

மிது கார்த்தி
மழையில் காகிதக் கப்பலைச் செய்து தண்ணீரில் விடுவீர்களா? அப்படி ஒரு விளையாட்டைத் தரையில் விளையாடுவோமா? (பெரியவர்களின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்
என்னென்ன தேவை?
பழைய சிடி அல்லது டிவிடி
பலூன்
தண்ணீர் பாட்டிலின் பிளாஸ்டிக் மூடி
சிறிய ஆணி
எப்படிச் செய்வது?
* பிளாஸ்டிக் மூடியை எடுத்து, அதன் நடுவே சிறிய ஆணியைக் கொண்டு துளையிடுங்கள். (கஷ்டமாக இருந்தால், ஆணியைச் சூடுபடுத்தி துளையிடலாம்).
* சிடியின் மையப் பகுதியில் அந்த மூடியைப் பசையால் ஒட்டுங்கள். சற்று நேரம் அதை உலரவிடுங்கள்.
* இப்போது பலூனை நன்றாக ஊதுங்கள். பலூன் பெரிதான பிறகு, அதை மூடியின் வாயில் பொருந்திவிடுங்கள். (காற்று பக்கவாட்டில் வெளியேறாதபடி கவனமாகப் பொருத்த வேண்டும்.)
* இது ஒரு படகுபோலத் தெரியும். இப்போது சிடியை வழவழப்பான தரை அல்லது மேசையில் வைத்து லேசாகத் தள்ளிவிடுங்கள். சிடி அங்கும் இங்கும் வேகமாக நகருவதைப் பார்க்கலாம்.
* மூடியில் உள்ள துளையின் வழியாகக் காற்று முழுவதுமாகச் செல்லும்வரை சிடியைத் தள்ளிவிட்டு, ஆசைத் தீர விளையாடலாம். லேசாகத் தள்ளிவிடும் சிடி வேகமாக அங்கும் இங்கும் நகர காரணம் என்ன?
காரணம்
தரை அல்லது மேசையின் பரப்பில் வைத்து சிடியைத் தள்ளும்போது, பலூனில் உள்ள காற்று அதிக அழுத்தத்துடன் மூடியில் உள்ள துளையின் மூலம் வேகமாக வெளியேறும். அப்போது சிடியின் அடிப்பரப்புக்கும் மேஜைக்கும் இடையே காற்றுப்படலம் உருவாகும்.
இந்தக் காற்று படலமானது ஓர் உராய்வு விசையைப் போலச் செயல்படும். துளையின் வழியாகக் காற்று வெளியேறும்போது, வெளியேறும் காற்றின் திசைக்கு எதிர்த்திசையில் சிடி நகருகிறது. அதனால்தான் சிடி அங்கும் இங்கும் நகருகிறது.
சந்தேகம்
சிடியைத் தள்ளிவிடும்போது காற்றின் திசைக்கு எதிர்த் திசையில் எப்படி நகர்கிறது? ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் இயக்க விதியின்படிதான் சிடி நகருகிறது.
பயன்பாடு
நீரிலும் நிலத்திலும் செல்லும் மிதவைப் படகு இந்தத் தத்துவத்தின்படியே செயல்படுகிறது.