

ஒரு பழைய வீடு. எதிர்பாராத வகையில் நாயகன் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொண்டு விழிக்கும்போது, தந்தையின் சொத்தாக அந்த வீடு அவனுக்கு வந்துசேர்கிறது. இதுதான் சாக்கு என்று ஊரைவிட்டே ஓடும் அவன், அந்தப் பழைய வீட்டுக்குச் சென்று, தான் திருடிய பணத்தில் அதைப் புதுப்பித்து, ஒரு தங்கும்விடுதியாக மாற்றுகிறான்.
ஆனால் அங்கே தங்க வரும் அனைவரும் ஒவ்வொருவராக இறந்துபோகிறார்கள். அது ஏன் என்று பார்த்தால், அந்த வீட்டில் பேய் நடமாட்டம் இருப்பது தெரிகிறது. தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பேய்களை ஒழிக்க நினைக்கிறான். அது சாத்தியமானதா என்பது கதை.
இது கிருஷ்ணா நடிப்பில், 2014இல் வெளியாகி, பரவலாகப் பேசப்பட்ட ‘யாமிருக்க பயமே’ திரைப்படத்தின் கதை. உலகின் சிறந்த கொரிய இயக்குநர்களில் ஒருவரான கிம்-ஜீ-வூன் இயக்கி 1998இல் வெளியான அவரது முதல் படமான ‘தி க்வெய்ட் ஃபேமிலி’யின் (The Quiet Family) கதையும்கூட.