Published : 22 Jul 2016 01:00 PM
Last Updated : 22 Jul 2016 01:00 PM

பொருள்தனைப் பெற்று 23: சந்தித்ததும்...சாதித்ததும்!

இத்தொடரின் நிறைவுப் பகுதியில் உள்ளோம். இந்தியப் பொருளாதாரம், உலகளவில் பெரிதும் கவனிக்கப்படும் ஒன்றாக உருப் பெற்றுள்ளது. சில துறைகளில், தவிர்க்க முடியாத சக்தியாகவும், சில களங்களில், தீர்மானிக்கிற சக்தியாகவும், இன்னும் பல முனைகளில் வேகமாக வளர்ந்துவருகிற சக்தியாகவும் நாம் இருக்கிறோம்.

கடந்த சுமார் 70 ஆண்டுகளில், சறுக்கியது அதிகம். ஏறியது, அதை விட சற்று அதிகம். சமச்சீரான வளர்ச்சி, சில சமயங்களில் சாத்தியம் ஆயிற்று.

பல சமயங்களில் இயலாமற் போயிற்று. இதுவும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

இந்தியப் பொருளாதாரம், தவழ்ந்து, தவழ்ந்து, தத்தித் தத்தி நடந்து நடந்து, இப்போது, ஓடத் தொடங்கியுள்ளது.

இயற்கையின் சவால்

சோசலிஸம், உலகமயமாக்கல், பங்குச் சந்தை, அந்நிய முதலீடு, அந்நியச் செலாவணி, ‘கிழக்கே பார்ப்போம், மேற்கை அழைப்போம்' என்று பல வடிவங்கள். ‘மேக் இன் இந்தியா', ‘ஸ்டார்ட் அப்', ‘ஸ்மார்ட் சிட்டீஸ்' என்று பல முயற்சிகள்! இது ஒருபுறம்.

இத்தனை ஆண்டுகளில் ஏற்பட்ட நெருக்கடிகள், சவால்கள் ஏராளம். குறிப்பாய், இயற்கைப் பேரிடர்கள்! கடும் வறட்சி, சீறிப் பாய்ந்த வெள்ளம், நில நடுக்கங்கள், சுனாமிப் பேரலை என‌ இயற்கையின் சீற்றத்தால், இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதி ஒவ்வோர் ஆண்டும் மோசமாகப் பாதிக்கப்பட்டுவருகிறது.

நமது ஒட்டுமொத்த வளர்ச்சியை இது தடுக்கவே செய்கிறது. போதாக் குறைக்கு, மக்கள் தொகைப் பெருக்கம். தீரா வறுமைக்கு மூல காரணம் இதுதான் என்றாலும், தீர்வுக்கான எந்த முனைப்பும் எந்த மூலையிலிருந்தும் (மூளையில் இருந்தும்..?) வருவதாக இல்லை.

சீனாவிலும் ரஷ்யாவிலும் சாத்தியம் ஆகிற கடுமையான பல நடவடிக்கைகளை, இந்தியாவில் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. எல்லையற்ற, கட்டுப்பாடற்ற சுதந்திரம் நம் வளர்ச்சிக்கு, குறிப்பாய் வறுமை ஒழிப்புக்கு உதவுவதாக இல்லை.

அதே சமயம் பிற நாடுகளில் காணக் கிடைக்காத சாதகமான ஓர் அம்சம்தான் நமது ஆகப் பெரிய வலிமை. அதுதான், நம் மக்களின் பொறுமை, ஆதரவு, அங்கீகாரம். எந்த அரசியல், பொருளாதார நெருக்கடியிலும் இந்தியர்கள் காட்டி வருகிற அசாதாரணத் தன்னம்பிக்கையும் அசாத்தியமான உழைப்பும் நமக்குக் கிடைத்துள்ள மிகச் சிறந்த மூலதனம். இதுவே,பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக, சாமானியர்களுக்கு எதிராக, சிலர் செயல்பட ஏதுவாகிவிடுகிறது.

உயிர்ப்பு உண்டு

தனிநபர் சேமிப்பு, செலவு செய்வதில் பழமைத்தனம், கல்வியறிவுப் பெருக்கம், பெருவாரியாக உள்ள இளைஞர்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ஈவு (டெமோக்ராஃபிக் டிவிடெண்ட்), அதிகரித்துவரும் புதிய தொழில் முனைவோர், மண் சார்ந்த, மரபுத் தொழில்களின் மீது மக்களுக்கு இன்னமும் உள்ள பிடிப்பு என்று பல காரணங்களால் நமது பொருளாதாரம் உயிர்ப்புடன் இருக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

2014-15ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம். இது, 2015-16ஆம் ஆண்டில் 7.6 சதவீதமாக உயர்ந்து இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. தனிநபரின் நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம்.

உற்பத்தித் துறையில் ஏற்றம் தெரிகிறது. சேவைத் துறை வேகமாக விரிவடைந்த வண்ணமே உள்ளது. நுகர்வு விலைக் குறியீட்டின் படி, பண‌வீக்கம், 5.5 சதவீதம் என்கிற அளவில் தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

எதிர்பார்ப்புக்கு மேலாகவே அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது. 2015-16ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், நேரடி வரிகள், 10.7 சதவீதமாக‌ அதிகரித்திருக்கிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மத்தியச் சுங்க வரி, ஏப்ரல் - டிசம்பர் 2015-16ல், 90.5 சதவீதமாகக் கூடுதலாகியுள்ளது. முந்தைய ஆண்டு இதே கால கட்டத்தில், 70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, இந்த ஆண்டில் 130 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அரசின் செலவுக் கண்ணோட்டம் மாறியிருக்கிறது. உள்நாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் முதலிய மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தொழில் துறையில் குறிப்பாக மின்சாரம், எரிவாயு, சுரங்கத் தொழில் போன்ற துறைகளில் வளர்ச்சி 5 சதவீதத்திலிருந்து, ஓராண்டில் 5.9 சதவீதமாகியிருக்கிறது. அடுத்த ஆண்டில் இது, 7.35 சதவீதம் வரை உயரக் கூடும்.

பொதுவாக, கனரகத் தொழில்கள் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றன. சேவைத் துறையில் வளர்ச்சி - 7.8 சதவீதத்திலிருந்து, 10.3 சதவீதமாக‌ உயர்வு. வரும் ஆண்டுகளில் இத்துறையில்தான் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவியப் போவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

நம்பிக்கை நல்லது

எதிர்மறை வளர்ச்சியும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, வீடு கட்டுமானம், விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இத்துறை, கடந்த சில ஆண்டுகளாகத் தேய்ந்த வண்ணம் உள்ளது. வட மாநிலங்களில் மட்டும், கட்டி முடித்துத் தயாராக உள்ள வீடுகளை விற்று முடிக்க இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். ஆனாலும், வீட்டு விலை குறையவில்லை. நாட்டின் சில பகுதிகளில் வீட்டு விலை இன்னும் கூட ஏறுமுகத்திலேயே உள்ளது ஒரு விந்தைதான்.

மருத்துவச் சுற்றுலாத் துறை, சூரிய மின் உற்பத்தி போன்ற துறைகளில் நமக்கு மிக நல்ல எதிர்காலம் இருப்பதாய்ப் பரவலாக நம்பப்படுகிறது.

தனிநபர் சராசரி வருமானம் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆரோக்கியமான வளர்ச்சி கண்டு வருகிறது. விலைவாசி, குறிப்பாக மொத்த விலைக் குறியீடு, சொற்ப அளவிலேயே உயர்ந்திருக்கிறது. அந்நியச் செலாவணிக் கையிருப்பும் நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால், அந்நிய முதலீடுகள் எதிர்பார்த்த அளவுக்கு வருவதாக இல்லை. ஏதோ ஒரு தயக்கம் நீடிக்கவே செய்கிறது. ஊழல் மிகப் பெரிய பிரச்சினையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கைகளையும் கணக்கில் கொண்டால், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நமது வளர்ச்சி 7 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என்கிறது அறிக்கை. மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கிடும் முறை தொடங்கி, பல முனைகளில் உண்மைகள் திரித்துக் கூறப்படுவதாகவும் உரத்த குரல்கள் கேட்கின்றன.

மாறிமாறி வரும் அரசுகள், பொதுவாகப் பொருளாதாரத்தில் முற்றிலும் எதிர்மறையான திசையில் பயணிக்க எத்தனிக்கவில்லை. ஆனாலும், மிக ஆக்ரோஷமாக முன் எடுக்கப்பட்ட சில தீர்திருத்தங்கள், செல்வந்தர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளன. விவசாயம், நெசவு உள்ளிட்ட பாரம்பரியத் தொழில்கள், அநியாயத்துக்குப் புறக்கணிக்கப்படுகின்றன. வங்கிகளின் நிதி உதவி, ஒரு சாராருக்கு மட்டும் எளிதில் கிடைப்பதான சூழல், பெருகிவரும் லஞ்சம் என்று பல குற்றச்சாட்டுகள்!

திட்டங்களும் வளர்ச்சியும் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவற்றுக்கு எதிரான புகார்களும் உண்மை என்றுதான் பொருளாதாரப் பாடத்தை அணுக வேண்டும்.

தொடரட்டும் தேடல்

இப்போதெல்லாம், ஊடகங்களில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், உளவியல் நிபுணர்கள், விளையாட்டு விமர்சகர்கள் என்று பலரது கருத்துகள், ஆலோசனைகள் மிகப் பரவலாக இடம் பெறுகின்றன. மிக ஆரோக்கியமான வரவேற்கத் தக்க முன்னேற்றம் இது.

இவர்களின் எந்தப் படைப்பையும், அந்தந்த‌த் துறைக்கு அப்பாற்பட்டு, யாரும் பார்ப்பதில்லை. ஆனால், பொருளாதாரக் கருத்துகள் மட்டும், அரசியல் கண்ணாடி கொண்டே பார்க்கப்படுகின்றன.

பொருளாதாரம் கற்றுக்கொள்ள விரும்பும் இளைஞர்கள், இந்த வலைக்குள் சிக்கிக்கொள்ளாமல் வாசிப்பது மிக முக்கியம். ஒரு பாடமாக, ஒரு துறை சார்ந்த செய்தியாக, படித்துத் தெரிந்துகொள்வது அவசியம். முன்னேறிய நிலை (advanced level) தேர்வுகளில், செய்திகளை விடவும், கருத்துகளுக்கே அதிக மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஆகவே, பல தரப்பு வாதங்களையும் ஆழமாகப் புரிந்து கொண்டு, ஒரு நிலை எடுப்பது நல்லது.

நுண்ணியப் பொருளாதாரம் பற்றியோ, இந்தியப் பொருளாதாரத்தின் எல்லாப் பரிமாணங்களையோ நாம் முழுமையாகப் பார்த்துவிடவில்லை. ஆனால், தேவையான அளவுக்கு மிக இன்றியமையாத அடிப்படை விவரங்களை, எளிதில் புரிந்து கொள்கிற வகையில் பார்த்து வந்திருக்கிறோம்.

பொருளாதாரம், வெளியிலிருந்து பார்ப்பதற்கு மிகக் கடினம். சற்றே உள்ளே நுழைந்துவிட்டால், மேலும் மேலும் ஆர்வத்தைத் தூண்டி ஈர்க்கிற காந்தம் அது. நுழைந்து பாருங்கள். உணர்வீர்கள்.

தொடர் நிறைவுறுகிறது. தொடரட்டும் உங்கள் தேடல்.

(நிறைந்தது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x