ஆஸ்கர் விருதுகளின் மறுபக்கம்! | ஆஸ்கர் 2026

ஆஸ்கர் விருதுகளின் மறுபக்கம்! | ஆஸ்கர் 2026
Updated on
4 min read

உலகெங்கிலும் சினிமாவுக்காக ஆயிரக்கணக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. கான் முதல் வெனிஸ் வரை பல சர்வதேசத் திரைப்பட விழாக்கள் கலைத்துவமான படைப்புகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் காத்திருக்கின்றன. ஆனால், பெரும்பாலான திரைக் கலைஞர்களின் வாழ்நாள் கனவு என்பது அந்த 13.5 அங்குலத் தங்க முலாம் பூசப்பட்ட 'ஆஸ்கர்' சிலையாகத்தான் இருக்கிறது.

1929ஆம் ஆண்டு முதல் இன்றுவரை, மாறாத வசீகரத்துடன் திகழும் இந்த ஆஸ்கர் அகாடமி விருது, ஏன் சர்வதேசத் திரைப்பட விருதுகளில் உயர்ந்த பீடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறது? அதற்குக் காரணம், உலகமே உற்றுநோக்கும் ஹாலிவுட்டின் மிகப் பெரிய கொண்டாட்டம் இது என்பதற்காக மட்டுமே அல்ல.

பல பிரிவுகளில் அதிகாரபூர்வமாகப் பரிந்துரை (நாமினேட்) செய்யப்படும் படங்கள், கலைஞர்களுடைய கலைப் பங்களிப்பின் தரம் எத்தகையது என்பதை அளவிடும் முறை இன்று வரை தனித்துவமானது. ஏனென்றால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் பணியைச் செய்வது நடுவர்கள் குழு அல்ல.

பல நாடுகளில் உள்ள 10 ஆயிரத்துக்கும் அதிகமான அகாடமி உறுப்பினர்கள், பரிந்துரை செய்யப்பட்ட படங்களைப் பார்த்து, படைப் பாக்கத்தால் தங்களை வசீகரித்த படங்களுக்கு வாக்களிக்கிறார்கள். இப்படி வாக்களிப்பு மூலம் விருதை வெல்லும் ஒரு படத்துக்கோ கலைஞருக்கோ கிடைக்கும் ஆஸ்கர் விருது மிக உயரிய அங்கீகாரமாக மாறிவிடுகிறது.

பல நாடுகளில் உருவான படங்கள் ஆஸ்கர் மேடை யைத் தொட்ட பிறகு, சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறிவிடுகின்றன. அவற்றுக்கான உலகச் சந்தை இன்னும் விரிந்துவிடுகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (மார்ச் 15) ஹாலிவுட்டின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ள 98வது ஆஸ்கர் விருது மேடையில் அங்கீகாரம் பெற வாய்ப்புள்ள படங்கள், கலைஞர்கள் குறித்துப் பார்க்கும் முன்னர், ஆஸ்கர் அகாடமி எப்படிச் செயல்படுகிறது எனப் பார்ப்போம்.

உறுப்பினர்களே நடுவர்கள்!

ஆஸ்கர் விருதுகளைத் தீர்மானிக் கும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகாடமி உறுப்பினர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள். ஆஸ்கர் அகாடமியில் (AMPAS - The Academy of Motion Picture Arts and Sciences) உறுப்பினராக இருப்பது ஒரு மிகப்பெரிய கௌரவம். சமீபகால

மாக, ஆஸ்கர் அகாடமி தனது உறுப்பினர் சேர்க்கையில் பன்முகத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்துவருகிறது.

இதன் விளைவாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் திரை ஆளுமைகள் அகாடமியில் இணைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை ஆமீர் கான், ஏ.ஆர்.ரஹ்மான், கமல்ஹாசன், மணி ரத்னம், ஷபானா ஆஸ்மி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், சூர்யா, ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரியங்கா சோப்ரா, வித்யா பாலன், கஜோல், ரிமா தாஸ், ஆயுஷ்மான் குரானா, சந்தோஷ் சிவன், எஸ்.எஸ்.ராஜமௌலி, பாயல் கபாடியா, ரவி வர்மன் தொடங்கி இந்தியா சார்பில் இந்த ஆண்டு ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம் பவுண்ட்’ படத்தின் இயக்குநர் நீரஜ் கெய்வான்வரை 60க்கும் அதிகமான கலைஞர்கள் உறுப்பின ராக உள்ளனர்.

பிரியங்கா சோப்ரா அகாடமி உறுப்பினர் என்பதைத் தாண்டி, தற்போது அகாடமி நடிகர்கள் பிரிவின் (Actors Branch) செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார். அது மட்டுமல்ல; நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் 98வது ஆஸ்கர் விருது விழாவில், ராபர்ட் டவுனி ஜூனியர், ஆனி ஹாத்வே ஆகியோருடன் இணைந்து மேடையில் விருது வழங்கும் (Presenter) ஆளுமைகளில் ஒருவராக பிரியங்கா பங்கேற்கவிருக்கிறார்.

இந்தியக் கலைஞர்கள் முக்கியத் துவம் பெற்றுவரும் ஆஸ்கர் அகாடமி யில், பல நாடுகளின் கலைஞர்கள் எப்படி உறுப்பினர்கள் ஆகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். ஏற்கெனவே உறுப்பினராக இருக்கும் இருவர் சேர்ந்து ஒரு சிறந்த கலைஞரைப் பரிந்துரைக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்படுபவர் திரைத்துறையில் செய்துள்ள வாழ்நாள் சாதனைகள் அல்லது அவர்கள் முதன்மைப் பங்களிப்பு செய்த சமீபத்திய படங்களின் உலகளாவிய தாக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்தபின், அகாடமியே அவரை உறுப்பினராகச் சேர அழைப்பு விடுக்கும்.

இப்படிப் பல நாடுகளைச் சேர்ந்த திரை, கலையுலகினர்தான் அகாடமியில் உறுப்பினர் ஆக்கப்பட்ட இந்த 10 ஆயிரம் பேர். இவர்கள் அனைவரும் ஹாலிவுட்டுக்குப் போய், படம் பார்த்து வாக்களிக்க முடியாது என்பதால், அதற்காக அகாடமி உருவாக்கியதுதான் ‘டிஜிட்டல் ஸ்கிரீனிங் ரூம்’ முறை!

அகாடமி ஸ்கிரீனிங் ரூம் (ASR)

2010ஆம் ஆண்டுக்கு முன்புவரை அகாடமி உறுப்பினர்களுக்கு ‘டிவிடி' அனுப்பி வைக்கும் முறை இருந்தது. ஆனால் இன்று உலகமே டிஜிட்டல் மயமாகிவருவதால் உறுப்பினர்கள் இருக்கும் இடத்திலிருந்தே படத்தைப் பார்ப்பதற்குப் பாதுகாப்பான ஒரு ‘ஸ்ட்ரீமிங்’ இணையதளத்தை அகாடமி உருவாக்கிவிட்டது.

அகாடமி ஸ்கிரீனிங் ரூமில் (Academy Screening Room - ASR) தகுதியை எட்டிய படங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். உறுப்பினர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப, உலகின் எந்த மூலையிலிருந்தும் உயர்தரமான 4கே தரத்தில் பாதுகாப்பான ‘வாட்டர் மார்க்’ உடன் படத்தைப் பார்ப்பார்கள். படங்களைப் பார்க்க அவர்களுக்கு 60 நாள் அவகாசம் அளிக்கப்படும்.

டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளம் இருந்தாலும், திரைப்படம் என்பதே பெரிய திரையில் பார்க்கவேண்டிய கலை என்பதில் நம்பிக்கை வைத்துள்ள அகாடமி, உறுப்பினர்கள் அதிகமுள்ள லண்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள பெரிய திரையரங்குகளில் உறுப்பினர்களுக் காகப் பிரத்யேகக் காட்சிகளை ஏற்பாடுசெய்கிறது.

ஆஸ்கர் ரேஸில் பங்கேற்கும் படங்களின் இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் கலந்து கொண்டு உரை யாடும் கேள்வி - பதில் நிகழ்ச்சிகளும் இந்தத் திரையிடல்களின் முடிவில் நடத்தப்படுகின்றன.

அகாடமி விருதுக்கான மதிப் பீட்டை எளிதாகவும் துறைசார் நம்பகத்தன்மையுடனும் பெற, தன்னுடைய உறுப்பினர்களைத் திரையுலகில் அவர்கள் இயங்கிவரும் துறை சார்ந்து மொத்தம் 19 கிளைகளாகப் (எகா: இயக்குநர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப் பாளர்கள் என) பிரித்துக்கொண்டு அந்தந்த பிரிவுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படங்களை முதலில் பார்க்கும்படி வேண்டுகோள் விடுக்கிறது அகாடமி. அதை ஏற்றுக் கொள்ளும் உறுப்பினர்கள், தங்கள் துறை சார்ந்த பரிந்துரைப் பெற்ற படங்களை மட்டுமே முதலில் பார்ப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, அகாடமி உறுப்பினர்களாக உள்ள ஒளிப்பதி வாளர்கள் முதலில் ‘சிறந்த ஒளிப்பதிவு’ என்கிற பிரிவுக்கு இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்ற படங்களை மட்டுமே பார்த்து வாக்களிப்பார்கள்.

அதேநேரம், ‘சிறந்த சர்வதேசத் திரைப்படம்’ என்கிற பிரிவுக்கு மட்டும் அனைத்துக் கிளைகளிலிருந்தும் தன்னார்வலர்களாக முன்வரும் உறுப்பினர்கள் அடங்கிய ஒரு பெரிய குழு அமைக்கப்படும். அவர்கள் இப்பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட அனைத்துப் படங்களையும் கட்டாயம் பார்த்திருக்க வேண்டும் என்கிற விதிமுறை உண்டு.

வாக்குகள் பேசும்

சிறந்த திரைப்படம் என்கிற முதல் பிரிவு நீங்கலாக, சிறந்த இயக்குநர், சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 23 பிரிவுகளின் இறுதிப் பட்டியலில் உள்ள டாப் 5 பரிந்துரைகளில், எந்தக் கலைஞருக்கு அல்லது படத்துக்கு அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் கிடைக்கிறதோ, அவரே அல்லது அந்தப் படமே விருதை வெல்ல முடியும்.

ஆஸ்கரின் மிக உயரிய விருதான ‘சிறந்த திரைப்படம்' பிரிவுக்கு மட்டும் முன்னுரிமை வாக்கு முறை (Preferential Ballot) பயன்படுத்தப் படுகிறது. இந்த முறையின்படி அப்பிரிவின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்த படங்களில் தங்களைக் கவர்ந்த படங்களை 1 முதல் 10 வரை என ‘டாப் 10’ முறையில் வரிசைப்படுத்த வேண்டும். (எகா: 1. சின்னர்ஸ், 2. ஹேம்னெட், 3. டிரைன் ட்ரீம்ஸ்).

இந்த வரிசைப்படுத்தல் முறையில் முதலிடம் பிடித்த படங்களின் வாக்கு கள் எண்ணப்பட்டு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால் அதுவே ‘சிறந்த திரைப்படம்’ என்கிற பெருமையை எட்டிவிடுகிறது. வாக்குகளை எண்ணும் பணியை ‘பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ்’ (Price water house Coopers (PwC) என்கிற தணிக்கை நிறுவனம் அகாடமிக்காக ரகசியமாகச் செய்கிறது.

இறுதி முடிவுகள் அடங்கிய கவர்கள், விழா மேடைக்கு வரும்வரை முடிவுகளின் ரகசியம் காக்கப்படுவதுடன், விருதுகள் தேர்வின் வாக்குகள் கணக்கிடப்பட்ட ‘எக்ஸெல் ஷீட்’டுகள் அகாடமியின் நிர்வாகக் குழுவுக்கு விழாவுக்குப் பின் விவரிக்கப்படும்.

சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர் போன்ற 23 பிரிவுகளுக்கு 25 ஆண்டு களுக்குப் பிறகு ‘கேஸ்டிங்’ என்கிற புதிய பிரிவு இந்த ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப் படுகிறது.

அதேபோல், சண்டைப் பயிற்சியாளர்களின் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று, ‘சிறந்த சண்டைப் பயிற்சி வடிவமைப்பு' (Best Stunt Design) என்கிற புதிய பிரிவை 2028ஆம் ஆண்டு, 100வது ஆஸ்கரில் சேர்த்து விருதுகளின் எண்ணிக்கையை 25 ஆக இறுதிசெய்ய அகாடமி திட்டமிட்டுள்ளது.

அனல் பறக்கும் 5

98ஆவது ஆஸ்கர் விருதுகளில் 24 பிரிவுகளிலும் கடும் போட்டி இருந்தாலும், ஒரு சில படங்கள் ரசிகர்கள், விமர்சகர்கள், அகாடமி உறுப்பினர்களின் கணிப்பில் முன்னிலையில் இருக்கின்றன.

1 ‘சின்னர்ஸ்’ (Sinners). 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. சிறந்த அசல் இசை (Best Original Score), சிறந்த ஒலி (Best Sound) ஆகிய பிரிவுகளில் விருதுகளை இப்படம் வெல்வது உறுதி என்கிறார்கள். ஹாரர் வகை என்பதால் சிறந்த திரைப்படத்துக்கான விருது கிடைக்க வாய்ப்பில்லாமல் போகலாம். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்ற மைக்கேல் பி.ஜோர்டன் சிறந்த நடிகருக்கான போட்டியில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.

2 ‘ஹேம்னெட்’ (Hamnet). நாடகப் பேராளுமை வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘ஹாம்லெட்’ நாடகம் உருவான பின்னணியை வைத்து அவரின் மனைவி, மகன், மகளை முதன்மைப்படுத்தும் உணர்வுகளின் தொகுப்பாக உருவாகியிருக்கும் இப்படத்தில் ஷேக்ஸ்பியரின் காதல் மனைவியாக நடித்துள்ள ஜெஸ்ஸி பக்லிக்குச் ‘சிறந்த நடிகை' விருது கிடைப்பதற்கான வாய்ப்புகள் 100% உறுதியாகிவிட்டதாக உரத்துக் கூறுகிறார்கள். மேலும், சிறந்த ஆடை வடிவமைப்பு (Best Costume Design), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (Best Production Design) ஆகிய பிரிவுகளிலும் இப்படம் முன்னிலையில் உள்ளது.

3 ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ (One Battle After Another). பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கியுள்ள இப்படம்தான் ‘சிறந்த திரைப்படம்', ‘சிறந்த இயக்குநர்' ஆகிய இரண்டு முக்கிய விருதுகளையும் தட்டிச்செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அகாடமி உறுப்பினர்களிடையே ஒரு முதிர்ந்த அரசியல் திரில்லர் படத்துக்கு இருக்கும் வரவேற்பு காரணமாகவே இந்தக் கணிப்பு, ஆஸ்கர் காய்ச்சலாக அனல் பறக்கிறது.

4 ‘மார்ட்டி சுப்ரீம்’ (Marty Supreme). 2026இன் ‘சர்ப்ரைஸ்' வெற்றியாளராக இது இருக்கலாம். இப்படத்தின் நடிகர் திமோதி சாலமே (Timothée Chalamet) சிறந்த நடிகருக்கான விருதை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையை ரசனையோடு சொன்ன விதத்துக்காக, சிறந்த தழுவல் திரைக்கதை விருதையும் இப்படம் வெல்லக்கூடும்.

5 ‘அனோரா’ (Anora). கான் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற இப்படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அசல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் ‘சின்னர்ஸ்' படத்துக்குப் பெரிய சவாலாக விளங்குகிறது.

சிறந்த சர்வதேசப் படத்துக்கான போட்டியில் நுழைய தனிப்பட்ட முறையில் தமிழ் சினிமாவிலிருந்து விண்ணப்பித்த ‘கெவி', ‘டூரிஸ்ட் ஃபேமிலி' படங்கள் மட்டுமல்ல; இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படமும் இறுதிப் பரிந்துரையில் இடம்பெறவில்லை.

- jesudoss.c@hindutamil.co.in

ஆஸ்கர் விருதுகளின் மறுபக்கம்! | ஆஸ்கர் 2026
காப்பி இருக்க பயமேன்! | சுட்ட கதை 21

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in