

நமது இயல்பான தருணங்களை நாமே திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சந்தோஷத்தைத் தரும். நமக்குத் தெரியாமல் நம்மை ஒருவர் படமெடுத்து அதை நம்மிடம் காட்டும்போது ஒருவித ஆச்சரியத்துடனும் சந்தோஷத்துடனும் அதை எதிர்கொள்வோம்.
இப்படி ஒருவர் அறியாமல் அவரது இயல்பான தருணங்களை ஒளிப்படமெடுக்கும் முறையை ‘கேண்டிட்’ என்பார்கள். இத்தகைய ஒளிப்படங்கள் தரும் இயல்பான சந்தோஷம் காரணமாக இப்போது திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கேண்டிட் உத்தியைப் பயன்படுத்திப் படமெடுக்கும் போக்கு உருவாகியுள்ளது.
திருமணத்தின் போது மட்டும் ஒளிப்படமெடுக்கும் காலமும் மறைந்துவிட்டது. திருமணத்துக்கு முன்னரும் பின்னரும் வெளி இடங்களுக்குச் சென்று புதிய பாணியில் ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆகவே இந்தத் துறையில் போட்டியும் அதிகரித்துவிட்டது. இதற்கு ஈடு கொடுக்க அறிமுகமானதே கேண்டிட் வெட்டிங்.
உணர்வுகளை கிளிக் செய்வேன்
இன்றைய காலத்தில் எந்தத் தம்பதியும் வெட்கப்படுவதில்லை என்று சொல்லும் அசோக் அர்ஷ் தன் தனித்துவம் விளம்பரப் படம் போல் ஒளிப்படம் எடுப்பது என்கிறார். “என்னுடைய ஒளிப்படங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்.
கேண்டிட் வெட்டிங் பாணியில் எடுக்கப்படும் ஒளிப்படம் மூலமாக இது நாங்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மணமக்களை வியப்படைய செய்துவிடுவோம்” என்கிறார் அவர். சமீபத்தில் வாலாஜாபாத் அருகில் இருக்கும் சூரியகாந்தி தோட்டத்தின் நடுவே தம்பதியை நிற்கவைத்து ஒளிப்படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறார்.
அமெரிக்காவில் மேற்படிப்பை முடித்த அமர் ரமேஷ் ஒளிப்படத் துறையின் மீதான ஆர்வம் காரணமாக வெட்டிங் ஒளிப்படக் கலைஞர்களிடம் வேலை கற்றுக்கொண்டுள்ளார். “என்னுடைய ஒளிப்படங்கள் கலை நயம் மிக்கதாகவும் சினிமா போலவும் இருக்கும்” என்கிறார் அவர்.
யதார்த்தம் மட்டுமே!
கேண்டிட் வெட்டிங் ஒளிப்படங்கள் எடுப்பதிலும் ஒவ்வொரு ஒளிப்பட கலைஞருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். எல்லாத் துறைகளிலும் படைப்புத் திறனுடன் தங்கள் காலடியைப் பதித்துவரும் பெண்கள் இந்தத் துறையிலும் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஏழு வருடம் அமெரிக்கா வங்கியில் பணிபுரிந்துவிட்டு, திருமணம் ஆன பிறகு சென்னை திரும்பிய காயத்ரி நாயர் கடந்த மூன்று வருடமாக கேண்டிட் வெட்டிங்கில் சிறந்து விளங்குகிறார்.
யதார்த்தமாகப் படம் பிடிப்பதே தன்னுடைய தனித்துவம் என்றும், எதையுமே உருவாக்கி ஒளிப்படம் எடுப்பது இல்லை என்றும் அவர் கூறுகிறார். மாமல்லபுரத்தில் கடற்கோயில் கோபுரத்தின் இடையே ஒரு தம்பதியை நிற்கவைத்து எடுத்த ஒளிப்படங்களை சிறப்பானதாகவும் அழகானதாகவும் அவர் சொல்கிறார்.
புதிய கோணங்கள்
இத்துறையில் வித்யாலட்சுமி, அக்ஷயா வைத்தியநாதன் என்ற தோழிகள் இணைந்து பங்களித்துவருகிறார்கள். கேண்டிட் வெட்டிங் மட்டுமல்லாமல் விளம்பரங்களுக்கும் இவர்கள் ஒளிப்படம் எடுத்துத் தருகிறார்கள்.
கலைநய மிக்க பின்னணியில், வெவ்வேறு கோணங்களில் மணமக்கள் நிற்கும்போது இத்தகைய கேண்டிட் பாணி ஒளிப்படங்களை எடுத்துவிடுகிறார்கள். இந்த ஒளிப்படங்களை முழுமையாக கேண்டிட் பாணி என்று சொல்லிவிட முடியாதுதான்.
ஆனாலும் இவற்றில் காணப்படும் புதுமைத் தன்மை காரணமாக இத்தகைய ஒளிப்படங்கள் பெரிதும் விரும்பப்படுகின்றன. ஒரே மாதிரியான படங்களை இப்போது யாரும் விரும்புவதில்லை. ஏதாவது புதுமையான அம்சம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒளிப்படக் கலைஞர்களும் புதுவிதமான பாணியைத் தொடர்ந்து கைக்கொண்டுவருகின்றனர். பாணியில் மட்டுமில்லாமல் தொழில்நுட்பத்திலும் அநேக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
முன் காலத்தைப் போன்ற ஃபிலிம் ரோல் கேமராக்கள் இப்போது அருங்காட்சிப் பொருளாகிவிட்டன. தினந்தோறும் புதுப் புது கேமராக்கள் சந்தையில் அறிமுகமாகின்றன. 5டி மார்க் 3 போன்ற மேம்பட்ட கேமராக்கள், வெவ்வேறு லென்ஸ்களைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வகையில் வந்துவிட்டன. ஒளிப்படத்தின் தரமும் பாணியும் வேறு தளத்துக்கு நகர்ந்துவிட்டன.