Published : 13 Apr 2018 11:09 AM
Last Updated : 13 Apr 2018 11:09 AM

அன்புக்கு ஐஸ்கிரீம் இலவசம்!

 

ல்லோரையும் வசப்படுத்தவே பொதுவாக இலவசங்கள் அள்ளி வீசப்படுகின்றன. ஆனால், இலவசம் வழங்குவதிலும், ‘என் வழி தனி வழி’ என்று ஐஸ்கிரீமை வாரி வழங்கிவருகிறது அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ‘பென் அண்டு ஜெர்ரி’ ஐஸ்கிரீம் நிறுவனம்.

கோடை கொடை

வருடத்தில் ஒரு நாள் இலவசமாக கோன் ஐஸ்கிரீம் விநியோகிப்பதைக் கடந்த நாற்பது ஆண்டுகளாக வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம். அப்படியாக, 2018-ம் ஆண்டுக்கான ‘ஃபிரீ கோன் டே’வைச் சில தினங்களுக்கு முன்பு கொண்டாடியது. எதற்கு இந்த இலவசம் என்று கேட்பவர்களுக்கு, “ஒரு பெட்ரோல் பங்கை ஐஸ்கிரீம் கடையாக 1978-ல் மாற்றியபோது தங்களுடைய அன்பையும் ஆதரவையும் அள்ளித் தந்த இந்த ஊர் மக்களுக்கு எங்களுடைய நன்றியை இப்படிச் செலுத்துகிறோம்” என்று பதில் அளிக்கிறது இந்நிறுவனத்தின் இணையதளம்.

இந்நாளில் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான எந்த ஐஸ்கிரீம் வகையையும் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். இதில் சுவாரசியத்தைக் கூட்ட ஒரு குட்டி விநாடி வினாவையும் நடத்தி அதன் அடிப்படையில் பிரத்யேகச் சுவைகளைத் தேர்வுசெய்யும் வாய்ப்பு இந்த ஆண்டு அளிக்கப்பட்டது. நியூயார்க்கின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள ‘பென் அண்டு ஜெர்ரி’யின் கிளைகளில் கோன் ஐஸ்கிரீம்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

டூர் போலாமா!

கடைகளை நியூயார்க் நகரில் திறந்து வைத்திருந்தாலும் ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனம் இன்றுவரை ஐஸ்கிரீம் தயாரிப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வெர்மாண்ட் மாகாணத்தில் தொடங்கிய ஒரு தொழிற்சாலையில்தான். சிறிய வளாகத்தில் இயங்கிவரும் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலைதான் 40 சதவீதம் அமெரிக்கர்களைத் தன்னுடைய ஐஸ்கிரீமால் உருக வைத்திருக்கிறது. இந்தத் தொழிற்சாலையைப் பொதுமக்கள் எந்நேரமும் பார்வையிடலாம்.

குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும் இந்த ‘ஐஸ்கிரீம் டூர்’-ன்போது ‘பென் அண்டு ஜெர்ரி’ நிறுவனத்தின் நாற்பதாண்டு காலத் தித்திக்கும் கதையை ஒரு அனிமேஷன் குறும்படமாகப் பார்க்கலாம். எட்டு நிலைகளில் எவ்வாறு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது என்பதையும் பார்வையிடலாம். அதைவிடவும் சுவாரசியமானது ‘ஃபிளேவர் கிரேவ்யார்ட்’. கடந்த காலத்தில் கைவிடப்பட்ட ஐஸ்கிரீம் சுவைகளுக்கு இங்கு நகைச்சுவை ததும்பும் வாசகங்களுடன் இடுகாடு அமைக்கப்பட்டுள்ளது.

டாலர் தேசமாக இருந்தாலும் வருடா வருடம் இந்த இலவச ஐஸ்கிரீமுக்கும் ஐஸ்கிரீம் சுற்றுலாவுக்கும் அமெரிக்க மக்கள் அலைமோதுகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் #FreeConeDay என்ற ஹேஷ் டேக்குடன் ஐஸ்கிரீம் ஒளிப்படங்கள் குவிந்துவருகின்றன.

அடடே! முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா…செலவு செஞ்சாவது நியூயார்க் போய், இலவச கோன் ஐஸ்கிரீமையும் ஐஸ்கிரீம் டூரையும் அனுபவிச்சிருக்கலாமே என்று யோசிக்கிறீர்களா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x