Published : 29 Aug 2020 09:51 AM
Last Updated : 29 Aug 2020 09:51 AM

அரசின் அணுகுமுறை மாறாமல் தொற்றைக் கட்டுப்படுத்துவது கடினம்

தமிழகத்தில் கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கையும் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. கடந்த ஒரு மாதமாக 5,000-6,000 பேர் அன்றாடம் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாளுக்குநாள் புதிதாகத் தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்தாலும் சென்னையில் இருக்கும் வசதிகளும் அளிக்கப்படும் கவனமும் மற்ற மாவட்டங்களிலும் கிடைக்கின்றனவா என்பது கேள்விக்குறி. இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் கோவிட் நிலை பற்றியும் கோவிட் நோய்ப் பரவலுக்கான திட்டங்களில் தேவைப்படும் அணுகுமுறை மாற்றத்தைப் பற்றியும் சாத்தூரைச் சேர்ந்த மருத்துவர் அறம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

சென்னையைத் தவிர்த்த மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் கரோனா பரிசோதனை, சிகிச்சை, தனிமைப்படுத்துதல் நடைமுறைகள் எப்படி உள்ளன?

அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை முடிவு வெளியாவதற்கு ஒரு வாரம் ஆகிக்கொண்டிருந்தது. இப்போது நான்கைந்து நாள்கள் ஆகின்றன. கரோனா பரிசோதனை மேற்கொண்டால் முடிவு தெரியும்வரை குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக்குள் தனிமைப்படுத்தப்படுவது குறித்த அச்சத்தால் சாதாரணக் காய்ச்சல், சளி ஆகியவற்றுக்குக்கூட அரசு மருத்துவமனைக்குச் செல்ல மக்கள் தயங்குகிறார்கள். அரசு மருத்துவமனைகளுக்கு வரும் புறநோயாளிகள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு சரிந்திருக்கிறது. தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் அல்லது மருந்தகங்களில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறார்கள். இதனால் கரோனா தொற்று இருப்பவர்களைக் கண்டறிவது கடினமாக உள்ளது.

ஆனால், நாளுக்குநாள் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறதே?

இன்னமும்கூட முழுமையான தொற்று எண்ணிக்கை கண்டறியப்படுவதில்லை என்பதுதான் உண்மை. கரோனா தொற்றைக் கண்டறியப் பயன்படுத்தும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடைமுறையில் 60 சதவீதம்தான் சரியான முடிவு கிடைக்கிறது. எஞ்சிய 40 சதவீதத்தினருக்குத் தொற்று இருந்தாலும்கூட இல்லை என்று காண்பிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இதன் அடிப்படையில் கரோனா தொற்றை மூன்று விதமாகப் பிரிக்கிறார்கள். பி.சி.ஆர். பரிசோதனையில் கண்டறியப்படும் தொற்று (Swab Positive Corona), மருத்துவ அளவு கோல்களின்படியான தொற்று (Clinical Corona), கரோனா தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் (Suspected Corona infection).

இவர்களில் முதல் பிரிவினர் மட்டுமே கரோனா தொற்று இருப்பவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அவர்கள் மரணமடைந்தால் மட்டுமே அது கரோனா மரணமாகக் கணக்கிடப்படுகிறது. அதிலும் இதய நோய், அதிக சர்க்கரை ஆகியவை உள்ளவர்கள்தாம் இறக்கிறார்கள் என்கிறது தமிழக அரசு. உண்மையில் இந்தப் பிரச்சினை இருப்பவர்கள்கூட கரோனா தொற்று ஏற்பட்டதால்தான் இறந்தார்கள் என்பதை மறுக்க முடியாது.

உலக அளவில் நம் நாட்டுத் தொற்று எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். இதுபோன்ற பெருமிதங்கள் தேவையற்றவை. மாறாக, மேலே குறிப்பிட்ட மூன்று பிரிவினரையும் கரோனா தொற்றுள்ளவர்களாகவே கருத வேண்டும். மூன்று பிரிவினரின் எண்ணிக்கையையும் வெளியிட வேண்டும். அதன் மூலம்தான் நோய்த் தொற்றின் உண்மையான வீச்சு தெரியவரும். அதன் அடிப்படையில் நோய்த் தடுப்பு, சிகிச்சை நடவடிக்கைகளை முழுமையாகத் திட்டமிட வேண்டும்.

இப்படிச் செய்வதால் நாளுக்குநாள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம். இது மக்களிடையே பதற்றத்தை அதிகரிக்காதா?

பதற்றப்படத் தேவையில்லை. அணுகுமுறை மாற்றம்தான் தேவை. தொற்று கண்டறியப்படுகிறவர்களில் 40 வயதுக்குக் குறைவானவர்களில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் போன்ற நீண்டகாலக் கோளாறுகள், சிறுநீரகச் செயலிழப்பு, புற்றுநோய் உள்ளிட்ட தீவிர நோய்கள், உடல் பருமன் உள்ளிட்டவை இல்லாதவர்கள் மிக எளிதாகத் தொற்றிலிருந்து மீண்டுவிடலாம். சி.ஆர்.பி., சி.டி. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மூலம் கரோனா தொற்றின் தீவிரத்தைக் கண்டறிய முடியும்.

இதில் சி.ஆர்.பி. (C Reactive Protein) பரிசோதனையைக் காய்ச்சல் வந்த முதல் நாளிலேயே செய்துவிட வேண்டும். அதற்கேற்றபடி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கரோனா தொற்று கண்டறியப்படு பவர்களில் சளி-இருமல் இருப்பவர்கள், துணை உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். இதற்கான வசதிகள் நம்மிடம் உள்ளன. ஆனால், முழுமையாக அவை பயன் படுத்தப்படுவதில்லை. இதைச் செய்வதன் மூலமும் கரோனா மரணங்களைத் தடுக்க முடியும்.

இவற்றையெல்லாம் முறைப்படுத்திவிட்டால் தொற்று கண்டறியப்படுபவர்களில் 80 சதவீதத்தினரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருக்காது. நாடித்துடிப்பைப் பரிசோதிக்கும் கருவி (Pulse Oximeter), டிஜிட்டல் தெர்மாமீட்டர் போன்றவற்றை அனைவருக்கும் இலவசமாகக் கொடுக்க வேண்டும். அவற்றை வைத்து நாடித்துடிப்பு, உடல் வெப்பநிலை ஆகியவற்றை நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பரிசோதித்து தகவல் அனுப்பச் சொல்லலாம்.

மற்றவர்களை மட்டும் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கண்காணிக்கலாம். இப்படிச் செய்தால் மக்களுக்குப் பயம் குறையும். மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ளத் தயங்க மாட்டார்கள். இதன் மூலம் உண்மையிலேயே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, முழுமையான சிகிச்சை கிடைக்கும்.

இவை எல்லாவற்றையும் கடந்து, கரோனா தொற்று எண்ணிக்கையைக் குறைப்பதற்கான வழி என்ன?

மே மாதத்திலிருந்து ஜூலை மாதத்தில் தொற்று எண்ணிக்கை 600 சதவீதம் அதிகரித்துள்ளது. இது போன்ற தகவல்களை வைத்து ஊரடங்கால் எந்தப் பயனும் இல்லை என்று நம்புகிறோம். ஆனால் ஊரடங்கு இல்லையென்றால், இந்த அதிகரிப்பு விகிதம் 600 சதவீதத்துக்கு பதிலாக 1000-1,500 சதவீதமாக இருந்திருக்கும். எனவே, ஊரடங்கைத் தளர்த்த அவசரப்படக் கூடாது. படிப்படியாகத்தான் தளர்த்த வேண்டும். அதேநேரம் ஊரடங்கால் எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதையும் பேசாமல் விட்டுவிட முடியாது. ஜூலை மாதம்வரை ஒரு குடும்பத்துக்கு ரூ.1,000 கொடுக்கப்பட்டது. இது மிகவும் குறைவு. உண்மையில் தனிமைப் படுத்தல், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்குச் செலவாகும் பணத்தை மக்களின் வாழ்வாதாரத்துக் கான நிவாரணமாக வழங்கப் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் பேருக்குப் பரிசோதனை மேற்கொள்வதில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் முடிவு உடனடியாகத் தெரிந்துவிடும். ரூ.500தான் செலவு. டெல்லி, தெலங்கானா மாநிலங்களில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஐ.சி.எம்.ஆரும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதைத் தமிழகத்திலும் பயன்படுத்தலாம். ஏன் இதற்கு மாற மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

மக்கள் எப்படிப்பட்ட கூடுதல் விழிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்?

வெளியே சென்று வந்த பிறகு சோப்பு போட்டுக் கைகழுவ வேண்டும். உணவு உண்பதற்கு முன்பும் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். மூக்கு, வாய் இரண்டையும் முழுமையாக மறைத்திருக்கும்படி அதை அணிய வேண்டும். முகக்கவசத்தைத் தொடக் கூடாது. எந்தக் காரணத்தைக் கொண்டும் மூக்கு, வாயைத் தொடக் கூடாது. தொடுவதென்றால் கை கழுவிவிட்டுத்தான் தொட வேண்டும். பணியிடங்களில் தள்ளித் தள்ளி உட்கார்ந்துகொள்ள வேண்டும். கும்பல் சேரவே கூடாது. நெருக்கமாக அமரக் கூடாது. அறைக்குள் இருப்பதைவிட வெளியில் இருப்பது பாதுகாப்பானது.

ஆடி முடிந்து ஆவணி மாதம் தொடங்கிவிட்டதால் திருமணம், புதுமனை புகுவிழா ஆகியவை பரவலாக நடைபெறத் தொடங்கிவிட்டன. இதனால் மக்கள் ஒரே இடத்தில் கூடுவது அதிகரித்துவிட்டது. இப்படி ஒரே இடத்தில் அநேகர் கூடுவது மிக மிகத் தவறு. அப்படியே விழா நடத்திதான் ஆக வேண்டும் என்றால், வீட்டிலேயே குறைந்த நபர்களை வைத்து நடத்திட வேண்டும்.

கட்டுரையாளர் தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x