Last Updated : 07 Aug, 2015 01:30 PM

 

Published : 07 Aug 2015 01:30 PM
Last Updated : 07 Aug 2015 01:30 PM

ஆட்டோ ஓட்டும் இசைக் கலைஞர்

குஞ்ச் கரியா என்பவர் மும்பையைச் சேர்ந்த ஒரு வலைப்பதிவர். இந்த மாதத்தில் ஒரு நாள் அவர் கிடார் கிளாஸுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். வீட்டுக்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றை நிறுத்தி அதில் ஏறிக்கொண்டார். கையில் கிடாரோடு ஏறிய குஞ்ச் கரியாவிடம் ஆட்டோ ஓட்டுநர், “எங்கே போக வேண்டும்?”எனக் கேட்கிறார். குஞ்ச் கரியா சொல்கிறார், ஆட்டோ புறப்படுகிறது. இதுவரை நடந்தவை வழக்கமானவைதான். ஆனால் அதன் பின்னர் நடந்ததுதான் அசாதாரணமானது.

“எவ்வளவு நாளாக கிடார் கற்றுவருகிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கிறார் ஆட்டோ ஓட்டுநர். குஞ்ச் கரியாவுக்கு இந்தக் கேள்வியே ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் தனது ‘இரண்டாவது க்ளாஸ் இன்றுதான்’ என்று சொல்கிறார். தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் நடைபெற்ற உரையாடலிலிருந்து கிடார் பற்றிய அனைத்து விவரங்களையும் ஆட்டோ ஓட்டுநர் விலாவாரியாக அறிந்துவைத்திருக்கிறார் என்பதை அறிந்து குஞ்ச் கரியா ஆச்சரியம் கொண்டார். ஆட்டோ ஓட்டுநரிடம் தனது ஆச்சரியத்தைப் பகிர்ந்துகொண்டு அவரைப் பற்றிச் சொல்லுமாறு குஞ்ச் கரியா கேட்டுக்கொள்கிறார். ஆட்டோ ஓட்டுநரும் தனது கதையைக் கூறத் தொடங்குகிறார்.

“நான் ஒரு புரொபெஷனல் கிடாரிஸ்ட். நண்பர்களுடன் சேர்ந்து பிரபல ரெஸ்டாரண்ட்களிலும் பார்களிலும் கிடார் வாசித்திருக்கிறேன். தெருவில்கூட நாங்கள் கிடார் வாசித்துக்கொண்டு அலைந்திருக்கிறோம். ஆனால் அதெல்லாம் இப்போது அல்ல. சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் உங்களைப் போல் இளைஞராக இருந்தபோது.” ஏக்கத்துடன் சொல்கிறார் ஆட்டோ ஓட்டுநர்.

“பிறகு ஏன் கிடார் வாசிப்பதை நிறுத்தினீர்கள்?” - குஞ்ச் கரியா.

“காசுதான் காரணம். நண்பர்களும் படிக்கப் போயிட்டாங்க. எனக்கும் திருமணம் ஆயிருச்சு. கிடார் வாசிச்சுக் குடும்பத்தை ஓட்ட முடியாது என்ற நிலை வந்தது. மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இரண்டு வேளை சாப்பாடாவது போட வேண்டுமே. இசையைத் துறந்துவிட்டேன். ஆனால், எப்போதாவது அந்த ஞாபகம் வரும். இனிமையான நாட்கள் அவை” தன்னை மறந்து சொல்கிறார் ஆட்டோ ஓட்டுநரான அந்த இசைக் கலைஞர்.

இந்த உரையாடலிடையே குஞ்ச் கரியா இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. இறங்கும்போது கிடாரை வாசிக்க அனுமதி கேட்டார் அந்த இசைக் கலைஞர். பிரியத்துடன் கிடாரை அவரிடம் தந்தார். குஞ்ச் கரியா. ஷோலே படத்தின் பின்னணி இசையை கிடாரில் மீட்டுகிறார். சாலையில் விரையும் வாகனங்களின் ஒலியுடன் போட்டி போட்டு காற்றில் கலக்கும் அந்த கிடார் இசையில் தன்னை இழக்கிறார் குஞ்ச் கரியா.

தனக்கு ஒரு கிடார் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இப்போதுகூட உள்ளது என்று சொல்லும் அந்த ஓட்டுநருடைய மகன் கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்கிறாராம். எந்தச் சூழலிலும் இசையை மறக்காத அந்த ஆட்டோ ஓட்டுநர் கிடார் வாசித்ததை வீடியோ படமாக்கி அதை யூடுயூபில் அப்லோட் செய்தார். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல பல நியூஸ் சேனல்களிலும் செய்தித் தளங்களிலும் இந்த வீடியோ பகிர்ந்துகொள்ளப்பட்டது. அந்த வீடியோவை நீங்களும் பார்க்க விரும்பினால் இதோ அதன் இணைப்பு: >https://goo.gl/HLjNuh

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x