கொஞ்சம் அப்டேட் ஆகுங்க ப்ரோ! | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 4

கொஞ்சம் அப்டேட் ஆகுங்க ப்ரோ! | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 4
Updated on: 
3 min read

ஓர் இளைஞன் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறான். வழக்கம்போல ஏதேதோ காரணங்களைச் சொல்லி அந்தப் பெண்ணின் வீட்டில் காதலைப் பிரித்துவிட்டார்கள். அந்த இளைஞனும் வேறு வழியில்லாமல் தன் வாழ்க்கையைத் தொடர்ந்திருக்கிறான்.

பின்னர் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டான். பத்து ஆண்டுகள் கழித்து, ஒருநாள் அந்தப் பெண்ணிடமிருந்து அவனுக்கு ஒரு செய்தி. அவருடைய திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை. கணவரைப் பிரிந்து, எட்டு வயது மகனுடன் தனியாக வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்.

மீண்டும் இருவரும் நண்பர்களாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். பழைய நினைவுகள் மீண்டும் வருகின்றன. அந்த இளைஞனுக்கும் அதுவரை திருமணமாகவில்லை. ஒருநாள் அவன் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கிறான்.

“நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளத் தயார். நீ என்ன சொல்கிறாய்?”. அந்தப் பெண்ணுக்குத் தயக்கம். பிறகு இரு குடும்பங்களிடமும் பேசி, பல சிரமங்களைக் கடந்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அந்தப் பெண்ணின் எட்டு வயது மகனும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு பகுதி.

விசாலமான பார்வை

கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் கலந்துகொண்ட திருமணங்களில் இதுவும் ஒன்று. இன்னொரு திருமணத்திலும் மாப்பிள்ளைக்கு அதுதான் முதல் திருமணம். மணப்பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி, மணமுறிவு ஏற்பட்டிருந்தது. இருவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்கள்.

இந்த இரண்டு திருமணங்களும் என்னை நிறையவே யோசிக்க வைத்தன. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட திருமணங்கள் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அன்றைய சமூகச் சூழலில் இத்தகைய முடிவுகளை எடுப்பது கடினம்.

இன்று இது எளிது என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால், மாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருக்கிறது என்பதற்காகவோ அவருக்குக் குழந்தை இருக்கிறது என்பதற்காகவோ மீண்டும் ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நாம் ஏன் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும்? இன்றைய தலைமுறையிடம் இருக்கும் ஒரு முக்கியமான அம்சம், அவர்களுடைய விசாலமான பார்வை (Broad-mindedness).

இன்னும் சொல்லப்போனால், சில விஷயங்களில் முந்தைய தலைமுறையைவிட அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் என் எண்ணம். இன்றைய தலைமுறையினரின் உள்ளங்கை திறன்பேசி வழியாகவே உலகம் இருக்கிறது. உலகின் பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். பல நாட்டு மனிதர்களின் வாழ்க்கை முறைகளைத் தெரிந்துகொள்கிறார்கள், பயணிக்கிறார்கள். கேள்வி கேட்கிறார்கள்.

Loading content, please wait...

X