Last Updated : 11 Dec, 2018 05:36 PM

 

Published : 11 Dec 2018 05:36 PM
Last Updated : 11 Dec 2018 05:36 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: எங்களை உங்களுக்குத் தெரியாது!

தாஜ் மஹாலைக் கட்டியவர் ஷாஜகான். அவர் அதை எப்படிக் கட்டினார்? ஒரு நாள் காலை எழுந்து, பெரிய காகிதத்தை  மேஜையின்மீது பரப்பி, திராட்சை ரசம் பருகியபடி தாஜ் மஹாலுக்கான வரைபடத்தை உருவாக்கினாரா? இங்கே தோட்டம் வர வேண்டும், இங்கே குவிமாடம், இங்கே தூண்கள், இங்கே கூரை என்று வரைந்தாரா?

வரைந்து முடித்த பிறகு உற்சாகமாகச் சட்டையைப் போட்டுக்கொண்டு, நான்கைந்து முத்து மணி மாலைகளையும் கழுத்தில் அணிந்துகொண்டு, இடையில் ஒரு குறுவாளைச் சொருகிக்கொண்டு, முத்தும் வைரமும் பதிக்கப்பட்ட தலைப்பாகையை அணிந்துகொண்டு, வெள்ளைச் சலவைக்கல் எங்கே கிடைக்கும் என்று சுற்றித் திரிந்தாரா? கிடைத்ததும், மாலையையும் தொப்பியையும் அருகில் ஒரு மரத்தடியில் கழற்றி வைத்துவிட்டு, கல் வெட்டினாரா?

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கற்களைத் தூக்கி, குதிரை வண்டியில் போட்டுக்கொண்டு, ஹேஹே என்று சாட்டையைச் சுழற்றியபடி வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு வந்தாரா? ஏக்கர் கணக்கில் விரிந்திருக்கும் நிலத்தை இரவு பகலாகச் சுத்தம் செய்தாரா? நான்கு மினார் கோபுரங்களையும் அவரே தூக்கி நிறுத்தினாரா?

அலெக்சாண்டர் உலகம் வியக்கும் மாவீரர்தான், ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் போர்க்களங்களுக்குத் தனியாகவா போனார்? அவருடைய வாளை யார் கூர்மைப்படுத்திக் கொடுத்தது? அவருடைய குதிரைக்கு யார் கொள்ளும் தண்ணீரும் வைத்தது? எத்தனை நாள் போர் நடக்கும் என்று கணக்கு போட்டு, அதற்கேற்றாற்போல் கட்டுசாதம் கட்டிக்கொண்டு அதையும் சுமந்துகொண்டு போனாரா?

தன்னுடைய துணிமணிகளையும் அவரே மூட்டைக் கட்டி எடுத்துப் போனாரா? கூடாரத்தைத் தலை மேலே வைத்துக்கொண்டாரா? துணி கசங்கினால் என்ன செய் வார்? இரவு புரண்டு படுக்கும்போது கட்டை விரல் சுளுக்கிக் கொண்டால் என்ன செய்வார்?

எகிப்திய மம்மிகள் தெரியும். அவற்றை உருவாக்கும் பணியில் யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? ஓர் அரசரின் உடலைப் பதப்படுத்த எத்தனை பேர் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டியிருந்தது? குழிகள் வெட்ட எவ்வளவு பேர் தேவைப்பட்டார்கள்? அரசரின் உடலோடு அவர் பயன்படுத்திய பொருட்களையும் யார் குழிக்குள் இறக்கியது? சில நேரம், அரசரோடு அவருடைய பணியாளர்களையும் சேர்த்து உயிரோடு புதைத்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று யாருக்காவது தெரியுமா?

கோஹினூர் வைரம் என்றால் உங்கள் கண்கள் மின்னும். அதையும் இன்ன பிற வைரங்களையும் யார் வெட்டி எடுத்தது? சுரங்கத்துக்குக் கீழே, மெல்லிய வெளிச்சத்தில், உடலெல்லாம் கரியோடு யார் இரவு, பகலாக உழைத்தார்கள்? அவர்களுடைய எண்ணிக்கை என்ன? எத்தனை பேர் மூச்சு விட முடியாமல் சுருண்டு விழுந்தார்கள்?

எத்தனை பேருடைய எலும்புகள் மண்ணோடும் புழுதியோடும் ஒன்று கலந்திருக்கின்றன என்று தெரியுமா? சீனப் பெருஞ்சுவர் தெரியும். அதைக் கட்டி முடிக்க எத்தனை பேர் ரத்தம் சிந்த வேண்டியிருந்தது? தஞ்சாவூர் பெரிய கோயிலை ராஜராஜ சோழனா கட்டினார்? அப்படியானால் ஆட்சியை யார் நடத்தியது?

idam-2jpg

அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகையை யார் கட்டியது? பண்டைய ரோமானிய மாளிகைகளை யார் உருவாக்கினார்கள்? பைசா கோபுரத்தைக் கட்டியெழுப்பியவர்கள் எவ்வளவு பேர்?

பானிபட் போர், பாரிஸ் போர், உலகப் போர் என்று பல போர்களை ஆண்டுகளோடு சேர்த்து நினைவில் வைத்திருக்கிறீர்கள். எந்தெந்த நாடுகள் வென்றன, எந்தெந்த நாடுகள் தோற்றன என்றும் சொல்லமுடியும் உங்களால். ஆனால் நாடுகள் எப்போதாவது போரிட்டிருக்கின்றனவா? எந்த நாடாவது இதுவரை துப்பாக்கி தூக்கியிருக்கிறதா? பீரங்கியை வெடித்திருக்கிறதா? போர் விமானம் ஓட்டியிருக்கிறதா? அப்படியானால் இவற்றை எல்லாம் செய்தவர்கள் யார்? அவர்களை உங்களுக்குத் தெரியுமா?

எங்கள் கேள்விகள் எதற்கும் உங்களிடம் விடை இருக்காது. எங்கள் பெயர்கள் உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பெற்றிருக்காது. எங்கள் பெயரை நீங்கள் தாஜ் மஹாலில், சீனப் பெருஞ்சுவற்றில், பைசா கோபுரத்தில், தஞ்சை கோயிலில் பார்க்க முடியாது. வைரங்களில் எங்கள் பெயர் பொறிக்கப்பட்டிருக்காது.

அலெக்சாண்டரும் ஹாஜகானும் ராஜராஜனும்தான் அழுத்தந்திருத்தமாக உங்கள் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். உங்களைப் பொறுத்தவரை அவர்கள்தான் அனைத்தையும் உருவாக்கினார்கள். அவர்கள்தான் போரிட்டார்கள். அவர்கள்தான் வரலாற்றை உருவாக்கினார்கள். அவர்கள்தான் நினைக்கப்பட வேண்டியவர்கள், கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

நாங்கள்? ஷாஜகானின் குதிரைகளுக்கு உணவு அளித்தோம். தாஜ் மஹாலுக்காகச் சலவைக்கற்களைச் சுமந்தோம். ராஜராஜ சோழனுக்காகக் கோயில் கட்டினோம். பைசா கோபுரத்தை உருவாக்கினோம். அலெக்சாண்டரின் அழுக்கு ஆடைகளைத் துவைத்தோம். அவர் உறங்குவதற்காகக் கூடாரம் அமைத்துவிட்டு, ஈட்டியைக் கெட்டியாகப் பிடித்தபடி இரவு முழுக்கக் காவல் காத்தோம்.

நெப்போலியனுக்கு உணவு சமைத்தோம். கிளியோபாட்ராவுக்கு அலங்காரம் செய்தோம். போர்க்களங்களில் எங்களுக்கு முன்பின் அறிமுகமில்லாதவர்களுக்கு எதிராக எங்கள் வாள்களையும் பின்னர் துப்பாக்கிகளையும் உயர்த்தினோம். வைரத்தை வெட்டி எடுத்துக் கொடுத்துவிட்டு, எங்கள் குடிசைக்கு நடந்து சென்றோம்.

மாளிகைளை முடித்துக் கொடுத்துவிட்டு, வீதி ஓரங்களில் படுத்துத் தூங்கினோம். நாங்கள் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்திருக்கிறோம். எல்லோருக்காகவும் உழைத்திருக்கிறோம்.

எல்லோருக்காகவும் மடிந்திருக்கிறோம். எங்களுக்கு முகம் இல்லை, அடையாளம் இல்லை, பெயர் இல்லை, குரல் இல்லை. வரலாற்றில் இடமும் இல்லை. ஆனால் அந்த வரலாற்றை உருவாக்கியதில் எங்களுக்கும்  பங்கு இருந்திருக்கிறது. அதை நீங்கள் ஒருநாள் நிச்சயம் உணர்வீர்கள். அப்போது நாங்கள் உயிர்பெற்று எழுந்துவருவோம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x