

காலையில் அரக்கப் பறக்கக் கிளம்பி, அடித்துப் பிடித்து அலுவலகத்துக்கு ஓடி, ஒரே இடத்தில் மடிக்கணினியைக் கட்டிப்பிடித்தபடி நாள் முழுக்க வேலைசெய்து, இரவில் இன்ஸ்டா ரீல்ஸில் மூழ்கியபடி உறங்கி, மீண்டும் காலை... இதுவே இளைஞர்கள் பலரின் நகர வாழ்க்கை இன்று.
இயந்திரமயமான வாழ்க்கைச் சுழற்சியிலிருந்து தப்பிச் செல்ல ஆளில்லாக் காடு உண்டோ என மனம் ஏங்குகிறது இல்லையா? பசுமையான அமைதியைக் கலை உணர்வுடன் தருகிறது ‘ஷான் பாய்’ (Shan Bai) யூடியூப் அலைவரிசை.
இதில் பதிவேற்றப்பட்டிருக்கும் காணொளிகளைத் திறந்த மறுகணமே கால இயந்திரத்தால் கடத்தப்படுவீர்கள். சில்லிட்டு ஓடும் ஆற்றங்கரையோரம் பச்சைப் பசேல் காட்டுக்கு நடுவே வீற்றிருக்கும் மர வீட்டின் முற்றத்தில் ஓர் இளைஞன்.
சீனாவின் பண்டைய கலைகளைத் தனது கைவண்ணத்தால் கண்முன்னே கொண்டுவருகிறார். தென் சீனாவின் ‘மியோ’ பழங்குடி இனக்குழுவின் பழமையான மரபு இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்களை இரவு, பகல் பாராமல் தனது கைகளால் இழைத்து இழைத்து அந்த இளைஞன் படைக்கும் விதம் வியப்பூட்டுகிறது.