Published : 10 Jun 2018 11:24 AM
Last Updated : 10 Jun 2018 11:24 AM

வண்ணங்கள் ஏழு 08: எல்லாம் ஓரினம்தான்

“எனக்கு இருந்த குழப்பத்தில் முழுமையாக ஆணாக மாறிவிட வேண்டுமென நினைத்தது உண்டு. ஆனால் அதை நான் செய்யவில்லை. ஒவ்வொரு நாளும் ஆணும் பெண்ணுமாகத்தான் கண் விழிக்கிறேன். இந்த ‘திரவ நிலைப் பாலினமே’ (Gender Fluid) இப்போது எனக்குப் பிடித்திருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார் நடிகை ரூபி ரோஸ்.

‘ரெசிடென்ட் ஈவில்’, ‘பிட்ச் பெர்ஃபெக்ட்’ உள்ளிட்ட ஆங்கிலப் படங்களில் நடித்தவர்அதிரடி நடிகை ரூபி ரோஸ். ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர் சிறுவயதிலேயே உறவினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, இருதுருவ மனநிலை (பை-போலார் டிஸ்ஆர்டர்) எனும் மனப்பிறழ்வுக்கு ஆளானவர். பள்ளியில் உடன் படித்த மாணவர்களாலேயே கேலி, கிண்டலுக்கு ஆளானார். காரணம் அவரிடம் சற்றே வெளிப்பட்ட ஆண் தோற்றம். இவரைப் போன்ற திரவ நிலைப் பாலினத்தவர் நம்முடைய சமூகத்திலும் இருக்கின்றனர்.

பால் புதுமையரின் பிரச்சினைகள்

மாற்றுப் பாலினத்தவர்களுக்கு உள்ளேயே தற்போது அரிதாக வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் ‘பால் புதுமையர்’. இந்தப் பால் புதுமையர் (Gender queer) சிலருக்குத் தங்களின் பாலினம் குறித்த தடுமாற்றம் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் நம் தகவல் தொடர்பு சாதனங்களே. விதவிதமான சமையல் குறிப்புகளைப் படையல் போடும் ஊடகங்களுக்கு, மனிதர்களிடையே இருக்கும் பாலினங்களைக் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்குவதற்கு நேரம் இல்லை.

தம் பாலின அடையாளம் குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லாமலும், ஆண், பெண் என்னும் பொது விதிகளுக்குள் தம்மைப் பொருத்திக்கொள்ள முடியாமலும் தவிக்கும் பால் புதுமையர் அநேகர்இருக்கின்றனர்.

பால் புதுமையரின் தேவைகள், விருப்பங்கள் எல்லாமே சமூகம் நிர்ணயித்துள்ள ஆண், பெண் என்ற இரண்டு துருவ அடையாளங்களுக்கு மாறாக இருக்கும்போது தங்கள் எண்ணத்தை, ஆதங்கத்தைப் பகிர்ந்துகொள்ளவும், ஆதரவாகச் சாய்ந்துகொள்ளத் தோள் இல்லாத நிலையிலும் மனச்சோர்வை அடைகின்றனர்.

இப்படிப்பட்ட பால் புதுமையருக்கும் பொதுச் சமூகத்துக்கும் பாலமாக இருப்பதுடன் விழிப்புணர்வையும் ஆலோசனைகளையும் வழங்கிவருபவர், ‘திரவ நிலை பாலின’ அடையாளம் கொண்ட சிவா. `நிறங்கள்’ தன்னார்வ அமைப்பின் துணை நிறுவனரான இவர், பாலினம் குறித்து சமூகம் கட்டமைத்து வைத்துள்ள கருத்து குறித்து விரிவாகப் பேசினார்.

எல்லாம் இரண்டு பெட்டிக்குள்

பாலினம் என்பதே சமூகத்தால் உண்டாக்கப்பட்ட கட்டமைப்புதான். சமூகத்தில் இரண்டே பெட்டிகளை மட்டுமே வைத்திருக்கிறார்கள். அதற்குள் எல்லோரையும் போட்டு அடைத்துவிடுகிறார்கள். ஆண் என்றால் இந்த வேலைகள் எல்லாம் செய்ய வேண்டும், அழக் கூடாது. பெண் என்றால் இந்த வேலைகள் எல்லாம் செய்யணும். வெட்கப்படணும். அதிர்ந்து பேசக் கூடாது. சத்தமாகச் சிரிக்கக் கூடாது... இப்படித் தொட்டதற்கெல்லாம் இந்தச் சமூகம் வரையறுத்த சட்டத்துக்குள் நான் இல்லை என்பது மட்டும் புரிந்தது. இந்த இரண்டில் எதிலும் என்னால் பொருந்திப் போக முடியவில்லை. என்னையே நான் புதிராக உணர்ந்த காலம் உண்டு.

எனக்குத் தெரிந்த மாற்றுப் பாலினத்தவர் பலரிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர்களில் பலரும் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பாலினம் மாறுதல் மூலம் திருநங்கை, திருநம்பி ஆகியிருக்க வேண்டும் என்றனர். எனக்குத் திருநம்பி, திருநங்கை என்பதும் மேலும் இரண்டு பெட்டிகள் போல்தான் உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரையில் சில நேரம் ஆணாக உணர்வேன். சில நேரம் பெண்ணாக உணர்கிறேன்.

என்னை மாதிரியே சிலரைப் பார்த்த போதுதான், என்னைப் பற்றியே புரிந்துகொள்ள முடிந்தது. எப்படித் திரவமானது அது இருக்கும் கலனைப் பொருத்து, அதன் தோற்றத்தை மாற்றிக்கொள்கிறதோ அதைப் போன்றதுதான் என்னுடைய பாலினமும் என்பதைப் புரிந்துகொண்டேன். இந்த இடத்தில் நான் ‘கலன்’ என்று சொல்வதை, சமூகத்தில் எங்களுக்கு எதிராக நிலவும் பிரச்சினைகள் என்று புரிந்துகொள்ள வேண்டும். இங்கே என்னுடைய பால்ஈர்ப்பு பற்றி நான் பேச வரவில்லை.

பலரும் என்னுடைய குரல் பெண் குரல்போல் இருக்கிறது என்று சொல்வார்கள். அப்படிச் சொல்லும் அவர்களே, மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் என்னுடைய அதிரடியான செயல்பாடுகளைப் பார்க்கும்போது, ‘எப்படிப் பேசறான் பாரு…’ என்று வியப்பார்கள். ஒரு தீவுக்குள் இரண்டு மனிதர்கள் மட்டுமே இருக்கும் பட்சத்தில், அவர்கள் விரும்பும் பாலினத்தோடு அவர்கள் வெளிப்படுவார்கள்.

ஏற்கெனவே நிறுவப்பட்ட அடையாளங்கள் எவையுமே தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. எல்லோருமே மனிதர்கள்தாம் என்னும் புரிதலே போதும். அதேநேரத்தில் வகைப்படுத்த முடியாத நிலையிலிருந்த என்னைப் போன்ற பாலினத்தவருக்குக் கிடைத்த அடையாளம்தான் இந்த ‘திரவ நிலைப் பாலினம்’.

எங்கெங்கும் உரையாடல்

பெங்களூருவைச் சேர்ந்த ‘சங்கமா’ அமைப்பின் சார்பாக மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கும் ஒன்றின் அவசர அழைப்பு சேவை மூலம் உதவி வந்தேன். ஒரு கட்டத்தில் அந்த அமைப்பின் சேவை நின்றாலும், `காப்பாத்துங்க சிவா…’ என்று என்னைத் தொடர்புகொள்ளும் அழைப்புகளுக்கு, செவிசாய்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் இதை ஒரு வேலையாக மட்டுமே என்னால் பார்க்க முடியவில்லை.

பிறப்பால் பெண்ணாகப் பிறக்கும் பால் புதுமையருக்குப் பல பிரச்சினைகள் இருப்பதை உணர்ந்தேன். அதனால் அடுக்குமாடிக் குடியிருப்பு, குடிசைப் பகுதி மக்கள், வேப்பமரத்தடி, கோயில்கள், சுயஉதவிக் குழுக்கள் என வாய்ப்பு இருக்கும் இடங்களில் எல்லாம் எல்.ஜி.பி.டி. குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினேன்.

பெண் பாலியல் தொழிலாளிகள் கூட்டத்தில் ஒருமுறை பேசினேன். கூட்டம் முடிந்ததும் ஒரு பெண் என்னிடம், ‘நான் ஆணாகத்தான் உணர்கிறேன். அப்படி மாறுவதற்கு என்ன வழி’ என்று கேட்டார். அவருக்குத் தேவையான ஆலோசனைகளைச் சொன்னேன்.

selfiecamera_2018-05-31-11-31-12-665 சிவா மாறும் அடையாளங்கள்

நான் இங்கே எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் எல்லா இடங்களிலும் இருக்கிறேன். ஏன் இப்படி இருக்கிறே.. ஏன் இப்படி முடி வளர்த்திட்டு இருக்கிறே… ஏன் இப்படி ஒல்லியா இருக்கிறே… இப்படி எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவையெல்லாம் ஆண்கள் செய்யும் வேலைகள், இவையெல்லாம் பெண்கள் செய்யும் வேலைகள் என்று சமூகத்தால் நிர்ணயிக்கப்பட்ட தடைகள், இப்போது பரவலாகத் தகர்ந்துவருகின்றன. ஆண், பெண்ணுக்கான எல்லைகளும் பரஸ்பர புரிதலும் அதிகரிக்கும்போது எதிர்காலத்தில் இன்னும் பலர் தங்களை ‘திரவ நிலைப் பாலின’த்தவராக அடையாளப்படுத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x