Published : 08 Jun 2016 12:51 pm

Updated : 14 Jun 2017 12:47 pm

 

Published : 08 Jun 2016 12:51 PM
Last Updated : 14 Jun 2017 12:47 PM

நாட்டுக்கொரு பாட்டு - 9 : ஒரு வல்லரசு தேடிய கீதம்!

9

ஒரு நாட்டுக்குத் தேசிய கீதம் எவ்வளவு முக்கியமானது? அதை அடிக்கடி மாற்ற முடியுமா? உலகில் அதிக முறை மாற்றப்பட்ட ஒரு தேசிய கீதம் உள்ளது. அது எந்த நாட்டினுடையது தெரியுமா? ரஷ்யா!

அப்போது தேவாலயங்களில் பிரபலமாக ஒரு பாடல் இருந்தது. அந்தப் பாடலே சோவியத் யூனியனின் தேசிய கீதமாக இருந்தது. சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்பு, 1816-ல் முதன் முதலில் தேசிய கீதத்தை அமைத்துக்கொண்டார்கள். 1833-ல், அப்போதைய இளவரசர் அலெக்ஸைல் வால்வ் இசை அமைத்த பாடல், மன்னர் முதலாம் நிகோலஸுக்குப் பிடித்துப் போனது. அதுவே தேசிய கீதம் ஆனது.


பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து மார்ச் 1917-ல், ஒரு பிரெஞ்சு பாடலையொட்டி ஒரு பாடல் இயற்றப்பட்டது. அது அதிகாரபூர்வமற்ற முறையில் இசைக்கப்பட்டது.

சில மாதங்கள் கழித்து 1917 அக்டோபரில் ‘ஆஹாவென்று எழுந்தது யுகப் புரட்சி!' (நன்றி: பாரதியார்) 'ல இன்டர்னேஷனலி...' என்று இன்றும் பலராலும் போற்றப்படுகிற சர்வதேசப் புரட்சிகர சோசலிசப் பாடல், தேசிய கீதம் ஆனது. இது, 1944-ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 1944 முதல் 1956 வரை அலெக்ஸாண்டர் அலெக்ஸ் ஆன்ட்ரோவ் இசையமைப்பில் செர்ஜி மிக்கால் கோவ் & கேப்ரியல் எல்-ரெஜிஸ்டான் இணைந்து எழுதிய ஒரு பாடல் தேசிய கீதமானது. 1953-ல் ஜோச ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, அவரால் கொண்டுவரப்பட்ட பாடலின் வரிகள் நீக்கப்பட்டன.

1956-ல் இசை வடிவம் மட்டும் பின்பற்றப்பட்டது. 1970-ல் கவிஞர் மிக்கால்கோவ், முந்தைய பாடலில் சில திருத்தங்களைச் செய்துகொடுத்தார்.

1977-ல் இது ஏற்கப்பட்டது. அந்தப் பாடல் மீண்டும் தேசிய கீதமானது. 1991-ல் உள்நாட்டில் அரசியல், பொருளாதாரக் குழப்பங்கள் ஏற்பட்டன. சோவியத் யூனியன் சிதறியது.

மாநிலங்கள் எல்லாம் தனித்தனியே பிரிந்து போயின. ‘ரஷ்யா' என்ற மாநிலம் தனி நாடாக மாறியது. முன்பு சோவியத் யூனியனில் இருந்தாலும், பல மாநிலங்களுக்கும் தனித்தனியே கீதம் இருந்தது. ரஷ்யாவுக்கு மட்டும் இல்லாமல் இருந்தது.

இதன் பிறகு மிகைல் க்லிங்கா இசை 1993-ல் ஏற்கப்பட்டது. அந்த இசைக்கு ஏற்பப் பாடல் வரிகளை எழுதி அனுப்புமாறு பொதுமக்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது.

வந்தவை எதுவுமே சரியில்லை. அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ‘சரி, வார்த்தைகளே வேண்டாம்; இசை மட்டுமே இருந்து விட்டுப் போகட்டும்' எனச் சொன்னார் அதிபர் விளாதிமிர் புடின்.

2000-ம் ஆண்டில் சிட்னியில் ஒலிம்பி போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரஷ்ய விளையாட்டு வீரர்கள் அதிபர் புதினைச் சந்தித்தார்கள். ‘சர்வதேசப் போட்டிகளின்போது, வார்த்தைகள் இல்லாத தேசிய கீதம் பாடுவது எங்களுக்கு உற்சாகத்தைத் தரவில்லை' என்று புதினிடம் புகார் செய்தனர்.

உடனே அதை ஏற்றுக்கொண்ட அதிபர், தேசிய கீதப் பாடலைத் தேர்வு செய்யுமாறு தேசிய கவுன்சிலில் கேட்டுக்கொண்டார். மீண்டும் போட்டி அறிவிக்கப்பட்டது. ஆறாயிரத்துக்கும் அதிகமாகப் பாடல்கள் வந்தன. அவற்றில் 20 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு இசையமைக்கப்பட்டன.

2008 டிசம்பர் 8 அன்று ரஷ்ய நாடாளுமன்றத்தில், தேசிய கீதத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடந்தது. இதில் 381 - 51 என்ற கணக்கில் வாக்கெடுப்பு வெற்றி பெற்றது. மிகால்கோவ் எழுதி, அலெக்ஸான்ட்ரோவ் இசை அமைத்த பாடல் தேசிய கீதமானது.

2000-ம் ஆண்டு டிசம்பர் 30, அன்று முறையாக ரஷ்ய தேசிய கீதம் பாடப்பட்டது. எப்படி ரஷ்யத் தேசிய கீதம் ஒலிக்கும்?

ரொசீயா - ஸ்வாஷ்செனேயா நாஸா டெர்சாவா

ரொசீயா - லுபீமயா நாஷா ஸ்ட்ரனா

மொகூசயா வொல்யா வேலிகாய ஸ்லாவா

த்வோயோ தோஸ்தோயன்யே நா வ்ஸே வ்ராம்னா

ஸ்லாவ்ஸ்யா ஓலேசெஸ்ட்வா நாஸே ஸ்வபோத்னாயே

ப்ரட்ஸ்கி நராடாவ் சொயூஸ் வொகாவா

ப்ரேட்காமி டான்யா முத்ரோஸ்த் நரோதன் யா

ஸ்லவ்ஸ்யா ஸ்ட்ரானா மிகாட் இம்ஸ்யா தோபா

ஒட் யுஸ்னி மொரே தோ பாலியார்ன கோ யா

ரஸ்கிலிஸ் நஸி லேசா இ பொயா

ஒட்ன டி நா ஸ்வதே ஒட்ன டி தகாயா

க்ரனி மாயபோ கோம்ராட்னயா ஜெமிலா

ஸ்லாவ்ஸ்யா ........ இம்ஸ்யா தோபா (மீண்டும் 2வதுபத்தி)

ஷிரோகி ப்ரொஸ்டார் யா மெஷீட்டி இ லியா டிஸ்னி

க்ரடூஷியே நம் ஒட்ரி வாயுத் கொடா

நம் சிலூ டயாட் நஷாவர் னோஸ்த் ஒசீனே

தக் பீலோ தக் யேஸ்தீ தக் புடெட் சேட்கா.

ஸ்லாவ்ஸ்யா ........... இம்ஸ்யா தோபா (2வது பத்தி)

தமிழாக்கம்

ரஷ்யா - நமது புனித தாய் நாடு.

ரஷ்யா - நமது நேசத்துக்குரிய தேசம்.

வலிமையான மனவுறுதி, மாபெரும் மகிமை

இவை (யாவும்) எப்போதுக்குமான நமது பாரம்பரியம்.

மகிமையோடு இரு - எமது சுதந்திர தந்தை நாடே!

பழமை வாய்ந்த சகோதர மக்களின் ஒற்றுமை.

முன்னோர்கள் தந்த, மக்களின் மதி நுட்பம்.

மகிமையோடு இரு என் நாடே! உன்னை எண்ணிப் பெருமையுறுகிறோம்.

தென் கடல்களிலிருந்து துருவ நிலங்கள் வரை

எங்கள் வயல்களும் வளங்களும் விரயிருக்கின்றன.

உலகில் தனித்தன்மையுடன் நிற்கிறாய் - நீ மட்டுமாய்

இறைவனால் பாதுக்கப்பட்ட, பூர்வீக பூமி.

விரிந்த கனவு, அகன்ற வாழ்க்கை

வருங்காலங்களில் எங்களுக்காகத் திறக்கின்றன.

தந்தை நாட்டின் மீதான விசுவாசம் எங்களுக்கு வலிமை சேர்க்கின்றது.

இப்படித்தான் - இருந்தது; இருக்கின்றது; இருக்கும்.

(தேசிய கீதம் ஒலிக்கும்)


ஒரு வல்லரசு தேடிய கீதம்தேசிய கீதம்ரஷ்ய நாடாளுமன்றம்இம்ஸ்யா தோபாரஷ்ய தேசிய கீதம்நாட்டுக்கொரு பாட்டு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

environment-and-caste

சூழலும் சாதியும்

இணைப்பிதழ்கள்

More From this Author

x