Last Updated : 20 May, 2018 09:53 AM

 

Published : 20 May 2018 09:53 AM
Last Updated : 20 May 2018 09:53 AM

சவாலே சமாளி: நீரைக் காக்கும் பெண்கள்

செ

ன்னை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்ல; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. அதுவும் கோடை வந்துவிட்டால் தண்ணீரைத் தேடி பெண்கள் அலையும் நிலை துயரமானது. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் வேள்வரை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்குத் தீர்வு கண்டிருப்பதோடு அது தொடர்வதற்கான ஏற்பாட்டையும் செய்திருக்கின்றனர்.

கடலோரப் பகுதியான மீமிசலிலிருந்து கரூர் செல்லும் வழியில் உள்ளது வேள்வரை கிராமம். நிலம், நீர், காற்று என எல்லாமே உப்பாகிப்போன அந்தக் கிராமத்தில் சுவையான குடிநீரைப் பெறுவதற்காகத் தொழுவனாற்றில் உள்ள ஒரு மணல் திட்டை அப்பகுதி மக்கள் பாதுகாத்து வருகின்றனர். அந்த ஆறு குறித்துக் கேட்டால் மணல் கொள்ளையர்களா நீங்கள் எனக் கேட்டு உஷாராகிறார்கள் பெண்கள்.

திருட்டால் விளைந்த தட்டுப்பாடு

ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விளையக் காரணமாக இருந்த தொழுவனாற்றை ஒட்டியுள்ள குளங்களில் மழை நீர் தேக்கிவைக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தப் பகுதியில் அரசு மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீரும் உப்புத் தன்மையின்றி இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆற்றில் மணல் சூறையாடப்பட்டதால் விவசாயம் பொய்த்தது. பிறகு குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது ஆற்றில் மணல் இல்லாததால் முன்புபோல ஊற்று தோண்டவும் வழியில்லை. இதைச் சமாளிக்க அங்கே கொண்டுவரப்பட்ட காவிரி குடிநீர்த் திட்டமும் பயனளிக்கவில்லை. விவசாயக் கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் விலை கொடுத்துக் குடிநீர் வாங்கும் சக்தியும் இப்பகுதி மக்களிடம் இல்லை.

நீர் ஊறும் அமுதக்கேணி

மணல் அள்ளியதுதான் குடிநீர்ப் பிரச்சினைக்குக் காரணம் என்று தெரிந்தாலும் பக்கத்துக் கிராம மக்களால், அதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சுதாரித்துக்கொண்ட வேள்வரை கிராம மக்களோ ஆற்றில் பனை மரங்களுக்கிடையே சுமார் 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள மணல் திட்டைப் பாதுகாத்துவருகிறார்கள். அந்த இடத்தில் பள்ளம் தோண்டி அதில் ஊறும் தண்ணீரை வேள்வரை மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள ஒன்பது கிராம மக்களும் பயன்படுத்துகின்றனர்.

மழைக் காலத்தில் இலகுவாகத் தண்ணீர் எடுத்துவிடும் மக்கள், வெயில் காலத்தில் சிரமப்படுகிறார்கள். அப்போது ஒரு குடம் எடுக்க அரை மணி நேரத்துக்கு மேல் ஆகும். அதனால்தான் குடிநீரை அவர்கள் தங்கம்போல் பாவிக்கிறார்கள்.

மணலே ஆதாரம்

இன்றும் வீட்டில் காதுகுத்து, கல்யாணம் போன்ற விசேஷ நாட்களில் ஆற்றில் பள்ளம் தோண்டித் தண்ணீர் எடுத்து மாட்டுவண்டியில் எடுத்துப் போகிறார்கள். “பங்காளி வீட்டுப் பெண்களுக்கான முக்கிய வேலையே அதுதான்” என்று சிரித்தபடியே சொல்கிறார்கள் அங்கு தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த பெண்கள்.

இந்த மணல் திட்டிலிருந்து மணலை அள்ள பலர் முயன்றுள்ளார்கள். ஊர் மக்கள் இரவும் பகலும் காவல் காத்து அதை முறியடித்துள்ளனர். ஊருக்குள் நுழையும் அந்நியர்களை நன்கு விசாரித்த பிறகே அனுமதிக்கிறார்கள். அந்த மணல் திட்டைப் பாதுகாக்கக் கோரி ஆட்சியரிடம்கூட மனு கொடுத்திருக்கிறார்கள்.

“ஆற்றுக்கு மணல்தான் நீராதாரம். அந்த மணல் இல்லையென்றால் விவசாயம் மட்டுமல்ல; குடிக்கத் தண்ணியும் இல்லை என்பது படிக்காத எங்களுக்கே தெரியுது. ஆனால், படித்த மேதாவிகளும் செல்வாக்கு மிக்கவங்களும் கட்டுப்பாடுகளையும் சட்டங்களையும் மீறி மணல் திருடுவது வேதனையா இருக்கு” என்று வேள்வரை மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x