Published : 12 Sep 2018 11:17 AM
Last Updated : 12 Sep 2018 11:17 AM

கதை: எதிரியைத் தூரத்தில் வை!

ஆலமரத்துக்கு அடியில் ஒரு காகம் அழுதுகொண்டிருந்தது. புதரிலிருந்து வெளியே வந்த முயல், காகத்தைச் சற்று நேரம் கவனித்தது. பிறகு அருகில் வந்து, “காகமே, ஏன் இப்படி மரத்தைக் கொத்திக்கொண்டு அழுகிறாய்? அலகு உடைந்துவிடப் போகிறது” என்றது.

“மரத்தின் மீது கூடு கட்டி முட்டைகளை இட்டிருந்தேன். அனைத்தையும் ஒரு பாம்பு விழுங்கிவிட்டுச் சென்றுவிட்டது. இந்த ஆலமரம் என் குழந்தைகளைக் காக்கும் என்ற நம்பிக்கையில்தானே கூடு கட்டினேன். ஆனால் பாம்பு மேலே வரும்போது இந்த மரம் தடுத்து நிறுத்தவில்லை. அதனால்தான் மரத்தை அழிக்கும் முடிவில் இறங்கிவிட்டேன்” என்றது காகம்.

“உன்னால் இந்த ஆலமரத்தை அழிக்க முடியுமா? ஏன் இந்த வேண்டாத வேலை? தெற்குத் திசையில் ஒரு முனிவர் தவம் செய்கிறார். அவர் மரத்துக்குச் சாபம் கொடுத்தால், அழிந்துவிடும். வருகிறாயா?” என்று கேட்டது முயல்.

காகம் மகிழ்ந்தது. முயலுடன் கிளம்பியது. முனிவரிடம் முறையிட்டது.

“நீ கூடு கட்டிய ஆல மரத்தில் ஒரு புறாவும் கூடு கட்ட வந்தது. அதைக் கூடு கட்ட விடாமல் தடுத்தாய். அதையும் மீறி புறா கூடு கட்டி, முட்டைகளை இட்டது. கோபத்தில் அந்த முட்டைகளைக் கீழே தள்ளிவிட்டாய். முட்டை வாசனைக்குப் பழக்கப்பட்ட பாம்பு, இந்த மரத்தில் ஏராளமான பறவைகள் முட்டைகளை இட்டிருப்பதை அறிந்துகொண்டது. அதனால் அருகில் இருந்த புற்றில் குடியேறிவிட்டது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் முட்டைகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டது. எதிரியை அருகில் வர விடாமல் தடுப்பதே சிறந்த செயல். உன்னுடைய தீய எண்ணம் இப்போது உனக்கே ஆபத்தாக முடிந்துவிட்டது” என்றார் முனிவர்.

“தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள். அந்தப் பொல்லாத பாம்பை அழிப்பதற்கு யோசனை கூறுங்கள்” என்றது காகம்.

“எதையும் அழிக்க நினைக்காதே. ஒவ்வொரு உயிரும் இன்னோர் உயிரைச் சார்ந்துதான் வாழ்கிறது. பாம்பு, தான் உயிர் வாழ்வதற்கு உணவு தேடுகிறது. எதிரியை அழிப்பதற்குப் பதிலாக, அது வர விடாமல் இருப்பதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்.”

“நான் என்ன செய்ய வேண்டும்?”

“எல்லாப் பறவைகளுடனும் நட்பு வைத்துக்கொள். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பாம்பை எச்சரியுங்கள். பலன் கிடைக்கும்” என்ற முனிவர், மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.

ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த அனைத்துப் பறவைகளையும் அழைத்தது காகம். பாம்பின் செயலுக்கு முடிவு கட்ட ஆலோசனை கேட்டது. பிறகு பாம்பை அழைத்தது.

“இதுவரை நீ கொடுத்த தொல்லைகளை மன்னித்துவிடுகிறோம். இந்த இடத்தை விட்டுச் சென்றுவிட வேண்டும்” என்று பாம்பை எச்சரித்தது காகம்.

story 2jpg

“எவ்வளவு அலைந்தாலும் என்னால் இத்தனை முட்டைகளைச் சாப்பிட முடியாது. இங்கிருந்து போக மாட்டேன்” என்றது பாம்பு.

காகத்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. முயலிடம் யோசனை கேட்டது.

“கீரி நண்பனை அழைத்து வருகிறேன். எதிரிக்கு எதிரியை வைத்தே பாடம் கற்பிப்போம்” என்று கிளம்பியது முயல்.

“இறுதியாக எச்சரிக்கிறேன், இங்கிருந்து சென்றுவிடு” என்று கத்தியது காகம்.

“நீ வேண்டுமானால் வேறு இடத்துக்குச் சென்றுவிடு. என்னால் முடியாது” என்று சிரித்தது பாம்பு.

“சரி, நாங்கள் அனைவரும் வேறு இடத்துக்குச் சென்றுவிடுகிறோம். கீரியை அழைத்து வரப் போகிறான் முயல். கீரியுடன் சண்டையிட்டுக்கொள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பியது காகம்.

“என்னது, கீரியா? என் எதிரியை அழைத்து வருகிறீர்களா? என் உயிருக்கு உத்திரவாதம் இருக்காதே… இந்த இடத்தை விட்டு உடனே கிளம்புகிறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது பாம்பு.

பறவைகள் மகிழ்ச்சியில் கத்தின. அப்போது முயலும் கீரியும் வந்தன.

“என்ன, என் எதிரி ஓடிவிட்டானா? சண்டை போடுவதற்கு ஆவலோடு வந்தேன். புற்றையாவது இடிக்கிறேன்” என்று ஏமாற்றத்துடன் கூறியது கீரி.

“அது கறையான் புற்று. அதை விட்டுவிடு. உன் உதவிக்கு நன்றி” என்ற காகம் நிம்மதியாகக் கூட்டுக்குப் பறந்து சென்றது.

- எஸ். அபிநயா, 10-ம் வகுப்பு, கே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x