Published : 24 Jul 2019 10:14 AM
Last Updated : 24 Jul 2019 10:14 AM

டிங்குவிடம் கேளுங்கள்: செல்போனால் கொம்பு முளைக்குமா?

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் கொம்பு முளைக்கும் என்கிறார்களே, உண்மையா டிங்கு? 

– உலகா, 6-ம் வகுப்பு, வெட்டுண்ணிமடம், 
வடசேரி, நாகர்கோவில்.

சமீபத்தில் இப்படி ஓர் ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது. ஆனால், ’கொம்பு முளைக்கும்’ என்பது மிகைப்படுத்தப்பட்ட தகவல். செல்போனைப் பயன்படுத்தும்போது நம் தலை முன்னோக்கிக் கவிழ்கிறது. தலையின் எடை முன்பக்கம் அதிகரிக்கும்போது, பின்னந்தலையில் உள்ள மண்டை ஓட்டின் மீது 10-30 மில்லிமீட்டர் அதாவது அரை அங்குலத்துக்கும் குறைவான புடைப்பு ஒன்று உருவாவதாக இந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. 18 முதல் 86 வயதுடையவர்களின் எக்ஸ்ரேக்களை ஆராய்ந்தபோது, மூன்றில் ஒருவருக்குப் புதிதாக ஒரு புடைப்பு உருவாகியிருக்கிறது தெரிய வந்திருக்கிறது.

இதில் 18 வயதுக்காரர்களுக்குதான் புடைப்பு அதிகமாக இருந்திருக்கிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் எலும்புகளும் மாற்றங்களைச் சந்தித்து வந்திருக்கின்றன. இது வெளியில் தெரியாத அளவுக்கு இருக்கும் சாதாரணமான புடைப்பா, அல்லது வெளியில் வரக்கூடிய கொம்பா என்பது எல்லாம் எதிர்காலத்தில்தான் தெரியும். உடனடியாகப் பதற வேண்டிய அவசியம் இல்லை, உலகா. அதேநேரம் செல்போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் கழுத்து வலி, முதுகு வலி, தலை வலி, கண் வலி என்று பலப் பிரச்சினைகளும் வருகின்றன. அதனால் கொம்பு முளைத்தாலும் முளைக்காவிட்டாலும் செல்போன் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதுதான் நல்லது.

கடவுள் இருக்கிறாரா, டிங்கு? 

- மு. மலர்விழி, 8-ம் வகுப்பு, 
வேலம்மாள் வித்யாலயா, 
மாங்காடு, சென்னை.

கடவுள் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம். கடவுள் இருக்கிறார், இல்லை என்று நான் எப்படிச் சொல்ல முடியும்? 8-ம் வகுப்பு படிக்கும்போதே இப்படி ஒரு கேள்வியை யோசித்திருக்கிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நிறையப் படியுங்கள். நிறைய சிந்தியுங்கள். காலப்போக்கில் நீங்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவீர்கள், மலர்விழி.

Bachelor of Medicine, Bachelor of tt Surgery (MBBS) என்பதில் ’Bachelor’ ஆண்பாலைக் குறிக்கும் சொல்.  பல்வேறு பட்டங்களும் இவ்வாறே வழங்கப்படுகின்றன. அப்படி என்றால் ஆண்கள்தான் படிக்க வேண்டுமா?  பெண்களும் படிப்பதால் Spinster of Medicine, Spinster of Surgery என்று வைப்பதும் சரியாகத் தெரியவில்லை. இதை ஏன் Graduation in Medicine & Surgery என்று மாற்றக் கூடாது, டிங்கு? 

- சு.இரா. விண்மதி, 6-ம் வகுப்பு,
ஸ்ரீ சங்கர வித்யாலயா, கிழக்கு தாம்பரம்.

அடடா! இந்த வயதில் எவ்வளவு யோசிக்கிறீர்கள் விண்மதி! பிரிட்டனில் பெண்கள் அதிகம் படிக்காத காலகட்டம். அங்கே ஓர் ஆண் படித்து, வேலை செய்து, திருமணத்துக்குத் தயாராக இருப்பதைக் குறிக்கும் வார்த்தையாக ‘பேச்சிலர்’ இருந்தது. அதனால் பட்டப்படிப்புக்கு ‘பேச்சிலர்’ டிகிரி என்று வைத்துவிட்டனர். பிரிட்டனின் காலனி ஆதிக்கம் இருந்த இந்தியா உட்பட்ட நாடுகளில் பல விஷயங்களில் பிரிட்டனையே பின்தொடர்ந்ததால், இங்கும் ‘பேச்சிலர்’ டிகிரி என்றே பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் சொல்வதுபோல் ’கிராஜுவேஷன் இன் சைன்ஸ்’, ‘கிராஜுவேஷன் இன் ஆர்ட்ஸ்’ என்று கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.

‘கற்பனை நிஜமான கதை' கட்டுரையில் இடம்பெற்றிருந்த படத்தில் கொடி பறக்கிறது. சந்திரனில் காற்று இல்லாதபோது எப்படிக் கொடி பறக்கும், டிங்கு? 

- அ. சுபிக்ஷா, 10-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

நல்ல கேள்வி சுபிக்ஷா. சந்திரனில் வைப்பதற்காகவே அமெரிக்கக் கொடி சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டது. நைலானால் கொடி தயாரிக்கப்பட்டது. கொடி நிற்பதற்காக, கொடியின் மேல் பக்கத்திலும் கீழ்ப் பக்கத்திலும் அலுமினியக் குச்சிகள் வைத்து தைக்கப்பட்டன. சந்திரனில் இறங்கிய பிறகு, ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் கொடியை நடுவதற்காகத் தரையைத் தோண்டினர். அங்கு நிலவிய கடினமான சூழல் காரணமாக 7 அங்குல ஆழத்துக்கு மட்டுமே தோண்ட முடிந்தது.

அதில் ஆல்ட்ரின் கொடியை நட்டார். அப்போது ஏற்பட்ட அதிர்வுகளில் கொடி பறப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆல்ட்ரினும் ஆம்ஸ்ட்ராங்கும் கொடிக்கு அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டனர். விண்கலத்திலிருந்து 27 அடி தூரத்தில் கொடி நடப்பட்டிருந்தது. ஆழமாக ஊன்றப்படாத கொடிக் கம்பம், விண்கலம் அங்கிருந்து கிளம்பும்போது ஏற்பட்ட அதிர்வுகளாலும் தூசிகளாலும் விழுந்திருக்கலாம் என்றார் ஆல்ட்ரின். பின்னர் அமெரிக்கா 5 முறை மனிதர்களைச் சந்திரனில் இறக்கியது. கொடிகளை நட்டது. ஆல்ட்ரின் சொன்னதுபோலவே அப்பல்லோ 11 மூலம் நட்ட கொடியைப் பிறகு பார்க்க முடியவில்லை. அப்பல்லோ 14, அப்பல்லோ 15 நட்ட கொடிகளையும் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x