Last Updated : 25 Sep, 2015 01:10 PM

 

Published : 25 Sep 2015 01:10 PM
Last Updated : 25 Sep 2015 01:10 PM

காலத்தை வென்றவை: நூற்றாண்டை கடந்த ஆரோக்கியக் காவலன்- டப்பா செட்டிக் கடை

ராஜமன்னார் இருவழிப் போக்குவரத்து இருக்கும் மிகக் குறுகிய சாலைகளில் ஒன்று, சென்னை, மயிலாப்பூர் கச்சேரி சாலை. இங்குதான் 130 ஆண்டுகளாக நாட்டு மருந்து விற்கப்படும் ‘டப்பா செட்டிக் கடை’ இருக்கிறது.

“இந்தக் கடையை 1885-ல் தொடங்கியவர் என்னுடைய முப்பாட்டனார் எஸ். கிருஷ்ணசுவாமி செட்டியார்” என்கிறார் வாடிக்கை யாளருக்கு சுக்குப்பொடி பாக்கெட்டைக் கொடுத்தபடியே, அதன் உரிமையாளர் கே.பத்ரிநாத்.

தொடக்கத்தில் தென்னங்கூரை மட்டுமே வேயப்பட்டிருந்த கடையில் நாட்டு மருந்துப் பொருட்களோடு மளிகைப் பொருட்களும் சில இரும்புப் பொருட்களும்கூட விற்கப்பட்டதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்று சொல்லும் பத்ரிநாத், தாத்தாவின் காலத்தில்தான் தென்னங்கூரைக்குப் பதிலாக, சிமெண்ட் கூரை கட்டப்பட்டது என்கிறார்.

மக்கள் சூட்டிய பெயர்

நாட்டு மருந்து களெல்லாம் அந்த நாளில் நீளமான தகர டப்பாக்களில் வைக்கப்பட்டிருக்குமாம். ஒவ்வொரு முறையும் அந்த டப்பாக்களில் இருந்து மருந்துகளை எடுத்துக் கொடுப்பதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள், ‘டப்பா செட்டி கடை’ என்றே அழைத்தார்களாம். இந்தப் பெயர் பரவலாகவே இதையே கடைக்கான ஆதாரப்பூர்வமான பெயராக மாற்றினாராம் கிருஷ்ண சுவாமி.

நான்கு தலைமுறையாகத் தொடரும் சேவை

கிருஷ்ணசுவாமிக்குப் பின் அவருடைய மகனான கே. ராஜமன்னாரின் பொறுப்பில் கடை வந்தபிறகுதான், பல பொருட்களைக் கடையில் விற்பதை நிறுத்திவிட்டு, மூலிகைப் பொருட்களுக்கான கடையாக மட்டுமே டப்பா செட்டிக் கடை ஆனதாம். அதன்பின் அவருடைய மகன் ஆர். கண்ணைய செட்டியின் பொறுப்பில் கடை வந்தபோது அவருடைய மகன் பத்ரிநாத் 1975-ல் தந்தைக்கு உதவியாகக் கடையில் சேர்ந்தார்.

விற்பனையின் இன்னொரு முகம்

“தொடக்கத்தில் பல மருந்துகளைச் செய்வதற்கான மூலப் பொருட்களை மட்டுமே விற்பனை செய்துவந்தோம். அப்போதெல்லாம் மருந்துகளைப் பெரும்பாலும் வீட்டிலேயே பக்குவமாகத் தயாரித்துக்கொள்வார்கள். அதன்பின் நேரமின்மை, மருந்து தயாரிக்கும் பக்குவத்தை அறிந்தவர்கள் இல்லாமை, அம்மி, குழவி போன்ற கல்லாலான இயந்திரங்கள் வீடுகளிலிருந்து காணாமல் போய், மிக்ஸி, கிரைண்டர் போன்ற நவீன பொருட்களின் பயன்பாடு போன்ற காரணங்களால் மருந்துகளை வீட்டில் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது” என்கிறார். இதனால் கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக சளி, காய்ச்சல், ஜீரணக் கோளாறு, இருமல் போன்ற உபாதைகளுக்கான மருந்துகளை இங்கேயே விற்கத் தொடங்கினார்கள்.

தரமே நிரந்தரம்

மூலிகைப் பொருட்களை பெரும்பாலும் உற்பத்தி ஆகும் இடங்களிலிருந்தே இவர்கள் நேரடியாக வாங்குகிறார்கள். பொருட்கள் தரமாக இருப்பதால்தான் வாடிக்கையாளர்களுக்குத் தரும் மருந்துகளையும் தரமாகத் தர முடிகிறது என்கிறார்கள் இந்தக் கடையின் நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் சிலர்.

தேசம் கடக்கும் பிரசவ லேகியம்

சுக்குப்பொடி, வெந்தயப்பொடி ஆகியவற்றைப் பலரும் விரும்பி வாங்குகிறார்கள். “திப்பிலி, சித்தரத்தை, அதிமதுரம், துளசி, ஆடாதோடை ஆகியவற்றைச் சேர்த்து நாங்கள் தயாரிக்கும் கோல்ட் காஃப் பவுடர் சளித் தொல்லைகளுக்கு நல்ல நிவாரணம் தரும். இது போன்ற மருந்துகள் விற்பனை ஒருபக்கம் இருந்தாலும், பிரசவமான பெண்கள் சாப்பிடுவதற்காக நாங்கள் தயாரிக்கும் பிரசவ லேகியம் அனைவராலும் விரும்பி வாங்கும் மருந்துப் பொருளில் முக்கியமானது. வெளிநாட்டில் இருக்கும் பெண்களுக்கு இங்கிருந்து வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்” என்றார் பத்ரிநாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x