

விருதுகளின் அடிப்படையில் ஓர் உலக சினிமாவை அணுகுவது ஒருவிதம். ஆனால், தன் கலை மொழியால் அது நமக்குள் என்ன மாதிரியான புதிய புரிதலை உருவாக்குகிறது என்கிற ரசவாதமே முக்கியம். பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 35 வயதே நிரம்பிய இளம் இயக்குநர் லூகாஸ் தொந்த் (Lukas Dhont) இயக்கிய ‘குளோஸ்’ (Close -2022) திரைப்படம், கான் படவிழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றது.
இப்படத்தில் உலகம் முழுவதும் பதின்ம வயதினர் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய உளவியல் சிக்கலைக் கதையின் மையமாக எடுத்தாண்டிருக்கிறார் இயக்குநர் தொந்த். அதை உரத்த வசனங்கள், நாடகத்தனமான சம்பவங்கள் இல்லாமல், 13 வயது நிரம்பிய இரண்டு சிறுவர்களின் பால்ய கால நட்பின் நெருக்கம் - விரிசல் ஆகியவற்றில் சொல்லப்படாமல் தேங்கும் உணர்வுகளை நம்மை உணரும்படிச் செய்திருக்கிறார்.
இரண்டு நண்பர்கள்
லியோவும் ரெமியும் பிரிக்க முடியாத நண்பர்கள். பெல்ஜியம் நாட்டின் கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களான இவர்கள், மலர் விவசாயம் நடக்கும் வயல்வெளிகளில் ஒன்றாக ஓடித் திரிகிறார்கள். ஒருவருடைய வீட்டில் மற்றொருவர் தூங்குகிறார்கள். ரெமி ஐந்து வயதிலிருந்து கிளாரிநெட் இசைக்கக் கற்றுக்கொண்டவன். லியோ, தன் பெற்றோருடன் மலர் தோட்ட விவசாய வேலைகளைக் கற்றுக்கொண்டவன். ரெமியின் தாயான சோபியா, லியோவைத் தன்னுடைய இன்னொரு மகனாகவே நடத்துகிறார்.
லியோ - ரெமி இடையிலான நெருக்கமான நட்பு, அங்குள்ள மலர்த் தோட்டங்களில் விளையும் வெள்ளைத் துலிப் மலர்களைப்போல் தூய்மையானது. இவர்களின் வெள்ளந்தியான உலகை இரு குடும்பங்களும் ரசிக்கின்றனர். தொடக்கக் கல்வியை முடிக்கும் இருவரும் உயர்நிலைப் பள்ளியில் சேர்கிறார்கள்.
ஆனால், அந்த இருபாலர் பள்ளிச் சூழலுக்குள் நுழைந்ததும் அந்த நண்பர்களின் இயல்பான, நெருக்கமான நட்பு, சக பதின்ம வயதுகொண்ட மாணவியர் சிலருக்கு விநோதமாகத் தோன்றுகிறது. லியோவும் ரெமியும் இவ்வளவு நெருக்கமாக இருப்ப தைக் கேலியாகக் கேள்வி கேட்கத் தொடங்கு கிறார்கள்.
அவர்களுடைய நட்புக்குப் பாலியல் அடையாளம் பூச முயல்கிறார்கள். இப்போது லியோ, பிறர் தன்னை எப்படிப் பார்க்கிறார்கள் என்று யோசிக்கத் தொடங்கு கிறான். பிறரது பார்வையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில், தன்னுடைய உயிர் நண்பனிடமிருந்தே விலகிச் செல்கிறான்.
சூழல் உருவாக்கும் அழுத்தம்
இங்கேதான் படத்தின் அடிப்படையான முரண்பாடு தொடங்குகிறது. லியோவின் மனதில் ரெமியின் மீதான நட்பும் அவன் மீது கொண்ட களங்கமற்ற அன்பும் மறைந்து விடவில்லை. ஆனால், அந்த அன்பை எப்போதும்போல் இனி வெளிப்படுத்துவது தன்னிடம் சமூகம் எதிர்பார்க்கும் அடை யாளத்துக்கு ஆபத்தாகிவிடுமோ என்கிற அச்சம் அவனை ஆட்கொள்கிறது.