில் சில நெருக்கடிகள் காரணமாக பிரகாஷின் வேலை பறிபோனது. குடும்பமே அவநம்பிக்கையில் மூழ்கிய போதும் பிரதிஸ்தா மட்டும் நம்பிக்கையை விடவில்லை.

பிரதிஸ்தா

சுய உதவிக்குழுக்கள்

விவசாயம் தங்களை எப்படியும் மீட்டுவிடும் என்று பிரதிஸ்தா உறுதியாக நம்பினார். அதற்குக் கூடுதல் உழைப்பும் முனைப்பும் புதிய சிந்தனையும் மட்டுமே தேவை என்றுணர்ந்தார். தனது கிராமத்தில் உள்ள பிற பெண்களிடம் பேசி  சமர்த் சுயஉதவிக் குழுவைத் தொடங்கினார். சுயஉதவிக் குழு மூலம் பல உதவிக்கரங்கள் நீண்டன. IFAD (International fund for agricultural development) என்னும் ஐக்கிய நாடுகளின் அமைப்பு ஒன்றின் உதவியும் கிடைத்தது. ஐஃபாடின் தேஜஸ்வினி திட்டத்தின் மூலம் பல குடும்பங்களில் மாற்றங்கள் உண்டாயின.

“என் கணவரையும் அவர் பார்த்துவந்த வேலையைவிட விவசாயம் லாபகரமானது என்பதை உணரவைத்தேன். வேலை தேடி ஊர் ஊராக அலைய வேண்டியதில்லை, விவசாயம் செய்தால் தன்மானத்தோடு வாழலாம் என்பதை அவரும் உணர்ந்துகொண்டார். வீட்டில் முடங்கிக் கிடந்த அவர் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கினார்” என்கிறார் பிரதிஸ்தா.

வறட்சியால் ஒரு கட்டத்தில் கிராமமே நொடித்துப்போனபோது சுய உதவிக் குழு மூலம் கடன் பெற்று, ‘சுவர்ண ஜயந்தி கிராம சுயம்ரோஜ்கர் யோஜனா’ என்று பெயரிடப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்தைத் தொடங்கினார். கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலம் இந்தத் திட்டத்தின் கீழ் வந்தது. தனக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இதை பிரதிஸ்தா கருதுகிறார்.

குடிக்கு எதிரான போராட்டம்

பல மாற்றங்கள் வந்தாலும் பிரச்சினைகளும் கூடவே வந்தன. பிரதிஸ்தாவின் கிராமத்தில் குடி பிரதானமான பிரச்சினையாக இருந்தது. சாராயம் காய்ச்சுவது குடிசைத் தொழிலாகவே இருந்தது. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுவதை உணர்ந்த பிரதிஸ்தா, காவல் நிலையத்திற்குத் தனி நபராகச் சென்று புகார் செய்தார். காவலர்களின் துணையோடும் கிராமத்திலிருந்த சில பெண்களின் துணையோடும் சாராயம் காய்ச்சப்பட்ட டிரம்களையும் பானைகளையும் உடைத்து நொறுக்க, அன்றி லிருந்து காவல்துறைக்குப் பயந்தே சாராயம் காய்ச்சப் படுவதில்லை. “2008-ல் இருந்து எங்கள் கிராமத்தில் சாராயம் ஒழிக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் நிம்மதியாக இருக்கிறோம்” என்கிறார் அவர்.

விவசாயமும் பெண்களும்

விவசாயத்தைப் பொறுத்தவரையில் பெண்களின் உழைப்பும் பங்கும் கண்ணுக்குப் புலப்படாதவையாகவே இருக்கின்றன. அவர்களுக்கான அங்கீகாரமும் அதிக அளவில் கிடைப்பதில்லை. தொடர்ச்சியான உழைப்பைச் செலுத்தினாலும் நிலத்தின் மீது பெண் உரிமை கொண்டாட முடியாது. ஆனால் தனது ஆர்வத்தால் இந்த நிலையிலிருந்து மீண்டிருக்கிறார் பிரதிஸ்தா. “இவ்வளவு நாட்கள் நான் உழைத்த நிலம் என் பெயரில் இல்லை என்கிற ஆதங்கம் இருந்தது. ஆனால் இப்போது எங்கள் இருவரது பெயரிலும் நிலத்தை மாற்ற ஏற்பாடுகள் செய்துவருகிறார் என் கணவர்” என்கிறார்.

கடந்த சில வருடங்களில் அவரது குடும்ப வருமானம் இரு மடங்காகியிருக்கிறது. அவருடைய இரு மகள்களும் கிராமத்தின் பிற பெண்கள் போல் அல்லாமல் உயர் படிப்பு படித்துவருகிறார்கள். “இவை அனைத்தையும் எனக்கு நிலம்தான் தந்தது. இந்த விவசாயத்திற்கு நான் என்றென்றும் நன்றியுடையவளா யிருப்பேன்” என்கிறார்.

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த வாரம் நடத்திய குடும்ப விவசாயம் பற்றிய கருத்தரங்கில் நெகிழ்ச்சியும் நிறைவுமாய்க் கலந்துகொண்டார் பிரதிஸ்தா. “ஒரு பெண் விவசாயியாக அடையாளம் காணப்படுவதில் நான் அதீதமாக பெருமை கொள்கிறேன். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் விவசாயம் செழிக்காது” என்று கிராமத்து எளிமையுடன் அவர் பேசி முடித்தபோது சான்றோர்களும் பல அயல்நாட்டு வல்லுநர்களும் நிறைந்திருந்த அரங்கு பிரம்மிப்பு விலகாமல் கைதட்டி ஆர்ப்பரித்தது.

இந்திகூடப் பேச தெரியாத, கிராமத்தை விட்டு அதிகம் வெளியேறாத ஆனால் விவசாயத்துக்கான மதிப்பைத் தன்னளவில் மீட்டெடுத்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்த மரியாதை அது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x