Published : 26 May 2018 18:37 pm

Updated : 26 May 2018 18:37 pm

 

Published : 26 May 2018 06:37 PM
Last Updated : 26 May 2018 06:37 PM

கற்பிதம் அல்ல பெருமிதம் 07: சுத்தம் எது? அசுத்தம் எது?

07

 


னக்கு முதன்முதலாக மாதவிடாய் வந்தபோது அதிகப்படியான ரத்தத்தைப் பார்த்து அழுதேன். என்னைத் தனியறையில் உட்காரவைத்தார்கள். அனைவரிடமும் சகஜமாகப் பேசவும் விளையாடவும் முடியவில்லை. எனக்கு மனச் சோர்வாக இருந்தது.

இரவில்தான் எனக்கு மாதவிடாய் வந்தது. குளிக்க வைத்தார்கள். தண்ணீர் ரொம்ப குளிர்ச்சியாக இருந்தது. மாதவிடாய் நாட்களில் எல்லா நாட்களும் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளித்துவிட்டு, ஈரம் காயாமலேயே பள்ளிக்குச் செல்ல வேண்டி உள்ளது. தலைவலி வருகிறது.

அத்தை, கீரை விதையைப் பாலில் கலந்து கொடுத்தார்கள். பாட்டி தினமும் காலை ஒரு டம்ளர் நல்லெண்ணெய் கொடுத்தார். ஒரு முட்டையை பச்சையாகக் குடிக்கச் சொன்னார்.

என் மாமா எனக்கு மாலை போட்டார். எல்லோரையும் கூப்பிட்டு பிரியாணி செய்து கொடுத்தார்கள். தாய் மாமன் வீட்டுச் சீர் கொண்டு வந்தார். புடவை கட்டி தலை நிறைய பூ வைத்ததும் எல்லாரும் என்னை வந்து பார்த்ததும் கூச்சமாக இருந்தது. வெளியே போக முடியவில்லை. தனியாக இருப்பதுபோல இருந்தது.

- முதல் மாதவிடாய் ஏற்பட்ட நேரத்தில் என்ன நடந்தது, எப்படி உணர்ந்தீர்கள் என்ற கேள்விக்கு பள்ளி மாணவிகளிடமிருந்து கிடைத்த பதில்கள் இவை.

தீட்டு, மாதவிலக்கு போன்ற வார்த்தைகளே வேண்டாத விஷயம் நடந்துவிட்ட உணர்வைத் தருகின்றன. மாதவிடாய் சுழற்சி என்பது ஒரு பெண் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதற்கு அடையாளம். பெண்ணின் வளர்ச்சிப் படி நிலைகளில் இதுவும் ஒன்று.

ஆனால், ஒரு பெண் பருவம் எய்துவதை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது?மாதவிடாய் நாட்களில் பெண் தீண்டத்தகாதவள், சுத்தம் இல்லாதவள், பெண் தொட்டால் பால் திரிந்து போகும், உணவு கெட்டுப்போய்விடும், தனியே உட்கார வேண்டும், சாமி கும்பிடக் கூடாது என்றெல்லாம் தடைகள்.

மாதவிடாய் பற்றிய இத்தகைய தவறான கருத்துகளால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படக்கூடிய உடல்ரீதியான சில அசெளகரியங்களை மனது பெரிதுபடுத்திப் பார்க்கும். அந்த நாட்களில் வெளிப்படுகிற ரத்தம், அசுத்தமானது என்றே பெரும்பாலானோர் நம்புகின்றனர்.

27chbri_illustration 1அருவருப்பு தேவையில்லை

கருப்பையின் உட்சுவரில் இளநீரின் உட்புறத்தில் வழுக்கை உள்ளதுபோல் உள்வரிச் சவ்வு பதிந்திருக்கும். இந்த உள்வரிச் சவ்வு நுண்ணிய ரத்த நாளங்களைக் கொண்டது. ஹார்மோன் சுரப்பால் சினை முட்டை முதிர்வடைவதுபோல் இந்த உள்வரிச் சவ்வும் உப்பித் தடிக்கும். சினை முட்டை ஆணின் விந்தணுவுடன் சேர்ந்து கரு உருவானால், அந்த கருவைத் தாங்கி வளர்வதற்காக உள்வரிச் சவ்வு படுக்கைபோல் தயாராக இருக்கும்.

கரு உருவாகாத பொழுது, கருத்தரிப்புக்காகச் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலைந்துபோகும். இப்படி கலைகிறபோது, ரத்த நாளங்களிலிருந்து ரத்தம் கசிய ஆரம்பிக்கும். இந்த ரத்தமும் கலைந்த உள்வரிச் சவ்வின் பகுதிகளும் சிதைந்த சினைமுட்டையும் கருப்பை வாய் வழியே வெளியேறும். இதுவே மாதவிடாய்.

குழந்தை உருவாகி இருந்தால் கருப்பையில் உள்ள உள்வரிச் சவ்வு படுக்கையில்தான் பொதிந்து வளர்ந்திருக்கும். அப்படியென்றால், அது சுத்தமான ரத்தத்தால் ஆனதா, அசுத்தமான ரத்தத்தால் ஆனதா?

அசுத்தமானது என்பதற்கும் வேண்டாத, பயன்படாத ரத்தம் என்பதற்குமான வித்தியாசத்தைச் சரியாகச் சொல்லவில்லையென்றால் அருவருப்புதான் மிஞ்சும்.

விழிப்புணர்வு தேவை

நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் கழிப்பறை இல்லாததுதான் இளம் பெண்களின் பெரிய பிரச்சினை. பள்ளியிலிருந்து பெண்கள் பாதியில் விலகுவதற்கு இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

கழிப்பறையின் தேவை மாதவிலக்கை ஒட்டியது மட்டுமல்ல. அதுவரை சிறுமியாக இருந்தவர்கள், திடீரென ஒரே நாளில் பெரிய மனுஷியாக உணரவைக்கப்படுகிறார்கள். சிறுநீர் கழிக்க, முன்புபோல் ரோடு ஓரத்தில் உட்கார முடிவதில்லை. சிறுநீர் கழிக்க வசதி இல்லாததால், அந்த உணர்வையே அடக்க முயல்கிறார்கள். தண்ணீர் குடித்தால், சிறுநீர் கழிக்கத் தோன்றும் என்று தண்ணீரே குடிக்காமல் இருந்துவிடுகிறார்கள்.

இதனால், சிறுநீர்த்தடத் தொற்று, மலச்சிக்கல், மாதவிடாய் காலத்தில் அரிப்பு போன்ற சுகாதாரக்கேடுகள் வருகின்றன. இயற்கை உபாதைகளை வெளியேற்ற முடியாதது அவர்களுக்கு மனஉளைச்சலைத் தருகிறது.

மாதவிடாய் பற்றிய வேண்டாத அருவருப்பு உணர்ச்சியைத் தோற்றுவிக்கிற சமூகம், மாதவிடாய் தொடர்பான சுய சுத்தம் பற்றி இளம்பெண்களுக்குச் சொல்லித் தருவதில்லை.

மாதவிடாய் நேரத்தில் சானிட்டரி நாப்கின்களை வாங்க முடியாததற்கு பொருளாதார வசதி ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், வெள்ளையாக்கும் அழகுசாதனப் பொருளை எப்படி வாங்க முடிகிறது? பெண்களின் இத்தகைய கோளாறுகளுக்குச் சமூக மதிப்பீடுதான் காரணம். பெண் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதைவிட, அழகாக இருக்க வேண்டும் என்றுதான் சமூகம் எதிர்பார்க்கிறது.

age3rightஆரோக்கியமே அவசியம்

மாதவிடாய் காலங்களில் சுத்தமான துணி அல்லது நாப்கின்களை பயன்படுத்த வேண்டும். ரத்தப்போக்கும் வியர்வையும் அதிகமாக இருந்தால் ஒரு நாளைக்கு ஆறு அல்லது ஏழு முறையாவது மாற்ற வேண்டும். உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும் நான்கு முறையாவது துணியை/நாப்கினை மாற்றுவது நல்லது. ஒரே துணியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய அரிப்பு, எரிச்சல் போன்றவற்றைத் துணியைப் போதிய இடைவெளியில் மாற்றுவதால் தவிர்க்கலாம்.

மாதவிடாய் நாட்களில் பயன்படுத்தும் துணிகளை மாதவிடாய் நாட்களிலும் மாதவிடாய் முடிந்த பிறகும் சோப்பு போட்டு நன்றாக அலசி, வெயிலில் காயவைக்க வேண்டும். காய வைத்த துணிகளை மடித்து, துணிப்பையில் பத்திரமாக வைக்க வேண்டும். துணிப்பைக்குள் வேப்பிலைகளைப் போட்டு வைக்கலாம். வேப்பிலை கிருமிநாசினி என்பதால் பூச்சி வராது.

மாதவிடாய் நாட்களில் உடல் அதிக அளவு நீரைத் தக்கவைத்துக்கொள்கிறது. உப்புக்கு நீரை உறிஞ்சும் தன்மை உண்டு. எனவே நாம் பயன்படுத்தும் உப்பின் அளவைக் குறைப்பது நல்லது. இதனால் உடலில் அதிக அளவு நீர் சேராது.

சிறிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உடல் இறுக்கத்தை அகற்றவும் தலைவலியைக் குறைக்கவும் மலச்சிக்கலை அகற்றவும் உதவுகிறது. அதிகமாகத் தண்ணீர் குடிப்பது ஜீரணத்துக்கு வழிசெய்கிறது. மலச்சிக்கலைத் தவிர்க்க இளம் சூடான தண்ணீரைக் குடிக்கலாம். கீரைகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

அடிவயிற்றில் ஏற்படும் வேதனையைக் குறைக்க கீழ்க்கண்ட பயிற்சிகள் உதவலாம்.

வெந்நீரில் குளித்தல், சூடான நீராகாரம் பருகுதல், வெந்நீரில் கால்களை நனைத்து வைத்திருத்தல், வெந்நீர் நிரப்பிய பையை/பாட்டிலை அடி வயிற்றில் வைத்திருத்தல், நடப்பது, முழந்தாள் மடிய குனிந்து கைகளைத் தரையில் ஊன்றிக்கொண்டு இளைப்பாறுதல், படுத்துக்கொண்டு கால் மூட்டுகளை உயர்த்திச் சிறு வட்டமாக மூட்டுகளை அசைத்தல், வழக்கமாகச் செய்கிற வேலைகளைத் தடையின்றிச் செய்தல் போன்றவற்றைச் செய்வதால் அடிவயிற்று வலியைக் குறைக்கலாம்.

(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்,செயற்பாட்டாளர்.
தொடர்புக்கு: maa1961@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x