Last Updated : 27 Apr, 2018 10:26 AM

 

Published : 27 Apr 2018 10:26 AM
Last Updated : 27 Apr 2018 10:26 AM

வெல்லுவதோ இளமை 02: விராட் எடுத்த விஸ்வரூபம்!

ன்று முக்கியமான போட்டி. ஆனால், அதற்கான அணி தேர்ந்தெடுக்கப்படவில்லை. காரணம், யாரைத் தேர்ந்தெடுப்பது, யாரை விடுவது?

இந்தியாவில் கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெற்றிபெறுகிறவர்களைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாடுவதும் இங்கேதான்; தோற்றுப்போகிறவர்களைக் கீழே தள்ளி மிதிப்பதும் இங்கேதான்.

எனவே, ஓர் இளைஞன் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறானென்றால், அவனுக்குப் பல கதவுகள் திறக்கும். நாடு முழுவதும், உலகமெங்கும் சுற்றி விளையாடலாம், திறமையாளர்களுக்கு எதிராக விளையாடலாம், ஏராளமாகச் சம்பாதிக்கலாம், கைதட்டல்கள், ‘ஆட்டோகிராஃப்’ என்று புகழில் குளிக்கலாம்.

இப்படி வெளிக்காரணங்களோடு, கிரிக்கெட் விளையாடுவதில் இருக்கும் அலாதியான மகிழ்ச்சியும் மனநிறைவும் பலரை இந்தப் பக்கம் துரத்துகிறது. சிறிய ஊர்களில்கூட, தெருவுக்குத் தெரு நூற்றுக்கணக்கான பையன்கள் கையில் பந்தோடு, தோளில் கிரிக்கெட் மட்டையோடு, ‘நானும் ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன்’ என்ற கனவோடு திரிகிறார்கள். சிற்றூர்கள், கிராமங்களிலேயே இந்த நிலை என்றால், டெல்லி போன்ற பெருநகரில் எப்படியிருக்கும்?

டெல்லியில் இல்லாத கிரிக்கெட் வசதிகளே இல்லை. மிகச் சிறந்த பயிற்சியாளர்களின் அகாடமிகள் இங்கே இருக்கின்றன. அவர்களிடம் பயிற்சிபெற்ற திறமைசாலிகள் உள்ளூர்ப் போட்டிகளில் தூள்கிளப்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், இத்தனை திறமையாளர்களில் 11 பேர்தான் ஒரு போட்டியில் விளையாட இயலும். யார் அந்தப் பதினொரு பேர்?

டெல்லியின் உள்ளூர் கிரிக்கெட் விவகாரங்களைக் கவனித்துக்கொள்ளும் அமைப்பின் பெயர் DDCA. இளைஞர்களைக் கவனித்து அவர்களில் சிறந்த திறமைசாலிகளைத் தேர்ந்தெடுக்கும் பணி இவர்களுடையது. ஒரே பிரச்சினை, அவர்கள் திறமையை மட்டும் பார்ப்பதில்லை. ‘மற்ற விஷயங்க’ளையும் கவனித்துதான் தேர்ந்தெடுத்தார்கள்.

ஆமாம், அது எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்தாம், வாரிசுகள், பரிந்துரைகள்!

ஓர் இளைஞன் நல்ல திறமைசாலியாக, உள்ளூர்ப் போட்டிகளில் அருமையாக விளையாடினால் மட்டும் போதாது. DDCA பிரமுகர்களில் ஒருவர் பரிந்துரைக்கவேண்டும். இல்லாவிட்டால் முக்கிய அணிகளில் இடமே கிடைக்காது.

இப்படிப் பரிந்துரை அடிப்படையில் திறமையில்லாத பலருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. திறமைசாலி இளைஞர்கள் வருத்தத்துடன் காத்திருக்க வேண்டியிருந்தது.

இந்தமுறை, ‘விராட்’ என்ற இளைஞன் அணியில் இடம்பெறுவான் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். சமீபத்திய பல போட்டிகளில் அவன் பிரமாதமாக விளையாடியிருந்தான். டெல்லி இளைஞர் அணியில் அவனுக்கு நிச்சயம் இடமுண்டு என்று பேசிக்கொண்டார்கள்.

விராட்டிடம் திறமை இருந்தது. ஆனால், அவனுக்காகப் பரிந்துரைக்கப் பெரிய பிரமுகர்கள் யாருமில்லை.

அதனால் என்ன? இந்தச் சிறுவயதில் இப்படிப் பிரமாதமாக விளையாடுகிற திறமை சாலியை யாராவது புறக்கணிப்பார்களா? பரிந்துரை ஏதுமில்லாமலே விராட்டுக்கு அணியில் இடம் கிடைக்கும் என்று அவனுடைய பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா எதிர்பார்த்தார்.
 

Virat-Kohli

விராட்டுக்கும் அந்த நம்பிக்கைதான். பயிற்சியில் சேர்ந்தது முதல் தன்னுடைய ஆசிரியர் சொன்னதையெல்லாம் கச்சிதமாகச் செய்திருந்தான் அவன். உள்ளூர்ப் போட்டிகளில் எந்தப் பந்துவீச்சாளரைக் கண்டும் அவன் பயந்ததில்லை. திறமையையும் உழைப்பையும் விடாமுயற்சியோடு கொட்டினால் வெற்றி நிச்சயமாக வரும் என்ற நடுத்தர வர்க்கத்தின் வழக்கமான நம்பிக்கைதான் அவனையும் செலுத்திக்கொண்டிருந்தது.

இந்த முறை டெல்லி இளைஞர் அணியில் விராட்டுக்கு வாய்ப்புக் கிடைத்துவிட்டால், படிப்படியாக இன்னும் பெரிய அணிகளுக்குச் செல்லலாம். என்றைக்காவது இந்திய அணியிலும் விளையாடலாம். அனைத்துக்கும் ஆரம்பம் இதுதான்.

ஆனால், டெல்லி இளைஞர் அணி இன்னும் தேர்வுசெய்யப்படவில்லை. மாறிமாறி விவாதங்கள்தான் வளர்ந்தன. எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இரவு எட்டுமணியானது, பத்து மணியானது, இன்னும் அணி அறிவிக்கப்படவில்லை.

இதற்கு மேல் அணியைத் தேர்ந்தெடுத்து, போட்டியைத் தொடங்குவதா? ம்ஹூம், காத்திருந்த பலரும் தூங்கப் போய்விட்டார்கள்.

நள்ளிரவு தாண்டிய பிறகு, டெல்லி அணி அறிவிக்கப்பட்டது. ஆனால், அதில் விராட்டின் பெயர் இல்லை.

அந்த அறிவிப்பைக் காத்திருந்து கேட்ட ராஜ்குமாரின் உதவியாளர் சுரேஷ் பத்ரா நொந்துபோனார். விராட்டின் இடத்தில் ஒரு பிரமுகரின் உறவுக்காரப் பையன் நுழைந்துவிட்டான்.

அதிகாலை இரண்டுமணி. சுரேஷ் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.

‘சார், நான்தான்’, எதிர்முனையில் விராட்டின் குரல். ‘அணியை அறிவிச்சுட்டாங்களா, நான் அணியில இருக்கேனா?’

தனக்கு அணியில் இடம் இல்லை என்பதை அறிந்த விராட் நொந்து போனான்.

Virat-Kohliright

விராட்டின் தந்தைக்கு வேறுவிதமான கவலை. இந்த நிராகரிப்பு ஒரு முறைதானா, ஒவ்வொரு முறையும் இதுவே தொடருமா? திறமைக்குப் பதிலாகப் பரிந்துரைகள் வென்றுகொண்டிருந்தால், விராட் கடைசிவரை உள்ளூரிலேயே சுற்றிவர வேண்டியதுதானா? திறமைக்கு இவ்வளவுதான் மரியாதையா?

இப்படி ஆயிரம் குழப்பங்கள் வந்தபோதும், ஒருவிஷயத்தில் அவர் தெளிவாக இருந்தார். விராட் லட்சத்தில் ஒருவன், இன்றைக்கு இல்லாவிட்டாலும், நாளைக்கு இந்த நிர்வாகிகள் அவனைக் கவனிக்கத்தான் வேண்டும், அங்கீகரிக்கத்தான் வேண்டும், அதுவரை அவன் உழைக்கட்டும்.

அந்த வயதில் விராட்டுக்கு இதெல்லாம் எந்த அளவு புரிந்திருக்கும்? திறமையோடு விளையாடியும் அணியில் இடம் கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் அவனை மூழ்கடித்திருக்கும்.

நல்ல வேளையாக, அவனுக்குப் பிடித்த கிரிக்கெட்டே காயத்துக்கு மருந்தானது. தொடர்ந்து திறமையோடு விளையாடுவதில் மட்டும் கவனம் செலுத்தினான். உள்ளூர்ப் போட்டிகளில் கொத்துக்கொத்தாக ரன்களைக் குவித்தான். எல்லாரும் அவனைக் கவனிக்க ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் விராட்டைக் கண்டுகொள்ளாத DDCA, விரைவில் இளைஞர் அணியில் அவனுக்கு வாய்ப்பளித்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்டு முன்னேறத் தொடங்கினான் அவன்.

இன்றைக்கு, விராட் கோலியை உலகறியும். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக, சர்வதேச அளவில் மிகச் சிறந்த மட்டைவீச்சாளர்களில் ஒருவராக, இளைஞர்களின் லட்சிய பிம்பமாகத் திகழ்கிற அவரால் ஆரம்பத்தில் இளைஞர் அணியில்கூட இடம்பிடிக்க முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா?

திறமையிருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுகிற இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் வருந்துவதும் கசப்பாக உணர்வதும் இயல்புதான். அந்தக் கசப்பைத் தாண்டி யதார்த்தமாகச் சிந்தித்து, தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தித் தொடர்ந்து உழைக்கிற எண்ணம் வரும்போதுதான் அவர்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்குத் தயாராகிறார்கள், முன்னேறுகிறார்கள். வெறுமனே புலம்பிக்கொண்டிருக்கிறவர்கள் அப்படியே துவண்டு காணாமல்போகிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் யாரோ ஒரு பிரமுகரின் பரிந்துரையின் பேரில் ஓர் இளைஞர் விராட்டை வென்றார், விராட்டுக்குப் பதில் டெல்லி இளைஞர் அணியில் இடம்பெற்றார். அந்த இளைஞர் யார்? அவர் இப்போது எங்கே? யாருக்காவது தெரியுமா?

ஆனால் விராட்டை எல்லாருக்கும் தெரியும். அதுதான் தொடர் நம்பிக்கையின் வெற்றி!

(இளமை பாயும்)
கட்டுரையாளர் தொடர்புக்கு: nchokkan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x