Last Updated : 02 Mar, 2018 11:08 AM

 

Published : 02 Mar 2018 11:08 AM
Last Updated : 02 Mar 2018 11:08 AM

வானமே எல்லை!

ந்த இளம் பெண்ணுக்கு 24 வயதுதான் ஆகிறது. அதற்குள் மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கிய இந்தியாவின் முதல் பெண் போர் விமானி என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். அவர், அவனி சதுர்வேதி. இவரோடு சேர்ந்து மேலும் இரு இளம் பெண்களும், போர் விமானிகள் என்ற அந்தஸ்தைப் பெற இருக்கிறார்கள்.

பரீட்சார்த்த முறையில் கடந்த ஆண்டு 3 இளம் விமானிகளை போர் விமானப் பயிற்சிக்காக மத்திய அரசு தேர்வு செய்தது. மோகனா சிங், பாவனா காந்த், அவனி சதுர்வேதி ஆகியோர்தான் அவர்கள். இவர்கள் மூவருக்கும் ஆண்களுக்கு இணையாகப் போர் விமான பயிற்சி அளிக்கப்பட்டது. அவ்வப்போது பயிற்சியாளரின் துணையுடன் போர் விமானத்தில் பறந்துவந்த இந்த 3 இளம் பெண்களில் அவனி, சில நாட்களுக்கு முன்பு தனியாகவே மிக்-21 ரக போர் விமானத்தை இயக்கினார்.

இதன் மூலம் நாட்டின் முதல் பெண் போர் விமானி என்ற அந்தஸ்து அவருக்குக் கிடைத்தது. மோகனாவும் பாவனாவும் விரைவில் இவரைப்போல் தனியாகப் போர் விமானத்தை இயக்கவிருக்கிறார்கள்.

அவனியின் சொந்த மாநிலம் மத்தியப்பிரதேசம். பி.டெக். பட்டதாரி. கல்லூரிப் படிப்பு முடிந்ததும், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வில் வெற்றி பெற்ற அவனி, ஹைதராபாத்தில் உள்ள விமானப் படை பயிற்சி மையத்தில் சேர்ந்தார். சிறுவயதிலிருந்தே சிறகடித்துப் பறக்க வேண்டும் என்று விரும்பிய அவனி, அதனை மெய்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே விமானப் படையைத் தேர்வு செய்திருக்கிறார். விமானப் படையில் சேர்வதற்கான தேர்வில் பங்கேற்றதைக்கூட தன் அம்மாவிடம் அவனி சொல்லவில்லை. தேர்வில் வெற்றி பெற்று விமானப் படையில் சேர்வதற்கான அழைப்புக் கடிதம் வந்த பிறகே, அவனியின் கனவு நனவாகப் போகிறது என்பது அவரது அம்மாவுக்கு தெரியவந்தது.

விமானப் படையில் ஆண்களுக்கு என்னென்ன கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றனவோ, அதேபோன்றுதான் அவனி, மோகனா, பாவனா ஆகியோருக்கும் வழங்கப்பட்டன. போர் விமானத்தில் 150 மணி நேரம் பறக்கும் அனுபவம் இருந்தால் மட்டுமே, தனியாக ஒரு போர் விமானத்தை இயக்க அனுமதி கிடைக்கும். அந்த வகையில் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து மிக்-21 பைசன் சோலோ ரக விமானத்தில் தனியாகப் பயணம் செய்து சாதித்துக்காட்டியிருக்கிறார் அவனி சதுர்வேதி.

avani chathurvethi1 அவனி

24 வயதில் போர் விமானியாக உருவெடுத்திருக்கும் அவனிக்கு, இந்திய விமானப் படையில் மிக உயரிய நிலைக்கு செல்லும் மகத்தான வாய்ப்பும் காத்திருக்கிறது.

ஆனால், அதைப் பற்றியெல்லாம் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கும் அவர், உலகின் தலைசிறந்த போர் விமானங்களை இயக்கி, அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதுடன், இந்திய விமான படையின் சிறந்த போர் விமானியாக உருவாவதையே தனது லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.

“ ஒரு நாட்டு விமானப்படையின் வலிமை, அந்நாட்டுப் போர் விமானிகளின் திறமையைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும். அதற்கேற்ப உருவாவதே என்னுடைய ஆசை” - இதுதான் சாதனைப் பெண்ணாக உயர்ந்து நிற்கும் அவனி சதுர்வேதியின் வார்த்தைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x