Published : 12 Nov 2017 01:22 PM
Last Updated : 12 Nov 2017 01:22 PM

பெண்ணுக்கு நீதி 09: கங்கா என்ன செய்வாள்?

குழந்தைக்காக ஏங்கும் குடும்பங்கள்; குடும்பத்துக்காக ஏங்கும் குழந்தைகள் இந்த ஏக்கம் இரண்டையும் தத்தெடுத்தல் என்ற ஒரு பாலத்தின் மூலம் இணைக்க உதவுகிறது இளைஞர் நீதிச் சட்டம் 2015. தத்தெடுத்தலைப் பொறுத்தவரை, இந்தியாவில் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956) உள்ளது. இந்தச் சட்டம், தத்தெடுப்பவர்களும் தத்துக் கொடுப்பவர்களும் தத்துப்பிள்ளையும் இந்துவாக இருக்க வேண்டும் என்றும், தத்தெடுக்கப்படும்/கொடுக்கப்படும் குழந்தைகள் 15 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் கடினமான நிபந்தனைகளை விதித்துள்ளது. அதற்கு மாறாக, இந்த நவீன யுகத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வந்ததுதான் இந்தியா போன்ற மதச்சார்பில்லா நாட்டுக்குப் பொருத்தமான, தத்தெடுப்பு பற்றிப் பேசும் இளைஞர் நீதிச் சட்டம். சாதி, மதம், இனம், மொழி, தேசம் போன்ற குறுகிய எல்லைகளுக்குள் சுருங்காமல் ஐ.நா. சபையின் குழந்தைகள் உரிமை சாசனம் குறிப்பிடும் குழந்தைகளின் நலனை மட்டும் மையமாகக்கொண்டு தத்தெடுப்பு முறையின் எல்லைகளை விஸ்தரித்துள்ளது இந்தச் சட்டம். குழந்தைகளுக்கு ஒரு குடும்பத்தைக் கொடுப்பதன் மூலம் உலகத்தையே உருவாக்கித்தந்து கொண்டாடும் சட்டம், மணமாகாமலேயே தாய் ஆகிவிட்ட கங்காவின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிதறிய வாழ்க்கையை எப்படிச் சீரமைத்தது என்று பார்ப்போம்.

பெற்றோர் கண்களை மூடிய பரவசம்

கங்காவின் வயது 16. 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி. அந்தப் பருவத்துக்கே உரிய குறும்பும் சிரிப்பும் குதூகலமும் பார்க்கிறவர்களைப் பரவசப்படுத்தும்போது, பெற்றோரின் மகிழ்ச்சியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அந்தப் பரவசத்தில், கடந்த பல மாதங்களாக மகள் பள்ளியில் இருந்து தாமதமாக வந்தது ஏன் என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை.

புன்னகை தவழும் அவளது முகம் சில நாட்களாக சோபை இழந்திருந்தது. ஒருநாள் சோகம் கவிந்த முகத்துடன் வீடு திரும்புவதை அவளுடைய தாய் கவனித்துவிட்டார். அடுத்தடுத்து வந்த நாட்களில் தன் அன்பு மகள் ஆடை மாற்றுவதைப் பார்க்க நேர்ந்தவர், ஆபத்தின் அடையாளத்தைக் கண்டார். கங்காவின் மேடிட்டிருந்த வயிறு, அவள் என்ன செய்திருப்பாள் என்பதைப் புரியவைத்தது. தாயும் தந்தையும் மாறி மாறிவிசாரணை நடத்தியதில் அவளுக்கு ஒரு காதலன் இருப்பதையும் நெருங்கிய பழக்கத்தில் தேவையற்ற, விரும்பத்தகாத கர்ப்பம் தனக்கு உண்டாகி இருப்பதையும் விவரித்தாள்.

கருக்கலைப்பைத் தடுக்கும் சட்டம்

தங்களுக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் மகளைக் கூட்டிப்போனார்கள். அந்த டாக்டர் இதுபோல் பல வழக்குகளைப் பார்த்திருக்க வேண்டும் என்பது அவரது முகத்தில் தெரிந்தது. “அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?” என்றொரு கேள்வியைக் கேட்டாலும், அவருக்குமே அந்தக் கேள்விக்குப் பதில் இல்லாமல் இருந்தது. காரணம், கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ‘மருத்துவக் கருச்சிதைவுச் சட்டம்’ தடையாக இருந்தது.

சட்டம் சிந்தைக்குள் ஏறிய பிறகு, கர்ப்பத்தைக் கலைக்க முடியாது என்று அவர் கைவிரித்துவிட்டார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த கங்காவின் பெற்றோருக்குக் கால்களின் கீழ் பூமி நழுவியதுபோல இருந்தது. வேதனையோடு வெளியே வந்தார்கள். டாக்டர் சொன்னதைக் கேட்டு கங்காவும் கலங்கிப்போனாள். காரணம், அந்தக் கர்ப்பம் பல கேள்விகளை அவளுக்குள் எழுப்பியிருந்தது.

பள்ளிக்குத் தொடர்ந்து செல்ல முடியுமா, முடியாதா? அப்படிச் செல்ல வேண்டுமா, வேண்டாமா? குழந்தையைப் பெற்று வளர்க்கப் பணத்துக்கு எங்கே போவது? பள்ளிக்கு முழுக்கு போட்டுவிட்டு வேலைக்குச் செல்வதா? ஊர் அவமானத்தைச் சுமப்பது எப்படி? தான் ஏமாந்துபோன கதையை இடித்துக்காட்டும் பிறக்காத குழந்தையின் உதைகளை எப்படித் தாங்குவது? தீர்வே இல்லையென்றால், குப்பைத் தொட்டியில் குழந்தையை எறிந்து விடலாமா? இப்படி ஓராயிரம் கேள்விகளோடு முட்டி மோதி, வேறு வழியைத் தேடி, கால்போன போக்கிலும் மனம்போன போக்கிலும் போய்க்கொண்டிருந்தாள் கங்கா. வழியில் பூங்கா ஒன்றில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

கிடைக்குமா தீர்வு?

கங்காவுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவு விருப்பம். குழந்தைகளை வைத்த கண் வாங்காமல் மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டிருந்தாள் கங்கா. அவள் பார்ப்பதை இன்னொரு ஜோடிக் கண்கள் பார்த்தன. அந்தக் கண்களுக்குச் சொந்தக்காரி கங்காவின் தோழி சுந்தரி. சுந்தரி, கங்காவைவிடப் பத்து வயது மூத்தவள். சுந்தரிக்குக் கல்யாணமாகி ஆறேழு ஆண்டுகளாவது இருக்கும். கங்காவின் பால்யம் சுந்தரியுடன்தான் கழிந்தது. ஆனாலும், திருமணம் அவர்களது தோழமைக்கு இடைவேளை விட்டிருந்தது. சுந்தரி இந்தப் பூங்காவுக்குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறாள் என்பது கங்காவுக்குத் தெரியாது. சுந்தரி தன் குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பூங்காவுக்கு வந்திருக்கலாம் என்று அனுமானித்த கங்கா, “ அக்கா உன் குழந்தைகள் எல்லாம் எங்கே? நான் பார்க்கணுமே” என்று கேட்டாள். அதைக் கேட்ட சுந்தரி வெடித்து அழத் தொடங்கினாள். ஏதாவது தவறாகக் கேட்டுவிட்டோமோ என்று கங்கா ஸ்தம்பித்து நிற்க, “எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லை” என்று அழுகையோடு சொன்ன சுந்தரியை ஆசுவாசப்படுத்த கங்காவுக்குக் கொஞ்ச நேரமானது.

அந்த நேரத்தில் கங்காவின் மனதில் ஏதோ மின்னல் வெட்டியது. சுந்தரிக்குத் தான் செல்ல வேண்டிய திசை புரிந்துவிட்டது. ஆபத்தான கருக்கலைப்பு செய்து தாயும் சேயும் மடிவதற்குப் பதிலாக, நல்லபடியாகக் குழந்தை பெற்று, அதைச் சுந்தரிக்குத் தத்துகொடுத்துவிடலாம் என்ற எண்ணம் உதித்தாலும் அது தீர்வைத் தருமா என்ற சந்தேகமும் இருந்தது. காரணம், இந்தக் குழந்தையை ‘வல்லுறவின் வாரிசு’ என்று சுந்தரி ஒதுக்கிவிடுவாளா? ஒருவேளை அவளுக்குக் குழந்தையைப் பிடித்தாலும், சுந்தரியுடைய கணவர் இதை ஏற்றுக்கொள்வாரா? மணமாகாமல் குழந்தை பெற்ற கங்கா, அந்தக் குழந்தையைத் தத்துக் கொடுக்க முடியுமா? இந்தக் கேள்விக்கெல்லாம் சட்டத்தின் பதில் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

(பாதைகள் விசாலமாகும்)

கட்டுரையாளர், முனைவர், நீதியரசர்

தொடர்புக்கு:judvimala@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x