கொலைச் சேவல்: திரைப் பார்வை - நினைவில் காடுள்ள விலங்கு மனிதர்களின் கதை!

கொலைச் சேவல்: திரைப் பார்வை - நினைவில் காடுள்ள விலங்கு மனிதர்களின் கதை!
Updated on
2 min read

உலகம் இன்று நவீனத்தின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறது. சிறிய நிலப்பரப்புகள் தேசங்களாகக் கருதப்பட்ட காலம் மறைந்து, பண்பாடுகளின் கலப்பு, எல்லையற்ற சிந்தனைப் பரப்பு என மனித வாழ்வு விரிவடைந்துவிட்டது. விளைவாக, தனக்குச் சரியெனப்படுவதைத் தேர்ந்துகொள்ளும் சுயசார்பும் சுயதேர்வும் பெருகியிருப்பதன் விளைவாக மொழி, இனம், கடந்து காதலிப்பதும் சாதி கடந்த திருமணத்தின் மூலம் வாழ்க்கையில் இணைவதும் ஒரு இயல்பான நவீன அறமாக மாறியிருக்கிறது.

இந்த மறுமலர்ச்சிக்கு நேர்மாறாக, இன்னும் தற்பெருமை, செருக்கு ஆகியவற்றிலிருந்து வெளியே வரவிரும்பாத சாதியச் சமூகம் நிகழ்த்தும் 'ஆணவப் படுகொலைகள்' குறித்த புள்ளிவிவரங்கள் நம் நவீனத்தின் முகத்தில் அறைகின்றன. இத்தகையதொரு சமூகச் சிக்கலை, அதன் ரத்தமும் சதையுமான உண்மையுடன் பதிவு செய்திருக்கிறது அறிமுக இயக்குநர் வி.ஆர். துடிவாணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘கொலைச் சேவல்’.

தென் தமிழக மாவட்டங்களும் கொங்கு மண்டலமும்தான் சாதிவெறியின் ரத்தக் கறைகளுடனான நிலப்பரப்புகள் என்கிற பொதுப்புத்தியை உடைத்து, வடகிழக்கு மண்டலமான திருவண்ணாமலை மாவட்டத்திலும் சாதிய வன்மம் எவ்வளவு ஆழமாக வேர்விட்டுள்ளது என்பதை இயக்குநர் துணிச்சலாகப் படம் பிடித்துள்ளார்.

குறிப்பாக, நாட்டார் தெய்வ வழிபாட்டில் கிராமங்களில் உறையும் பல பெண் தெய்வங்களின் வரலாற்றுக்குப் பின்னால் ஒரு சாதி ஆணவக் கொலை மறைந்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையை, படத்தில் அவர் சித்தரிக்கும் ‘நிறைசூலி’ தெய்வத்தின் குறியீடு வழியாகப் பட்டவர்த்தனப்படுத்தியிருக்கிறார். காலந்தோறும் இந்தச் சமூகம் சாதியின் பெயரால் புதிய புதிய 'நிறைசூலி'களை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்பதை, கதையின் பின்பகுதியை நிறைசூலியின் வழிபாட்டிடத்தில் நிகழச் செய்ததன் மூலம் ஒரு தீர்க்கமான அறச்சீற்றத்தை இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு ஊரைவிட்டு ஓடிப்போன காதலர்கள் காளியும் (கலையரசன்) - அனுவும் (தீபா பாலு). இப்போது அனு ஒரு நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். பெற்றோரும் சுற்றமும் தாங்கள் இல்லாத நாள்களின் வெறுமையை உணர்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன் அவர்கள் இனி பாதுகாப்பு அரணாக இருப்பார்கள் என நம்பி தங்கள் சொந்த கிராமத்துக்கு திரும்புகிறார்கள். ஆனால், காடும், மலையும் சமவெளியும் கலந்த அந்த நிலப்பரப்பில் வாழும் சாதிய மனிதர்கள் ‘நினைவில் காடுள்ள மிருக’ங்களாகவே வாழ்கிறார்கள் என்பதை அறிய மறந்துபோகிறார்கள். பிரிவு மனிதர்களை மாற்றியிருக்கும் என்கிற அவர்களின் அந்த 'குருட்டு நம்பிக்கை'யைச் சிதைப்பதே படத்தின் கதை.

ஆரோக்கியமாகக் குழந்தை பிறக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு, நிறைசூலிக்கு நேர்ந்துவிட்ட சேவலை அவள் கோயில் கொண்டுள்ள வனத் தளத்தில் பலியிட்டு, பொங்கல் வைத்து வழிப்பட்டுத் திரும்ப காளியின் குடும்ப்ப காட்டுப் பகுதிக்கு டிராக்டர் வாகனத்தில் முன்னால் செல்கிறது. காளியும் அனுவும் இரு சக்கர வாகனத்தில் பின்னால் போய் சேர்கிறார்கள். அந்தக் குலதெய்வ வழிபாடு எப்படி நடந்தது என்பதுதான் கதை.

ஒரு குறும்படத்துக்குரிய உள்ளடக்கமாக இருந்தாலும் திரைக்கதையை ஒளிப்பதிவு வழியாக எழுதியிருக்கிறார் இயக்குநர். பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு, திருவண்ணாமலையின் நிலப்பரப்பில் ஒளிந்திருக்கும் அந்தப் பூடகமான வன்மத்தைப் பதிவு செய்திருக்கும் நிலவெளியை திரையரங்கில் அதைக் காணும்போது மட்டுமே அதன் மர்மத்தை உணரமுடியும்.பெரும்பாலும் ‘God’s view’ என்கிற பறவை கோணத்தை, நெருக்கடியில் இருக்கும் மனிதர்களின் நகர்வுகளை, அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தப்பிச் செல்வதை அல்லது இடம் பெயர்வதை கூர்ந்து கவனிக்க பயன்படுத்தும் ஒரு கோணம்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வனத்தில் நடப்பதால், வனத்தின் அடர்த்தியையும் மனிதர்களின் நகர்வுகளையும் பலமுறை பறவை கோணங்களில் காட்டுவது சற்று அயர்ச்சியைத் தந்தாலும் கதை ஒளித்து வைத்திருக்கும் ரத்தக் கவிச்சி திரையரங்கு எங்கும் கொடிய வன்முறையின் நெடியாக ஒளிப்பதிவு வழியே பரவ வைக்கிறது ஒளிப்பதிவு.

கலையரசன் ஒரு பாதுகாப்பான கணவனாகவும், தன் வேர்கள் மீதான நம்பிக்கையை விடாத இளைஞனாகவும் மிக எதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தீபா பாலு ஒரு கர்ப்பிணியின் தவிப்புகளைத் தன் கண்கள் வழியே நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் அவரது நடிப்பு கலையரசனைவிட நன்றாக வெளிப்பட்டுள்ளது. சாந்தனின் இசை, படம் முழுக்க ஒருவித அமைதியான திகிலை நிலைநிறுத்தி, இறுதியில் ஒரு பெரும் அதிர்வைக் கொடுத்து முடிகிறது.

சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் இன்று எழுப்பும் 'ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம்' என்கிற கோரிக்கை எவ்வளவு அவசரமானது என்பதை ‘கொலைச் சேவல்’ மவுன சாட்சியாக வலியுறுத்துகிறது.

கொலைச் சேவல்: திரைப் பார்வை - நினைவில் காடுள்ள விலங்கு மனிதர்களின் கதை!
கெணத்தக் காணோம்: திரைப் பார்வை - கேட்டது தண்ணீர்... கிடைத்ததோ தீர்த்தம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in