Last Updated : 12 Apr, 2017 09:53 AM

 

Published : 12 Apr 2017 09:53 AM
Last Updated : 12 Apr 2017 09:53 AM

தினுசு தினுசா விளையாட்டு: வார்த்தை வட்டம்!

விளையாட்டு குழந்தைகளின் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதைப் போலவே, குழந்தைகளின் கற்றலுக்கும் வழிவகுக்கிறது. சில விளையாட்டுகளின் மூலமாகக் கூட்டல் கழித்தல் கணக்குகளைச் சுலபமாகக் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. மேலும், சில விளையாட்டுகளின் மூலமாகப் புதிய புதிய சொற்களையும் விளையாட்டுப் போக்கிலேயே குழந்தைகள் கற்றுக் கொள்வதும் நடக்கிறது.

அப்படியான ஒரு விளையாட்டுதான் ‘வார்த்தை வட்டம்’. ஒரு குறிப்பிட்ட எழுத்திலான வார்த்தைகளே திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதால் (வட்டம் போல் சுற்றிச் சுற்றி) இந்த விளையாட்டுக்கு இந்தப் பெயர்.

என்ன குழந்தைகளே! விளையாட எல்லாரும் தயாரா?

இந்த விளையாட்டை 15 முதல் 20இருபது குழந்தைகள் வரை விளையாடலாம். ஆண், பெண் குழந்தைகள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவார்கள்.

# முதலில் அனைவரும் ஒன்றாக நின்று, ‘சாட் பூட் திரி…’ போடுங்கள். அதில், கடைசியாக வரும் மூவர் தான், இந்த விளையாட்டின் முதல் போட்டியாளர்கள்.

# விளையாடும் திடலின் ஏதாவது ஒரு மூலையில், ஒரு பெரிய வட்டமொன்றைப் போடுங்கள். வட்டத்திலிருந்து சற்றுத் தூரமாக விளையாடுபவர்கள் எல்லோரும் நின்றுகொள்ளுங்கள். வட்டத்துக்கும் விளையாடுபவர்களுக்கும் நடுவே மூன்று போட்டியாளர்களும் நின்றுகொள்வார்கள்.

இனி, போட்டியைத் தொடங்க வேண்டியதுதான்.

# மூன்று போட்டியாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து, “சொல்லப்போறோம், சொல்லப்போறோம்… எழுத்து சொல்லப்போறோம்..!” என்று சொல்ல, அதற்கு விளையாடும் மற்றக் குழந்தைகள், “நீங்க சொல்லப்போற எழுத்துக்கு விடை சொல்லப்போறோம்” என்று எதிர் பதிலைச் சொல்வார்கள்.

# மூன்று போட்டியாளர்களில் யாராவது ஒருவர், ஏதாவது ஓர் எழுத்தைச் சொல்லுங்கள். உதாரணமாக, ‘மு’ என்ற எழுத்தைச் சொல்லிவிட்டால், உடனே விளையாட்டில் உள்ளவர்கள் ஆளுக்கொரு ‘மு’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக்கொண்டு தொடங்கும் ஏதாவது ஒரு பொருளின் பெயரைச் சொல்லுங்கள்.

# ‘முறுக்கு’, ‘முள்ளங்கி’, ‘முட்டைகோஸ்’, ‘முந்திரி’ என ஒவ்வொருவரும் ஒரு பொருளின் பெயரைச் சொல்லுங்கள். அப்படிச் சொல்லிவிட்டு, வட்டத்துக்குள் போய் நின்றுகொள்ளுங்கள்.

# பொருளின் பெயரெதுவும் சொல்லாமல் நிற்பவர்களை, போட்டியாளர்களில் யாரேனும் இருவர் துரத்திச் சென்று பிடியுங்கள். மூன்றாவது போட்டியாளர், பொருளின் பெயரைச் சொல்லாதவர்கள் யாரும் வட்டத்தின் அருகே வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

# போட்டியாளர்கள் சொல்லும் எழுத்தில் பெயரைச் சொல்லாதவர்கள், வட்டத்துக்குப் பாதுகாப்பாக நிற்கும் போட்டியாளருக்கு ‘டிமிக்கி’கொடுத்துவிட்டு, வட்டத்துக்கு அருகே வருவார்கள். அப்போது, பொருளின் பெயரைச் சொல்லிவிட்டு, வட்டத்துக்குள் இருப்பவர்கள் அவரின் கையில் அடித்து ‘பாஸ்’ எனச் சொல்லுங்கள். அப்படிச் செய்தால், அவரும் ‘பாஸாகி’ வட்டத்துக்குள் சென்றுவிடலாம்.

# இரண்டு போட்டியாளர்களும் முதலில் எந்த மூன்று பேரைத் தொடுகிறார்களோ, அவர்களே அடுத்த போட்டியாளர்களாக மாறிவிடுவார்கள்.

விளையாட்டோடு சேர்த்து எழுத்தையும் வார்த்தைகளையும் கற்றுக்கொள்ளும் இந்த விளையாட்டை, ஒருமுறை குழந்தைகள் விளையாட விட்டுத்தான் பாருங்களேன்!

(இன்னும் விளையாடலாம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x