Published : 25 Mar 2020 08:24 AM
Last Updated : 25 Mar 2020 08:24 AM

டிங்குவிடம் கேளுங்கள்: விலங்குகள் ஏன் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை ஈனுகின்றன​

வேப்ப மரத்தில் தெய்விகத் தன்மை இருக்கிறதா, டிங்கு?

- பா. லாவண்யா, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம், திருவள்ளூர்.

வேப்ப மரத்துக்கு மருத்துவக் குணம் உண்டு. பல்வேறு வகையான மருத்துவத்தில் வேப்ப மரத்தின் பாகங்கள் பயன்படுகின்றன. இவ்வளவு மருத்துவக் குணம் கொண்ட வேப்ப மரத்தைக் காப்பாற்றுவதற்காக யாரோ தெய்விகத் தன்மையை உருவாக்கியிருக்கலாம். மற்றபடி இந்த நம்பிக்கைக்கு அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை, லாவண்யா.

முருங்கை மரத்தில் கம்பளிப்புழுக்கள் ஏராளமாக இருந்தன. உயிர்களை அழிக்க வேண்டாம் என்பதால் விட்டு வைத்திருந்தோம். ஒரு நாள் எனக்கு கம்பளிப்புழுவால் அரிப்பு ஏற்பட்டு, துன்பப்பட்டேன். உடனே கம்பளிப்புழுக்களை தீயிட்டு அழித்தனர். வண்ணத்துப்பூச்சிகளாக மாறக்கூடிய கம்பளிப்புழுக்களை அழித்தது எனக்கு வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வது, டிங்கு?

- இர. ஆரவ் அமுதன், 4-ம் வகுப்பு, மதுரை பப்ளிக் பள்ளி, விசுவநாதபுரம், மதுரை.

பிற உயிர்களைக் கண்டு வருந்தக்கூடிய எவ்வளவு அக்கறையான மனம் உங்களுக்கு, ஆரவ் அமுதன்! எல்லாக் கம்பளிப்புழுக்களும் வண்ணத்துப்பூச்சிகளாக மாறுவதில்லை. சில வகை கம்பளிப்புழுக்கள் வண்ணத்துப்பூச்சிகளாகவும் சில வகை கம்பளிப்புழுக்கள் விட்டில் பூச்சிகளாகவும் உருவாகின்றன. கம்பளிப்புழுக்களில் புரதச்சத்து அதிகம் இருப்பதால் பறவை, விலங்கு போன்றவை விரும்பி உண்ணுகின்றன. எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்வதற்காக அவற்றின் உடல் முழுவதும் தூவிகளை உருவாக்கியிருக்கிறது இயற்கை. இந்தத் தூவிகளைத் தொடும்போது அதிலிருந்து வேதிப்பொருள் வெளியேறுவதால் நமக்கு அரிப்பு ஏற்படுகிறது. நீங்கள் கம்பளிப்புழுக்களைத் தேவை இல்லாமல் அழிக்கவில்லை. உங்களுக்கு ஆபத்து வரும்போதே அந்தச் செயலைச் செய்திருக்கிறீர்கள். கம்பளிப்புழுவுக்குத் தன்னைக் காத்துக்கொள்ளும் உரிமை இருப்பதுபோல் நமக்கும் இருக்கிறது. அதனால் வருத்தப்பட வேண்டாம்.

ஒலி வெற்றிடத்தில் பயணிப்பதில்லை. ஆனால், ஒளி பயணிக்கிறது ஏன், டிங்கு?

- டி.என். மோனிஷ் ராம் , 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எம். பள்ளி, பெருங்களத்தூர், சென்னை.

ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றன. அந்த அதிர்வு காற்றில் ஒலி அலைகளை உருவாக்குகிறது. தான் செல்லும் ஊடகத்தில் உள்ள மூலக்கூறுகளை அதிர்வுறச் செய்கிறது. அதனால்தான் ஒலியை நம்மால் கேட்க முடிகிறது. மணி அடித்தால் அந்த அதிர்வில் ஒலி உருவாகி, காற்றில் பயணித்து நம் செவிப்பறையைத் தட்டுவதால் ஒலியை நம்மால் கேட்க முடிகிறது. ஒலி திட, திரவ, வாயு நிலைகளில் பயணிக்கக்கூடியது. ஒலியால் வெற்றிடத்தில் பயணிக்க இயலாது. ஒலி பரவ மூலக்கூறுகள் தேவை. காற்றைவிட நீரில் ஒலி வேகமாகப் பரவும். நீரைவிட திடப் பொருட்களில் இன்னும் வேகமாகப் பரவும். நம் கண்களுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள்தான் ஒளி என்று அழைக்கப்படுகின்றன. அலை, துகள் இரண்டின் பண்புகளையும் வெளிப்படுத்தும் ஒளி பயணிக்க ஊடகம் தேவை இல்லை. அதனால் வெற்றிடத்திலும் ஒளி பயணிக்கிறது, மோனிஷ் ராம்.

கால்களை ஆட்டாமல் உட்கார வேண்டும் என்று சொல்கிறார்களே ஏன், டிங்கு?

- பி. ரோஹித், 6-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். பள்ளி, சமயபுரம், திருச்சி.

நம்மால் கை, கால், தலை போன்றவற்றை அசைக்காமல் இருக்கவே முடியாது. கால்களை ஆட்டும்போது, அருகில் இருக்கிறவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் என்பதால் இப்படிச் சொல்கிறார்கள் என்று நினைக்கிறேன். அடுத்தவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் நம் கால்களை ஆட்டுவதில் பிழை ஒன்றும் இல்லை, ரோஹித்.

விலங்குகள் ஏன் அதிக அளவில் குட்டிகளை ஈனுகின்றன, டிங்கு?

- ச. காயத்ரி, 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருங்குளம்.

ஓர் இனம் உற்பத்தி செய்யும் சந்ததிகளின் எண்ணிக்கை, அவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்பின் அடிப்படையில் இயற்கையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேட்டை விலங்குகளுக்கு இரையாகக்கூடிய உயிரினம் அதிக அளவில் குட்டிகளை ஈன்றெடுக்கும். ஏன் என்றால் எதிரிக்கு இரையானது தவிர, வெகு சிலவே உயிர் பிழைத்திருக்கும் என்பதால் அந்த இனத்தில் குட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால்தான் மான், முயல், எலி போன்றவை அதிக அளவில் குட்டிகளை ஈனுகின்றன. இவற்றின் குட்டிகள் பிழைத்திருக்கும் வாய்ப்பு வெகு குறைவு. சிங்கம், புலி, ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகள் குறைவான குட்டிகளையே ஈனுகின்றன. இவற்றின் குட்டிகளுக்குப் பிழைத்திருக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது, காயத்ரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x