Last Updated : 20 Jun, 2018 10:52 AM

 

Published : 20 Jun 2018 10:52 AM
Last Updated : 20 Jun 2018 10:52 AM

கண்டுபிடிப்புகளின் கதை: டெலஸ்கோப்

 

தூ

ரத்தில் இருக்கும் பொருட்களையும் காட்சிகளையும் அருகில் காண்பதற்கும், அருகில் இருக்கும் பொருட்களையும் காட்சிகளையும் தொலைவில் காண்பதற்கும் பைனாகுலரைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இந்த பைனாகுலரில் இரண்டு சிறு தொலைநோக்கிகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

தொலைநோக்கி எளிய சாதனம்தான். ஆனால் அது வானை நோக்கித் திரும்பியபோது மனித குலத்துக்குப் பயன்பட்ட மகத்தான சாதனமாக மாறியது! சூரியன், பூமி, சூரியக் குடும்பம் பற்றிய ஏராளமான அறிவியல் உண்மைகளை எடுத்துக் காட்டியது.

தொலைநோக்கியைக் கண்டுபிடித்தது யார்? இந்தக் கேள்விக்கு அவ்வளவு எளிதாகப் பதில் அளித்துவிட முடியாது.

Galileo-picture.jpg கலிலியோ கலிலி right

16-ம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸுகளை உருவாக்கிவிட்டனர். இரண்டு லென்ஸுகளை வைத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற ஆராய்ச்சிகளில் இறங்கியிருந்தனர். 1608-ம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளர் ஹான்ஸ் லிப்பர்ஷே, தான் தொலைநோக்கியைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். இவரது தொலைநோக்கியில் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படி அமைத்திருந்தார்.

இவர் வசித்த நகரத்திலேயே ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கித் தயாரிப்பில் இறங்கியிருந்தார். சில வாராங்களில் அவரும் காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். இருவரது தொலைநோக்கிகளையும் ஆராய்ந்தவர்கள், மிக எளிய வடிவமைப்பாக இருப்பதால் எல்லோரும் எளிதாகச் செய்துவிடுவார்கள். அதனால் இன்னும் சற்றுக் கடினமான அமைப்பாக மாற்றும்படிச் சொல்லிவிட்டனர். இருவரும் தொலைநோக்கியில் மேலும் சில முன்னேற்றங்களைச் செய்தனர். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.

சில வாரங்களில் மேலும் ஒரு டச்சுக்காரரான ஜேக்கப் மெஷியஸ் தான் கண்டுபிடித்த தொலைநோக்கிக்கான காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். நெதர்லாந்து அரசாங்கம் ஜேகப்புக்குச் சிறு ஊக்கத்தொகை வழங்கியது. லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிகளை உருவாக்கச் சொல்லிப் பணம் கொடுத்தது.

1609-ம் ஆண்டு கலிலியோ கலிலி டச்சு நாட்டு லென்ஸுகளைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஒரு சில நாட்களில் அதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு லென்ஸுகளை உருவாக்கிவிட்டார். இவரது தொலைநோக்கி 20 மடங்கு தூரத்தில் இருந்த பொருட்களையும் காட்டியது. இதை செனட் சபையில் அறிஞர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்தார் கலிலியோ. வியந்த சபை உறுப்பினர்கள், படுவா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் பணியை வழங்கினார்கள். சம்பளம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டது.

Lipperhey_portrait.jpg ஹான்ஸ் லிப்பர்ஷே

அதுவரை உளவு பார்க்கும் கருவியாக இருந்த தொலைநோக்கியை, கலிலியோதான் வானை நோக்கித் திருப்பினார். தொலைநோக்கியில் மேலும் மேலும் முன்னேற்றங்களைக் கொண்டுவந்தார். அதன் மூலம் சந்திரனில் இருந்த மலைகளையும் குன்றுகளையும் கண்டுபிடித்துச் சொன்னார். பிறகு பால்வெளி மண்டலத்தில் ரிப்பன் போன்ற ஒளி வளையத்தைக் கண்டுபிடித்தார். சனிக் கோளின் வளையங்களையும் வியாழன் கோளின் சந்திரன்களையும் கண்டறிந்தார். பிற்காலத்தில் இவரது பெயரிலேயே வியாழனின் சந்திரன்கள் அழைக்கப்பட்டன.

ஐரோப்பாவில் தொலைநோக்கி உருவாக்கம் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. ஜெர்மனியைச் சேர்ந்த ஜோஹன்னஸ் கெப்ளர், இரண்டு குவி லென்ஸுகளை வைத்து தொலைநோக்கியை உருவாக்கினார். இதில் உருவங்கள் தலைகீழாகத் தெரிந்தன. கெப்ளரின் ஆராய்ச்சிகளை வைத்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ஐசக் நியூட்டன் தொலைநோக்கியில் மேலும் பல முன்னேற்றங்களைச் செய்தார்.

அதன் விளைவாக 1668-ம் ஆண்டு ஒளி பிரதிபலிப்பு தொலைநோக்கியை உருவாக்கினார். நியூட்டனின் இந்தத் தொலைநோக்கிதான் பிற்காலத்தில் வானியலில் ஆதிக்கத்தைச் செலுத்தியது.

தொலைநோக்கிக்கு முன்பு இருந்த சாதனத்தை உருவாக்கியதால் ஹான்ஸ் லிப்பர்ஷேயைவிட, தொலைநோக்கியை உருவாக்கிய கலிலியோ கலிலியைத்தான் உலகம் தொலைநோக்கிக் கண்டுபிடிப்பாளராகக் கருதுகிறது. ஆனால் தொலைநோக்கிக் கண்டுபிடிப்பில் பலரது பங்களிப்பும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

இன்று கலிலியோ பயன்படுத்திய லென்ஸ்கள் சிறிய தொலைநோக்கிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நியூட்டனின் பிரதிபலிப்பு தொலைநோக்கிதான் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

(கண்டுபிடிப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x