Published : 30 Nov 2016 10:03 AM
Last Updated : 30 Nov 2016 10:03 AM

காரணம் ஆயிரம்: தண்ணி காட்டும் தண்ணீர்!

ரொம்பவும் தாகத்துடன் வீட்டுக்குள் நுழைகிறீர்கள். ஃபிரிட்ஜைத் திறந்து, தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக்…மடக்கெனத் தண்ணீர் குடிக்கிறீர்கள். இப்போது கேள்வி இதுதான்: குடிக்கிற தண்ணீர் எப்படித் தொண்டைக் குழிக்குள் போகிறது? அது வாயில் நிரம்பி வெளியே வழிவதில்லையே? இது என்ன கேள்வி, தண்ணீர் குடித்தால் வயிற்றுக்குத்தானே போகும்? அது எப்படி வழியும்?

குழந்தைகளுக்கு அம்மாக்கள் வலுக்கட்டாயமாக மருந்து கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். குழந்தை முரண்டு பிடித்து அழும்போது, அந்த மருந்து வெளியில் வழியத்தானே செய்கிறது. அழாமல் இருந்தால்கூட அனிச்சை செயல் மாதிரி அது கடைவாய் வழியே வெளியே வழிந்து விடுவதையும் பார்த்திருப்பீர்கள், இல்லையா? தொண்டைக்குள் ஊற்றும் தண்ணீர் (குடிக்கும் தண்ணீர்) உள்ளே சென்றுவிடும் என்றால், சில சமயங்களில் ஏன் அது கீழே வழிகிறது? இறந்தவர்களின் வாயில் ஊற்றும் தண்ணீரோ பாலோ ஏன் உள்ளே செல்லாமல் வழிகிறது?

தண்ணீர் குடிப்பதன் பின்னால் ஒரு பெரிய அறிவியல் தத்துவம் ஒளிந்திருக்கிறது. அதற்கு முன், ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளுங்கள். கடைகளில் மண்ணெண்ணெய் வாங்கும்போது பாட்டிலில் அல்லது கேன்களில் புனல் வழியாக ஊற்றுவார்கள் அல்லவா? புனலில் மண்ணெண்ணெயை ஊற்றும்போது, புனல் நிரம்பி வழிவது போலத் தெரிந்தால், புனலை சற்று மேலே தூக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் எண்ணெய் ஊற்ற வேண்டிய பாட்டில் அல்லது கேனில் முழுவதுமாக காற்று நிரம்பியிருக்கும். இவ்வாறு நிரம்பியிருக்கும் காற்று எண்ணெய் உள்ளே விடாமல் அடைத்துக்கொண்டு விடும். புனலை மேலே தூக்கி காற்றை வெளியேற்றினால், மீண்டும் எண்ணெயை உள்ளே ஊற்ற முடிகிறது.

பாட்டிலில் உள்ள காற்று வெளியேற முடியாமல் புனல் அடைத்துக்கொள்வதால் புனலை மேலே தூக்கி சரிசெய்ய வேண்டியிருக்கிறது. இந்தக் காற்றழுத்த மாறுபாடு தண்ணீர் குடிக்கும்போது நடக்கிறது. இதுதான் அறிவியல் ரகசியம்.

தண்ணீரை உறிஞ்சும்போது (அது ஸ்ட்ரா வழியாக உறிஞ்சினாலும் சரி) வளிமண்டலக் காற்றழுத்த மாறுபாடு, நாம் தண்ணீர் குடிப்பதைப் பாதிக்கச் செய்கிறது. முதலில், நாம் தண்ணீர் குடிக்கத் தயாரானவுடன் நம் மார்புக்கூடு விரிவடைந்து நுரையீரல் விரிவடைகிறது. நுரையீரல் விரிவடைவதால் அதன் பரப்பளவு (கொள்ளளவு) அதிகரிக்கிறது. எனவே மார்புக்கூட்டில் உள்ள காற்றின் அடர்த்தி குறைகிறது. அடர்த்தி குறைந்த இடத்தை நோக்கி, அழுத்தம் அதிகமான வெளிப்புறக் காற்று உள்ளே செல்கிறது. செல்லும் வழியில் உள்ள தண்ணீரை (நாம் உதட்டருகே உறிஞ்சும் தண்ணீரை) அது உட்புறமாகத் தள்ளுகிறது. அதனால்தான் நாம் தண்ணீரைக் குடிக்க முடிகிறது.

வெப்பத்தால் காற்று விரிவடைவதால் அதன் அடர்த்தி குறையும். எனவேதான் வெயில் காலங்களில் நமக்கு அதிக தாகம் எடுக்கிறது. குளிர் காலங்களில் நம் உடலுக்குள் இருக்கும் காற்று அடர்த்தி அதிகமாக இருப்பதால் நமக்கு தாகம் எடுப்பதில்லை. குளிர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரலில் காற்றின் அடர்த்தி அதிகமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் தண்ணீர் குடிக்க மிகவும் சிரமப்படுவார்கள்.

வாய் வழியாகத்தான் தண்ணீர் குடிக்கிறோம். ஆனால், உண்மையில் தண்ணீர் குடிப்பதற்கு நிறைய உதவி செய்வது காற்றும் நுரையீரலும்தான்.

இது உண்மையா என்பதை இன்னொரு உதாரணத்தின் மூலம் நிரூபிக்கலாமா?

# சிறிய வாயுள்ள தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள்

# பாட்டிலின் வாய்ப் பகுதியை, உங்கள் உதடுகளால் முழுமையாக மூடிக்கொள்ளுங்கள். (அந்த பாட்டிலில் சிறிதளவு தண்ணீர் இருக்கலாம்).

# உங்கள் உதடுகளால் பாட்டிலின் வாயை முழுமையாக மூடிக்கொண்ட பின், உங்கள் உதடுகளோடு அந்த பாட்டில் முழுமையாக ஒட்டிக் கொள்ளும். அப்போது உள்ளே இருக்கும் நீரை உங்களால் உறிஞ்ச முடியாது.

அதுபோல அந்த பாட்டிலும் கீழே விழாது. என்ன காரணம் தெரியுமா? உங்கள் வாயில் இருக்கும் காற்றின் அழுத்தமும், பாட்டிலின் உள்ள காற்றின் அழுத்தமும் சமமாக இருப்பதே. சமமான காற்றழுத்தம் இரண்டு பொருள்களுக்கு இடையே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

கட்டுரையாளர்: அரசுப் பள்ளி ஆசிரியர்
தொடர்புக்கு: suriyadsk@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x